
இரவு 10 மணிக்கு மேல் வெளியே சுற்ற வேண்டும் என்றால் வட இந்தியாவிற்கு செல்லுங்கள் என்று கூறி பெண்ணிடம் மோசமான முறையில் நடந்தக்கொண்ட போலீஸ் அதிகாரியிடம் விசாரணை நடத்த தமிழக டிஜிபி உத்தரவிட்டார்.நேற்றிரவு மதுமிதா என்பவர் இசிஆர் கடற்கரையில் தனது நண்பருடன் அமர்ந்து பேசிக்கொண்டிருந்த போது அங்கு வந்த காவலர் மோசமான முறையில் தன்னிடம் நடந்துகொண்டதாக தனது சமூக வலைதளத்தில் பதிவு ஒன்றை போட்டுள்ளார். இந்நிலையில் பதிவினை டேக் செய்து ஏராளமானோர் தங்களது கருத்தினை தெரிவித்து வருகின்றனர்.
அவரது பதிவில், ”அலுவலக பணியை முடித்து விட்டு நானும் எனது நண்பரும் நேற்றிரவு ஈசிஆர் கடற்கரைக்கு சென்றோம். மேலும் நாங்கள் இருந்தவிடத்தில் இத்தனை மணிக்கு மேல் அனுமதி இல்லை என்றுவாறு எந்த ஒரு பலகையும் வைக்கப்படவில்லை. எனவே தான் எங்களுக்கு எதுவும் தெரியாது. ஆனால் அங்கு வந்த போலீஸ், தகாத வார்த்தையில் பேசினார். மோசமான முறையில் நடந்துக்கொண்டார்” என்று குறிப்பிட்டுள்ளார்.
கடற்கரையில் எந்தவொரு ஒழுங்கின நடவடிக்கையில் ஈடுபடவில்லை. குறிப்பாக கண்ணியமான முறையில் அமர்ந்து தான் பேசிக்கொண்டிருந்தோம்.ஆனால் நான் ஒரு குற்றவாளி அல்லது தீவிரவாதி போல் நடத்தப்பட்டேன். மேலும் வட இந்தியாவிற்கு போய் இரவு 10 மணிக்கு மேல் வெளியே சுற்றுங்கள் என்று அசிங்கமாக பேசினார் என்று தெரிவித்துள்ளார். மேலும் எனக்கு தமிழ் பேச தெரியாததால் என்னை வட இந்தியன் என்று சொல்கிறாரா..? என்று குறிப்பிட்ட அந்த பெண், தயவுசெய்து காவல்துறையினருக்கு பொது மக்களிடம் எப்படி நடந்துக்கொள்ள வேண்டும் என்பதை பற்றி கற்றுக்கொடுங்கள் என்று கூறியுள்ளார்.
நான் அந்த போலீஸிடம் பேசிக்கொண்டிருக்கும் போதே, அந்த காவல் அதிகாரி எங்களை காவல்துறை வாகனத்தில் ஏறச் சொல்லி மிரட்டினார் என்றும் நான் குற்றவாளி இல்லை என்றும் பதிவிட்டுள்ளார். இதனைத் தொடர்ந்து இதற்கு தமிழக காவல் துறையின் அதிகார பூர்வ ட்விட்டர் பக்கத்தில் சார்பில் பதில் அளிக்கப்பட்டுள்ளது. அதில், பணியில் இருந்த காவல் அதிகாரியின் பொறுப்பற்ற நடத்தைக்கு வருத்தம் தெரிவித்து கொள்கிறோம். இது தொடர்பாக விசாரணைக்கு உத்தரவிடப்பட்டுள்ளது. தகுந்த நடவடிக்கை எடுக்கப்படும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.