பொன்முடி சரணடைவதில் இருந்து விலக்கு: மனுவை விசாரணைக்கு ஏற்ற உச்ச நீதிமன்றம்!

Published : Jan 12, 2024, 02:52 PM IST
பொன்முடி சரணடைவதில் இருந்து விலக்கு: மனுவை விசாரணைக்கு ஏற்ற உச்ச நீதிமன்றம்!

சுருக்கம்

பொன்முடி மற்றும் அவரது மனைவியாகிய இருவரும் சரணடைவதில் இருந்து விலக்கு அளித்து உச்ச நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது

தமிழ்நாட்டின் உயர்கல்வித்துறை அமைச்சராக இருந்த பொன்முடி, அவரின் மனைவி விசாலாட்சி மீது வருமானத்துக்கு அதிகமாக சொத்து சேர்த்ததாக லஞ்ச ஒழிப்புத்துறை 2011ஆம் ஆண்டு வழக்கு தொடர்ந்தது. அதில், 2006 முதல் 2011ஆம் ஆண்டு வரை உயர் கல்வித்துறை அமைச்சராக பதவி வகித்தபோது பொன்முடி, விசாலாட்சி ஆகியோர் வருமானத்துக்கு அதிகமாக ரூ1,72,63,468 கோடி சொத்து சேர்த்ததாக குற்றம் சாட்டப்பட்டிருந்தது.

இந்த வழக்கை விசாரித்த சிறப்பு நீதிமன்றம், லஞ்ச ஒழிப்புத்துறை குற்றச்சாட்டுக்கு ஆதரம் இல்லை எனக் கூறி இருவரையும் 2016ஆம் ஆண்டு விடுதலை செய்தது. இந்தத் தீர்ப்பை எதிர்த்து 2017ஆம் ஆண்டு லஞ்ச ஒழிப்புத்துறை சென்னை உயர் நீதிமன்றத்தில் மேல்முறையீடு செய்தது.

இந்த வழக்கு உயர் நீதிமன்ற நீதிபதி ஜெயச்சந்திரன் முன்பு விசாரிக்கப்பட்டு வந்த நிலையில், அண்மையில் தீர்ப்பளிக்கப்பட்டது. அதில், சொத்துக்குவிப்பு வழக்கில் பொன்முடி, அவரது மனைவி ஆகியோருக்கு 3 ஆண்டுகள் சிறை தண்டனையும், தலா ரூ. 50 லட்சமும் அபராதம் விதித்து உத்தரவிடப்பட்டது. மேலும், பொன்முடி, அவரது மனைவிக்கு விதிக்கப்பட்ட தண்டனையை எதிர்த்து மேல்முறையீடு செய்வதற்காக 30 நாட்கள் அவகாசம் அளித்து தண்டனையை நிறுத்தி வைத்தும் உத்தரவிடப்பட்டது.

சொத்துக்குவிப்பு வழக்கில் 3 ஆண்டுகள் சிறைத்தண்டனை விதிக்கப்பட்டதால், அமைச்சர் பதவியையும், எம்.எல்.ஏ. பதவியையும் பொன்முடி இழந்துள்ளார். தொடர்ந்து, பொன்முடிக்கு 3 ஆண்டுகள் சிறை தண்டனை வழங்கிய சென்னை உயர் நீதிமன்ற தீர்ப்பை எதிர்த்து பொன்முடி சார்பில் உச்ச நீதிமன்றத்தில் மேல்முறையீடு செய்யப்பட்டது. சரணடையாமல் மேல்முறையீடு வழக்கை விசாரிக்கவும் அந்த மனுவில் அனுமதி கோரப்பட்டிருந்தது.

அயோத்தி ராமர் கோயில் கும்பாபிஷேகம்: சீதைக்கு 196 அடி பிரம்மாண்டமான சேலை!

இந்த மனு மீதான விசாரணை உச்ச நீதிமன்றத்தில் இன்று வந்தது. அப்போது, பொன்முடி தாக்கல் செய்த மனுவை விசாரணைக்கு அனுமதித்த உச்ச நீதிமன்றம், பொன்முடி மற்றும் அவரது மனைவி இருவரும் சரணடைவதில் இருந்து விலக்கு அளித்தும் உத்தரவிட்டது.

பொன்முடி தொடர்ந்துள்ள மேல்முறையீட்டு வழக்கில், குற்றவாளி என அறிவிக்கப்பட்ட உத்தரவுக்கு எதிராக உச்ச நீதிமன்றத்தில் தடை பெற்றால் மட்டுமே சட்டமன்ற உறுப்பினராக தொடர முடியும் என்பது குறிப்பிடத்தக்கது.

PREV
Read more Articles on
click me!

Recommended Stories

SIR படிவங்களை சமர்ப்பிக்க இன்றே கடைசி நாள்..!
இரண்டு ரெய்டுக்கு பயந்து அதிமுகவை அமித்ஷாவிடம் அடமானம் வைத்த இபிஎஸ்! நீயெல்லாம் பேசவே கூடாது.. அமைச்சர் ரகுபதி