
மதுரை மாவட்டம், திருப்பரங்குன்றம் தாலுகா, அவனியாபுரத்தில் தை முதல்நாளன்று ஜல்லிக்கட்டு போட்டி நடைபெறுவது வழக்கம். இந்நிலையில் இந்தாண்டு நடைபெற உள்ள ஜல்லிக்கட்டு போட்டிக்காக அவனியாபுரம் திருப்பரங்குன்றம் சாலையில், பந்தக்கால் நடப்பட்டது. இதைத்தொடர்ந்து வாடிவாசல் அமைக்கும் பணி தற்போது தொடங்கியுள்ளது. ஜல்லிக்கட்டு போட்டியில் பங்குகேற்கும் மாடுபிடி வீரர்களுக்கு, அவனியாபுரம் அரசு ஆரம்ப பள்ளியில் இன்னும் சில தினங்களில் மருத்துவப் பரிசோதனை நடைபெற உள்ளது. கொரோனா பரவல் அதிகரித்துள்ள நிலையில் தமிழக அரசு பல கட்டுப்பாடுகளை விதித்துள்ளது. இந்நிலையில், மதுரை மாவட்டத்தில் ஜல்லிக்கட்டு போட்டி நடைபெறுமா என்ற கேள்வி ரசிகர்கள் இடையே ஏற்பட்டுள்ளது.
இந்நிலையில், மதுரை அவனியாபுரத்தில் ஜல்லிக்கட்டு போட்டிக்கான பணிகளை மாவட்ட நிர்வாகம் தீவிரமாக மேற்கொண்டுள்ளது. இதனால் ஜல்லிக்கட்டு ரசிகர்கள் மகிழ்ச்சி அடைந்துள்ளனர். தமிழகத்தில் கடந்த மே மாதம் உச்சத்தில் இருந்த கொரோனா பாதிப்பு பின்னர் சற்று குறைந்தது. இந்த நிலையில் மீண்டும் கொரோனா பாதிப்பு அதிகரித்து வருகிறது.கடந்த வாரம் தமிழகத்தில் கொரோனா பாதிப்பு தினசரி 600 என்ற அளவுக்கு இருந்தது. இதனால், பொதுமக்களும் இயல்பு வாழ்க்கைக்கு திரும்பினர். ஆனால் தமிழகத்தில் கடந்த ஒரு வாரமாக கொரோனா தொற்று பாதிப்பு படிப்படியாக அதிகரிக்க தொடங்கியுள்ளது. ஒரு நாள் கொரோனா பாதிப்பு 4000 ஐ தாண்டியுள்ளது. இதை அடுத்து முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் ஜனவரி 10 ஆம் தேதி வரை ஊரடங்கை நீட்டித்து பல்வேறு கட்டுபாடுகளை விதித்து உத்தரவிட்டிருந்தார்.
அந்த வகையில் தமிழ்நாட்டில் இரவு நேர ஊரடங்கு மற்றும் ஞாயிற்றுக்கிழமை முழு ஊரடங்கு அறிவிக்கப்பட்டுள்ளது. கடைகள், வணிக வளாகங்கள், தியேட்டர்கள் 50 சதவீதம் வரை இயங்க அனுமதி அளிக்கப்பட்டுள்ளது. பொங்கல் பண்டிகை நெருங்கி வரும் நேரத்தில் ஊரடங்கு அறிவிக்கப்பட்டுள்ளதால், அரசு சார்பில் அறிவிக்கப்பட்ட பொங்கல் நிகழ்ச்சிகள் நடத்தப்படுமா என்ற சந்தேகம் இருந்த நிலையில், தற்போது அனைத்து அரசு மற்றும் தனியாரால் நடத்தப்படும் பொங்கல் மற்றும் கலை விழாக்கள் ஒத்திவைக்கப்படுகிறது என்று தமிழ்நாடு அரசு கூறியுள்ளது. இதற்கிடையே கொரோனா பாதிப்பு அதிகரித்து வருவதால் ஊரடங்கு பிறபிக்கப்பட்டுள்ள நிலையில் பொங்கலுக்கு ஜல்லிகட்டு போட்டி நடைபெறுமா என்ற கேள்வி எழுந்தது.
இந்த நிலையில் ஜல்லிக்கட்டு போட்டியை பார்வையாளர்கள் இன்றி நடத்த தமிழ்நாடு அரசு திட்டமிட்டுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. போட்டியில் பங்கேற்பவர்கள் மற்றும் பலர் இரண்டு டோஸ் தடுப்பூசி செலுத்தி கொள்பவகள் மட்டுமே அனுமதிக்கப்படுவார்கள் என்பன உள்ளிட்ட சில கட்டுப்பாடுகளுடன் ஜல்லிக்கட்டு நடத்தப்படும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது. முன்னதாக ஜல்லிக்கட்டு போட்டியில் நாட்டு மாடுகள் மட்டும்தான் அனுமதிக்கப்படும் என அமைச்சர் பி. மூர்த்தி தெரிவித்திருந்தார். இதனிடையே மதுரை அவனியாபுரத்தில் ஜல்லிக்கட்டு போட்டிக்காக வாடிவாசல் அமைக்கும் பணிகள் தீவிரமாக நடைபெற்று வருகிறது.