
பொதுமக்களை காக்க வேண்டிய போலீசாரே சில சமயம் அத்து மீறும்போது சாதுமிரண்டால் காடு கொள்ளாது எனபது போல் பொதுமக்கள் கொந்தளிக்கின்றனர். நேற்று தீபாவளி பண்டிகை பாதுகாப்பில் இருந்த எஸ்.ஐ ஒருவர் போதையில் கடையில் மாமுல் கேட்டு தகராறு செய்ய அப்போது பக்கத்தில் நின்றிருந்த பெண்ணை தரக்குறைவாக திட்டி அவர் இடுப்பில் இருந்த கைக்குழந்தையை தடியால் அடித்துள்ளார். இதனால் ஆத்திரத்தின் உச்சத்துக்கு சென்ற பொதுமக்கள் அவரை பிடித்து வைத்து போலீசாருக்கு தகவல் கொடுத்தனர். போலீசார் வந்து கெஞ்சி கூத்தாடி எஸ்.ஐ யைமீட்டு சென்றனர்.
திருப்பூர் மாவட்டம் வேலம்பாளையம் காவல்துறை SI சண்முகசுந்தரம். நேற்று பயங்கர குடிபோதையில் தனது காவல் நிலைய எல்லை எது என்று கூட தெரியாமல் பெரியார் நகர் காவல் நிலைய எல்லைக்குள் புகுந்துள்ளார்.
பெரியார்காலனி கணேஷ் டிபார்ட்மெண்டல் உரிமையாளரையும் கடைக்கு பொருட்கள் வாங்க வந்தவர்களையும் சண்முகசுந்தரம் பணம் கேட்டு மிரட்டியுள்ளார். அப்போது நடந்த வாக்குவாதத்தில் பெண் ஒருவரை தரக்குறைவான வார்த்தையில் திட்டி இந்த நேரத்தில் என்ன பொருட்களை வாங்குகிறாய் என்று கூறி அவர் இடுப்பில் வைத்திருந்த 8 மாத கைகக்குழந்தையை லத்தியால் அடித்துள்ளார்.
இதனால் ஆத்திரம் அடைந்த பொதுமக்கள் குடிபோதை SI சண்முகசுந்தரத்தை பிடித்து தாக்கியுள்ளனர். தகவல் அறிந்து வந்த காவல்துறை நியாயம் கேட்க வந்த மக்களை மிரட்டயுள்ளானர். ஆனால் பொதுமக்கள் அதிகமாக திரளவே தவறு எஸ்.ஐ பக்கம் இருக்கிறது என்று தெரிந்தவுடன் குடிபோதை SI ஐ பாதுகாத்து போலீஸ் வேனில் ஏற்றியுள்ளனர்.
ஒரு கட்டத்தில் போலீசார் பொதுமக்களிடம் கெஞ்சி கூத்தாடி எஸ்.ஐ. சண்முக சுந்தரத்தை மீட்டு சென்றனர்.
இது பற்றி அங்குள்ளவர்களை விசாரித்த போது திருப்பூர் வேலம்பாளையம் காவல் நிலையத்தில் SI ஐ ஆக பணியாற்றும் சண்முகசுந்தரம் என்பவர் தினமும் மது அருந்திவிட்டுத்தான் டூட்டிக்கே வருவாராம்.
இரவு நேரங்களில் அவர் எல்லைக்குட்பட்ட பகுதிகளில் ரோந்து என்பதை காரணம் காட்டி, மாலை 6 மணிமுதல் இரவு 2 மணி வரை மதுக்கடை வாசலில், டிப்பார்ட்மெண்ட் ஸ்டோர் அருகே, சினிமா தியேட்டர் வாசலில் மற்றும் திருப்பூர் -அவினாசி சாலையோரம் என மாறி மாறி நான்கு போலீஸ் அல்லாத வாலிபர்களை வைத்துக்கொண்டு அந்தப்பக்கம் வரும் வாகனங்களை நிறுத்தி,வாகன ஓட்டிகளை மிரட்டி பணம் பறிப்பது வாடிக்கையாம்.
வாகன ஓட்டிகள் மது அருந்தியிருந்தால் கொண்டாட்டம் தானாம் , முறைப்படி அவர்களுக்கு அபராதம் விதிக்காமல் அவர்களிடமிருந்து கறக்க முடியும் அளவுக்கு பணத்தை கறந்து அனுப்பிவிடுவாராம்.
பின்னர் வசூலித்த பணத்தில் உடனிருக்கும் நான்கு வாலிபர்களுக்கும் ஆளுக்கு ரூ.500.கொடுத்துவிட்டு மீதியை பாக்கெட்டில் போட்டுகொண்டு போய் விடுவாராம். இது பற்றி பலமுறை சக போலீசாரே மேலிடத்தில் புகார் அளித்தும் அவர் நடத்தையை மாற்றிகொள்ளவே இல்லையாம். மேலதிகாரிகளும் கண்டுகொள்ளாததால் எல்லை கடந்த அவரது ஆட்டம் இன்று கைக்குழந்தையை தாக்கும் அளவுக்கு சென்றுள்ளது.
தற்போது எஸ்.ஐ குழந்தையை தாக்கியது தாயை தரக்குறைவாக திட்டியது ஃபேஸ்புக் வாட்ஸ் அப்களில் வைராக பரவி தமிழகம் தாண்டி உலக அளவில் தமிழக போலீசின் மானம் பறக்கிறது. காப்பற்றப்பட்ட எஸ்.ஐ மீது விரைவில் நடவடிக்கை வரும் என தெரிகிறது.