
சென்னை உயர்நீதிமன்றத்தில் நீதிபதியாக பணியாற்றி பின்னர் மேற்குவங்க மாநிலம் கொல்கத்தா உயர்நீதிமன்றத்திற்கு பணி மாற்றம் செய்யப்பட்டவர் நீதிபதி கர்ணன்..
தமிழகத்தைச் சேர்ந்தவரான நீதிபதி கர்ணன் சென்னை நீதிமன்றத்தில் பணியாற்றிய போது தலைமை நீதிபதி பிறப்பித்த உத்தரவை தனி வழக்காக எடுத்து அதிர்ச்சி கூட்டியவர்.
இதனைத் தொடர்ந்து அவர் கொல்கத்தா உயர்நீதிமன்றத்திற்கு பணி மாற்றம் செய்யப்பட்டார். அப்போது பல்வேறு சர்ச்சைக்குரிய கருத்துக்களை அவர் தொடர்ந்து கூறி வந்ததால் உச்சநீதிமன்றம் தாமாகவே முன்வந்து இவர் மீது அவமதிப்பு வழக்கை தொடர்ந்தது.
இருமுறை நீதிமன்றத்தில் கர்ணன் ஆஜராகாததால் ஜாமீனில் வெளிவரக் கூடிய பிடிவாரண்ட் பிறப்பிக்கப்பட்டது. இருப்பினும் விசாரணைக்கு ஆஜராகமல், உச்சநீதிமன்றத்தின் 7 நீதிபதிகளுக்கு எதிராக பல்வேறு கருத்துகளை தெரிவித்ததால், கர்ணனின் மனநிலையை பரிசோதனை செய்யும் படி உச்சநீதிமன்றம் உத்தரவிட்டது.
ஆனால் யாரும் எதிர்பாராத வகையில் உச்சநீதிமன்ற நீதிபதிகள் 7 பேருக்கும் மனநிலை பரிசோதனை செய்ய கர்ணன் உத்தரவிட்டார். உச்சநீதிமன்ற நீதிபதிகளுக்கு எதிராக உயர்நீதிமன்ற நீதிபதியான கர்ணன் பிறப்பித்த இந்த உத்தரவு நாடு முழுவதும் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியது. இதன் எதிரொலியாக அவருக்கு 6 மாத காலம் சிறைத்தண்டனை விதிப்பதாக உச்சநீதிமன்றம் அதிரடியாக உத்தரவிட்டது.
இதனை எதிர்த்து குடியரசுத் தலைவர், பிரதமர் மோடி, மக்களவை சபாநாயகர் உள்ளிட்டோருக்கு நீதிபதி கர்ணன் கடிதம் எழுதினார். அதில் தனக்கு விதிக்கப்பட்ட சிறைத்தண்டனையை ரத்து செய்யும்படி வலியுறுத்தி இருந்தார். இருப்பினும் கர்ணனின் கோரிக்கை ஏற்கப்படவில்லை.. இதனையடுத்து அவர் தலைமறைவாகினார்.
இந்தச் சூழலில் நீதிபதி கர்ணன் நேற்று ஓய்வு பெற்றுள்ள நிலையில், அவரைக் கைது செய்ய ஒத்துழைக்கும்படி மேற்குவங்க டி.ஜி.பி. தமிழக அரசை வலியுறுத்தி இருந்தார்.
இதற்கிடையே நீதிபதி கர்ணன் இன்று மாலை சென்னையில் பத்திரிகையாளர்களை சந்திக்க உள்ளதாகத் தகவல் வெளியாகி உள்ளது. இதனையொட்டி பத்திரிகையாளர் மன்றத்தில் போலீசார் குவிக்கப்பட்டுள்ளனர்.