வாட்ஸ்அப் வதந்தி எதிரொலி - மெரினாவில் போலீஸ் குவிப்பு!!

First Published Jul 29, 2017, 12:17 PM IST
Highlights
police force in marina


கதிராமங்கலம் கிராம மக்களுக்கு ஆதரவாக மெரினா கடற்கரையில் ஆர்ப்பாட்டம் நடத்த உள்ளதாக வாட்ஸ்அப் மூலம் தகவல்கள் பரவி வருகிறது. இதையொட்டி மெரினாவில் பலத்த போலீஸ் பாதுகாப்பு போடப்பட்டுள்ளது.

தஞ்சை மாவட்டம் கும்பகோணத்தை அடுத்த கதிரமங்கலத்தில் கடந்த 30ம் தேதி கச்சா எண்ணெய் எடுக்கும் குழாயில் கசிவு ஏற்பட்டது. இதை கண்டித்து கிராம மக்கள் போராட்டத்தில் ஈடுபட்டனர். இதில், பேராசிரியர் ஜெயராமன் உள்பட 10 பேரை போலீசார் கைது செய்து சிறையில் அடைத்தனர். மேலும் அவர்கள் மீது குண்டர் சட்டமும் பாய்ந்தது.

இதனை கண்டித்தும், ஓஎன்ஜிசி நிறுவனம் கதிரா மங்கலம் கிராமத்தை விட்டு வெளியேற வேண்டும் என வலியுறுத்தியும், கிராம மக்கள் தொடர்ந்து போராட்டம் நடத்தி வருகின்றனர். இதில் மண் சோறு சாப்பிடுவது, ஒப்பாரி உள்ளிட்ட போராட்டங்கள் நடத்தி வருகின்றனர்.

இதற்கிடையில் ஓஎன்ஜிசி  நிறுவனம், கதிரா மங்கலம் கிராமத்தில் இருந்து வெளியேற வேண்டும் என வலியுறுத்தி 5 பேர் நேற்று முதல் உண்ணாவிரத போராட்டத்தில் ஈடுபட்டனர். இந்த உண்ணாவிரத போராட்டம் இன்று 2வது நாளாக தொடர்கிறது. இதனால், அப்பகுதியில் மேலும் பரபரப்பு அதிகரித்துள்ளது.

இந்நிலையில், கதிராமங்கலம் கிராம மக்களுக்கு ஆதரவாக சென்னை காமராஜர் சாலை மெரினா கடற்கரையில் ஆர்ப்பாட்டம் நடத்தப்போவதாக இன்று காலை முதல் வாட்ஸ்அப் மூலம் தகவல்கள் பரவி வருகிறது. இதனால், மீண்டும் ஜல்லிக்கட்டு போராட்டம் போல், நடக்க நேரிடும் என போலீசாருக்கு தகவல் கிடைத்தது.

இதை தொடர்ந்து, இன்று காலை முதல் மெரினா கடற்கரையில் பலத்த போலீஸ் பாதுகாப்பு போடப்பட்டுள்ளது. அங்கு குழுவாக வருவோரை விசாரித்து, அங்கிருந்து திருப்பி அனுப்பிவிடுகின்றனர். அதேபோல் கல்லூரி மாணவர்கள் வந்தாலும், அவர்களையும் திருப்பி அனுப்புகின்றனர்.

click me!