பொன்முடிக்கு அமைச்சராகப் பதவிப் பிராமணம் செய்துவைக்க முடியாது: ஆளுநர் ஆர்.என்.ரவி

By SG Balan  |  First Published Mar 17, 2024, 9:04 PM IST

பொன்முடிக்கு அமைச்சராகப் பதவிப் பிராமணம் செய்துவைக்க முடியாது என்று ஆளுநர் ஆர்.என்.ரவி தமிழக அரசுக்கு பதில் கடிதம் அனுப்பியுள்ளார்.


சொத்துக்குவிப்பு வழக்கில் பொன்முடி குற்றவாளி இல்லை என்று நீதிமன்றம் கூறாத காரணத்தால் அவருக்கு அமைச்சராகப் பதவிப் பிராமணம் செய்துவைக்க முடியாது என ஆளுநர் ஆர்.என்.ரவி தமிழக அரசுக்கு பதில் கடிதம் அனுப்பியுள்ளார். உச்ச நீதிமன்றம் தண்டனையை நிறுத்தி வைத்திருக்கிறதே தவிர, குற்றவாளி இல்லை என்று கூறவில்லை என்றும் ஆளுநர் தனது பதிலில் சுட்டிக்காட்டி இருக்கிறார்.

தமிழ்நாடு முன்னாள் அமைச்சர் பொன்முடி மீதான சொத்துக்குவிப்பு வழக்கில் அவருக்கு உயர்நீதிமன்றம் 3 ஆண்டுகள் சிறை தண்டனை விதித்தது. இதற்கு எதிராக உச்ச நீதிமன்றத்தில் தொடரப்பட்ட மேல்முறையீட்டில், உயர் நீதிமன்றத்தின் தீர்ப்புக்கு இடைக்காலத் தடை விதிக்கப்பட்டுள்ளது.

Latest Videos

undefined

இதனையடுத்து, சட்டப்பேரவைச் செயலகம் வெளியிட்ட அதிகாரபூர்வ அறிவிப்பின்படி, அவர் மார்ச் 13ஆம் தேதி முதல் மீண்டும் திருக்கோவிலூர் தொகுதி சட்டமன்ற உறுப்பினராகத் தொடர்கிறார்.

இதன் தொடர்ச்சியாக பொன்முடியை மீண்டும் அமைச்சராக்க தமிழக அரசு முடிவு செய்த்து. இதற்காக பொன்முடிக்கு அமைச்சராகப் பதவிப் பிரமாணம் செய்து வைக்க வேண்டும் என முதல்வர் மு.க.ஸ்டாலின் ஆளுநர் ஆர்.என்.ரவிக்கு மார்ச் 13ஆம் தேதி கடிதம் எழுதினார்.

ஆனால் கடிதம் கிடைத்த மறுநாள் ஆளுநர் ரவி மூன்று நாள் பயணமாக டெல்லி புறப்பட்டுச் சென்றார். இதனால் ஆளுநர் சனிக்கிழமை சென்னை திரும்பியதும் பொன்முடி அமைச்சராகப் பதவியேற்க வாய்ப்பு இருப்பதாகக் கூறப்பட்டது. சபாநாயகர் அப்பாவுவும் ஆளுநர் டெல்லியில் இருந்து வந்தவுடன் பொன்முடியின் பதவிப் பிரமாணம் நடக்கும் என்று கூறியிருந்தார்.

இச்சூழலில், பொன்முடியை அமைச்சராக்க முடியாது என்று ஆளுநர் பதில் அளித்திருப்பது சர்ச்சையைக் கிளப்பியுள்ளது. ஆளுநரின் இந்த முடிவை எதிர்த்து தமிழக அரசு தரப்பில் நீதிமன்றத்தை நாட வாய்ப்பு இருப்பதாகக் கூறப்படுகிறது.

சனிக்கிழமை மாலை நாடாளுமன்றத் தேர்தல் அறிவிப்புக்குப் பின், சென்னையில் செய்தியாளர்களைச் சந்தித்த மாநிலத் தேர்தல் ஆணையர் சத்யபிரதா சாஹூ, பொன்முடி அமைச்சராகப் பதவியேற்பது குறித்து தலைமைத் தேர்தல் ஆணையம் தான் முடிவு செய்யும் என்று தெரிவித்தார். இதனால் பொன்முடி மீண்டும் அமைச்சர் ஆவது கேள்விக்குறியாகி இருக்கிறது.

click me!