
`திருநின்றவூர் பெரிய ஏரியின் கரையை பலப்படுத்தக் கோரி மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட், இந்திய ஜனநாயக வாலிபர் சங்கம், பகுஜன் சமாஜ் கட்சியினர், மாதர் சங்கத்தினர் ஆகியோர் ஏரியில் தூர்வாரும் போராட்டத்தில் ஈடுபட்டனர்.
திருவள்ளூர் மாவட்டம், திருநின்றவூர் பேரூராட்சியில் பெரியார் நகர், முத்தமிழ் நகர், சுதேசி நகர், கன்னிகாபுரம் போன்ற பகுதிகளில் குடிசைமாற்று வாரிய குடியிருப்புகளில் 10 ஆயிரத்துக்கும் மேற்பட்டோர் வசிக்கின்றனர்.
இப்பகுதிக்கு அருகில் 835 ஏக்கர் பரப்பளவில் “பெரிய ஏரி: ஒன்று உள்ளது. கடந்த 40 ஆண்டுகளாக இந்த ஏரி தூர்வாரப்படவும் இல்லை, உபரி நீரை வெளியேற்றும் கால்வாய்கள் உடைந்த நிலையில் இருந்தும் சீரமைக்கப்படவும் இல்லை.
கடந்த 2005 மற்றும் 2015-ஆம் ஆண்டுகளில் பெய்த பலத்த மழையின்போது, ஏரியில் தேங்கிய வெள்ள நீர் வெளியேற முடியாமல் குடியிருப்புகளுக்குள் புகுந்ததால் நிறைய உயிர்சேதம் ஏற்பட்டதோடு, மக்கள் உடைமைகளை இழந்து கடும் பாதிப்புக்கும் உள்ளானார்கள்.
ஏரியை தூர்வாரி பராமரிக்க வேண்டும் என அப்பகுதி மக்கள் பலமுறை மாவட்ட ஆட்சியர் உள்பட அனைத்துத் துறை அதிகாரிகளுக்கு மனு அளித்தும் எவ்வித நடவடிக்கையும் எடுக்கப்படவில்லை.
இந்த நிலையில், இந்திய ஜனநாயக வாலிபர் சங்கத்தின் மாவட்டத் தலைவர் தேவா, பகுஜன் சமாஜ் கட்சியின் மாவட்டத் தலைவர் அன்புச்செழியன் ஆகியோர் தலைமையில் பெரிய ஏரியில் தூர்வாரும் போராட்டம் நடைப்பெற்றது.
இதனைத் தொடர்ந்து, ஆவடி வட்டாட்சியர், பொதுப்பணித்துறை அதிகாரிகள் போராட்டக்காரர்களை அழைத்துப் பேச்சுவார்த்தை நடத்தினர். அப்போது, “ஒரு மாதத்திற்குள் ஏரியை தூர்வார உரிய நடவடிக்கை எடுக்கப்படும்” என உறுதியளித்ததைத் தொடர்ந்து போராட்டம் கைவிடப்பட்டது.
இதில், இந்திய ஜனநாயக வாலிபர் சங்கத்தின் பகுதிச் செயலாளர் பாலா, மாதர் சங்க நிர்வாகிகள் கெஜலட்சுமி, பச்சையம்மாள், மார்க்சிஸ்ட் கட்சியின் பூந்தமல்லி ஒன்றியச் செயலாளர் வி.அறிவழகன், மாவட்டக் குழு உறுப்பினர் ஜெ.ராபர்ட் எபிநேசர், பகுஜன் சமாஜ் மாநில பொதுச்செயலாளர் பெரியார் அன்பன் உள்பட பலர் பங்கேற்றனர்.