ஸ்டெர்லைட்க்கு எதிராக போராடியதாக பரோலில் வந்த கைதியை தாக்கிய போலீஸ்; சிறையில் கைதி மர்ம சாவு...

First Published Jun 7, 2018, 9:19 AM IST
Highlights
police attacked parole prisoner for fight against Sterlite Prisoner mystery died in prison


திருநெல்வேலி

ஸ்டெர்லைட்க்கு எதிராக போராடியதாக கூறி பரோலில் வந்த கைதியை போலீஸ் தாக்கிய நிலையில் அவர் பாளையங்கோட்டை சிறையில் தற்கொலை செய்துகொண்டார்.

உயர்நீதிமன்ற உத்தரவு எதிரொலியாக பாளையங்கோட்டை சிறையில் தற்கொலை செய்த கைதியின் உடல் பாதுகாப்பாக அரசு ஆஸ்பத்திரியில் வைக்கப்பட்டது.

தூத்துக்குடி மாவட்டம், மறவன்மடம் அருகே உள்ள திரவியபுரத்தைச் சேர்ந்த ஏசுதாசன் மகன் பரத்ராஜா (36). தூத்துக்குடியில் நடந்த ஒரு கொலை வழக்கில் ஆயுள் தண்டனை பெற்று திருநெல்வேலி மாவட்டம், பாளையங்கோட்டை மத்திய சிறையில் அடைக்கப்பட்டிருந்தார். 

சகோதரர் திருமணத்திற்காக பரோலில் வந்த அவர் கடந்த 22-ஆம் தேதி தூத்துக்குடியில் ஸ்டெர்லைட் ஆலைக்கு எதிராக நடந்த போராட்டத்தில் பங்கேற்றார் என்று கூறி அவரை காவலாளர்கள் விசாரணைக்கு அழைத்துச் சென்று சரமாரியாக தாக்கி உள்ளனர். 

இதனால் பலத்த காயத்தோடு பரத்ராஜா தூத்துக்குடி அரசு மருத்துவமனையில் சேர்க்கப்பட்டு சிகிச்சை பெற்று பாளையங்கோட்டை மத்திய சிறையில் அடைக்கப்பட்டார். 

இந்த நிலையில் பரத்ராஜா கடந்த 30-ஆம் தேதி பாளையங்கோட்டை சிறை வளாகத்தில் தூக்குப்போட்டு தற்கொலை செய்து கொண்டதாக போலீஸ் தரப்பில் கூறப்படுகிறது. 

அவரது உடல் பாளையங்கோட்டை ஐகிரவுண்டு அரசு மருத்துவமனையில் கடந்த 31-ஆம் தேதி பரிசோதனை செய்யப்பட்டது. ஆனால், அவரது உடலை வாங்க உறவினர்கள் மறுத்து போராட்டத்தில் ஈடுபட்டு வந்தனர்.

இந்த நிலையில் பரத்ராஜாவின் சகோதரர் செல்வசவுந்தர் மதுரை உயர்நீதிமன்ற கிளையில் மனு ஒன்றை தாக்கல் செய்தார். அதில், "பரத்ராஜா சாவில் மர்மம் இருப்பதால் அவருடைய உடலை தடய அறிவியல் துறை பேராசிரியர்கள் தலைமையில் மறு பிரேத பரிசோதனை செய்து நீதிமன்றத்தில் அறிக்கை சமர்ப்பிக்க வேண்டும் என்று உத்தரவிடவேண்டும்" என்று கூறி இருந்தார். 

மனுவை விசாரித்த நீதிபதிகள், "பரத்ராஜாவின் உடலை தற்போதைய நிலையிலேயே பாதுகாப்பாக வைத்திருக்க வேண்டும்" என்று உத்தரவிட்டனர். 

இதனைத் தொடர்ந்து பரத்ராஜாவின் உடல் பாளையங்கோட்டை ஐகிரவுண்டு அரசு மருத்துவமனை பிணவறையில் பாதுகாப்பாக வைக்கப்பட்டுள்ளது.

click me!