போலீசாரின் அட்டூழியமும் அலட்சியமும்..! தீக்குளிப்பிற்கு பிரபலமாகும் தமிழகம்..!

First Published Oct 23, 2017, 6:26 PM IST
Highlights
police outrage and contempt in tamilnadu


கந்துவட்டி தொல்லையால் இன்று காலை நெல்லை மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் இசக்கிமுத்து என்பவர் குடும்பத்துடன் தீக்குளித்ததில் அவரது மனைவி மற்றும் இரண்டு பெண் குழந்தைகள் உயிரிழந்தனர். இந்நிலையில், சிவகாசியில் நடந்த எம்.ஜி.ஆர் நூற்றாண்டு விழாவில் முதல்வரின் கண்முன்னே இரண்டு பெண்கள் தீக்குளிக்க முயன்ற சம்பவம் அதிர்ச்சியையும் பரபரப்பையும் ஏற்படுத்தியுள்ளது.

விருதுநகர் சிவகாசியில் நடைபெற்ற எம்.ஜி.ஆர் நூற்றாண்டுவிழாவில், முதல்வர் பழனிசாமி முன்னிலையில் சத்யா மற்றும் அவரது தாயார் பார்வதி ஆகிய இருவரும் தங்கள் உடலில் மண்ணெண்ணெய்யை ஊற்றிக்கொண்டு தீக்குளிக்க முயன்றனர்.

ராஜபாளையத்தை சேர்ந்த சத்யா மற்றும் அவரது தாயார் பார்வதி ஆகிய இரண்டு பெண்களும், நூற்றாண்டு விழா மேடை அருகே திடீரென தீக்குளிக்க முயன்றனர். அங்கு பாதுகாப்புப் பணியில் ஈடுபட்டிருந்த போலீசார், உடனடியாக அவர்களைப் பிடித்து அங்கிருந்து அப்புறப்படுத்தினர்.

சத்யாவின் கணவருக்கு போலீசார் தொல்லை கொடுத்துவருவதால், போலீசாரின் அட்டூழியத்தை வெளிச்சப்படுத்தும் விதமாக முதல்வர் முன்பாக தற்கொலை செய்துகொள்ள முயன்றதாக தெரிகிறது. 

ஆனால் அவர்களை செய்தியாளர்களிடம் பேசவிடாமல் போலீசார் அப்புறப்படுத்திவிட்டதால் விரிவான தகவல்கள் கிடைக்கவில்லை. அவர்களிடம் விசாரணை நடத்திய பின்னர் விரிவான தகவல்கள் தெரியவரும்.

நெல்லையில் குடும்பத்துடன் தீக்குளிக்க காரணம் போலீசாரின் அலட்சியம். சிவகாசியில் 2 பெண்கள் தீக்குளிக்க முயன்றதற்கு காரணம் போலீசாரின் அட்டூழியம்.

கந்துவட்டி தொடர்பாக புகார் அளித்தும் நடவடிக்கை எடுக்காததால் இன்று காலை இசக்கிமுத்து என்பவர் குடும்பத்துடன் நெல்லை மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் தீக்குளித்தார். அதில், அவரது மனைவி மற்றும் 2 பெண்குழந்தைகள் சிகிச்சை பலனின்றி உயிரிழந்தனர். 

சிவகாசியில் முதல்வரின் கண்முன்னே தாயும் மகளும் தீக்குளிக்க முயன்றனர். அதில், சத்யா என்ற பெண்ணின் கணவருக்கு போலீசார் தொடர்ந்து தொல்லை கொடுத்ததாலும் அவரைப் பிடித்து வைத்துக்கொண்டு விடாததாலும்தான் அவர்கள் தீக்குளிக்க முயன்றதாக தகவல்கள் கிடைத்துள்ளன.

மக்களுக்கு பாதுகாப்பு அளிக்க வேண்டிய போலீசாரின் அட்டூழியத்தாலும் அலட்சியத்தாலும் இன்று ஒரே நாளில் இரு இடங்களில் தீக்குளிப்பு மற்றும் தீக்குளிக்க முயற்சி ஆகிய சம்பவங்கள் நடந்துள்ளது மக்கள் மத்தியில் அதிருப்தியையும் ஆத்திரத்தையும் ஏற்படுத்தியுள்ளது.
 

click me!