
கூடுவாஞ்சேரியில் போக்குவரத்து ஆய்வாளர் ஒருவர், லாரி, வேன் ஓட்டுநர்களிடம் ஃபைன் போடாமல் ரூ.100, 200 என்று மாமுல் வாங்கி, தன்னுடைய பையில் வைப்பது வைரலாகி வருகிறது.
காவல் துறை என்றாலே லஞ்சம், ஊழல் என்ற கருத்து பரவலாக பொதுமக்களிடையே நிலவி வருகிறது. அதிகமாக லஞ்சம், ஊழல் விளையாடும் அலுவலகங்கள் என்று சமீபத்தில் எடுக்கப்பட்ட ஒரு ஆய்வில் போக்குவரத்து துறை, வட்டாட்சியர் அலுவலகங்கள் மற்றும் காவல் துறை என வரிசைப்படுத்தப்பட்டிருந்தது.
காவல் துறையில் குறிப்பாக போக்குவரதது காவல் துறை கல்லா கட்டுவதில் கில்லாடி என்று, யாரைக் கேட்டாலும் கூறும் நிலை உள்ளது. ஹெல்மெட் போட வேண்டும் என்று சட்டமா, அடுத்த நொடி போக்குவரத்து காவலர்கள் வசூல் வேட்டையில் ஈடுபடுவார்கள்
குடித்துவிட்டு வாகனம் ஓட்டக் கூடாது என்ற விதி இருந்தாலும், ஸ்டேஷன் கோட்டாவை பூர்த்தி செய்த பின், தங்கள் கோட்டாவுக்காக சிலப்பேரை பிடித்து, ரூ. 3 ஆயிரமாகவும், 5 ஆயிரமாகவும் என்று கூறி வேண்டிய வசூலை செய்து கொள்வார்கள்.
குறிப்பாக, அரசாங்கம், ஒழுங்குமுறைப்படுத்த வேண்டும் என்று எந்த சட்டம் கொண்டு வந்தாலும், அதில், ஒரு துளையிட்டு அதன் மூலம் லாபம் பார்ப்பார்கள்.
பலமுறை, போக்குவரத்து போலீசாரின் மாமுல் வாங்கும் விவகாரம் வெளிப்பட்டாலும், யாரும் அடங்குவதாக இல்லை. தற்போது, ஒரு அதிகாரியே மடக்கி மடக்கி... வளைத்து வளைத்து... மாமுல் வாங்கும் வீடியோ காட்சிகள் அவருக்குகீழ் வேலை செய்யும் போலீசாரரேயே படம் பிடிக்கப்பட்டு வாட்ஸ்அப்-ல் வைரலாக பரவி வருகிறது.
கூடுவாஞ்சேரியில் போக்குவரத்து ஆய்வாளராக இருக்கும் அடைக்கலராஜ் என்பவர்தான் அந்த வீடியோவில் இருப்பவர் என்று கூறுகின்றனர். நெடுஞ்சாலையில், கொட்டகையின் கீழ் அமர்ந்திருக்கும் அவர், தன்னிடம் சிக்கிக் கொண்ட லாரி, வேன் ஓட்டுநர்களிடம் ரூ.100, 200 என்று வாங்கி தனது கைப்பையில் வைக்கும் காட்சியும், அதற்கு ரசீது எதுவும் கொடுக்காமல் அனுப்பும் காட்சியும் தெளிவாக உள்ளது.
ஒரு வீடியோ காட்சியில் ரூ.100 தரும் லாரி முதலாளி ஒருவரை, நீயெல்லாம் லாரி முதலாளியா? லாரி முதலாளி என்றால் வைட்டாக இருக்க வேண்டும்? 100 ரூபாய் தருகிறாயே என்று திட்டி அனுப்பும் காட்சியும் உள்ளது.
ஜனாதிபதியின் மெச்சத்தகுந்த பணிக்கான பதக்கத்திற்கு பரிந்துரை செய்யும் அளவிற்கு மடக்கி மடக்கி மாமுல் வாங்கும் இவர் மீது, விரைவில் நடவடிக்கை வரும் என எதிர்பார்க்கப்படுகிறது.