கோயில் பணியாளர்களுக்கு அகவிலைப்படி உயர்த்தி வழங்கப்படுவதோடு பொங்கல் கருணைக் கொடையாக ரூபாய் 3,000/- வழங்கப்படும். - முதல்வர் ஸ்டாலின் அறிவிப்பு.
திருக்கோயில் பணியாளர்களுக்கு அகவிலைப்படி உயர்த்தி வழங்கப்படுவதோடு பொங்கல் கருணைக் கொடையாக ரூபாய் 3,000/- வழங்கப்படும் தமிழ்நாடு முதலமைச்சர் ஸ்டாலின் அறிவிப்பு வெளியிட்டுள்ளார்.
தமிழக அரசு இன்று வெளியிட்டுள்ள அறிக்கையில், ‘திருக்கோயில்களின் மேம்பாட்டிற்கும், திருக்கோயில் சொத்துக்களைப் பாதுகாக்கவும், பக்தர்களுக்குத் தேவையான அடிப்படை வசதிகளை மேம்படுத்தவும், திருக்கோயில் பணியாளர்களின் வாழ்வாதாரத்தை மேம்படுத்தவும் இந்த அரசு பல்வேறு திட்டங்களை செயல்படுத்தி வருகிறது.
இதையும் படிங்க..Pongal 2023 : பொங்கல் தினத்துக்கு இத்தனை நாள் விடுமுறையா? கூடுதலாக 2 நாட்கள் லீவ் கிடைக்குமா?
அந்த வகையில், ஓய்வு பெற்ற அர்ச்சகர்கள், பட்டாச்சாரியார்கள், இசைக் கலைஞர்கள் போன்றவர்களுக்கு வழங்கப்பட்டு வந்த ஓய்வூதியம் ரூ.1,000/-த்தை ரூ.3,000/- ஆக உயர்த்தியும், கிராமக் கோயில் பூசாரிகளுக்கான ஓய்வூதியம் ரூ.3,000/-த்தை ரூ.4,000/- ஆக உயர்த்தியும் வழங்க ஆணையிடப்பட்டது. திருக்கோயிலில் பக்தர்கள் முடி காணிக்கை செலுத்துவதற்கான கட்டணம் விலக்களித்து, அப்பணியை மேற்கொள்ளும் நபர்களுக்கு மாதந்தோறும் ரூ.5,000/- ஊக்கத்தொகை வழங்கப்பட்டு வருகிறது.
திருக்கோயில் அர்ச்சகர்கள் மற்றும் இதர பணியாளர்களுக்கு பொங்கல் திருநாளை முன்னிட்டு இரண்டு இணை புத்தாடைகள் வழங்கப்பட்டு வருகிறது. தற்போது அரசுப் பணியாளர்களுக்கு அகவிலைப்படி உயர்த்தி வழங்கப்பட்டுள்ளதைத் தொடர்ந்து, இந்து சமய அறநிலையத்துறையின் கட்டுப்பாட்டிலுள்ள ரூபாய் ஒரு இலட்சம் மற்றும் அதற்கு மேல் ஆண்டு வருவாய் வரப்பெறும் திருக்கோயில்களில் பணிபுரிந்து வரும் நிரந்தர பணியாளர்களுக்கு 01.01.2023 முதல் அகவிலைப்படியை 34 விழுக்காட்டிலிருந்து, 38 விழுக்காடாக உயர்த்தி வழங்க மாண்புமிகு தமிழ்நாடு முதலமைச்சர் அவர்கள் உத்தரவிட்டுள்ளார்கள்.
இதையும் படிங்க..TN Assembly 2023: கொடநாடு சர்ச்சை முதல் ஆளுநரே வெளியேறு வரை.. சட்டப்பேரவையில் நடந்த தரமான 10 சம்பவங்கள் இதோ!!
இதன் மூலம், சுமார் 10,000 திருக்கோயில் பணியாளர்களின் வாழ்வாதாரம் மேம்படும். இதனால், ஆண்டொன்றுக்கு ரூபாய் 7 கோடி கூடுதல் செலவினம் ஏற்படும். மேலும், அரசுப் பணியாளர்களுக்கு பொங்கல் திருநாளை முன்னிட்டு சிறப்பு மிகை ஊதியம் வழங்கப்படுவதுபோல், இந்து சமய அறநிலையத்துறையின் கட்டுப்பாட்டில் உள்ள திருக்கோயில்களில் பணியாற்றும் முழுநேரம், பகுதிநேரம், தொகுப்பூதியம், தினக்கூலி பணியாளர்கள் உள்ளிட்ட அனைத்து பணியாளர்களுக்கும் ரூ.2,000/- ஆக வழங்கப்பட்டு வந்த பொங்கல் கருணைக்கொடை இவ்வாண்டில் ரூ.3,000/- ஆக உயர்த்தி வழங்கிட மாண்புமிகு தமிழ்நாடு முதலமைச்சர் அவர்கள் உத்தரவிட்டுள்ளார்கள்.
இதனால், இவ்வாண்டு ரூ. 1.5 கோடி கூடுதல் செலவினம் ஏற்படும். இந்த அறிவிப்புகள் திருக்கோயில் பணியாளர்களுக்கு மகிழ்ச்சியை அளிப்பதோடு, தமிழர் திருநாளாம் பொங்கல் பண்டிகையை அவர்தம் குடும்பத்தாரோடு உற்சாகமாக கொண்டாடிட வழிவகை ஏற்படுத்தும்’ என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.
இதையும் படிங்க..தமிழகத்தின் தலைமகன் பொய் சொல்ல முடியுமா? எல்லாமே அவங்க நாடகம்.! திமுகவை வெளுத்து வாங்கிய பாஜக அண்ணாமலை