
திருநெல்வேலி
திருநெல்வேலியில் உள்ள கடைகளில் நடத்தப்பட்ட அதிரடி சோதனையில் 600 கிலோ தடை செய்யப்பட்ட பிளாஸ்டிக் பொருள்களை அதிகாரிகள் பறிமுதல் செய்து கடையின் உரிமையாளருக்கு அபராதமும் விதித்தனர்.
உலக சுற்றுப்புறச் சூழல் தினத்தையொட்டி திருநெல்வேலி நகராட்சி ஆணையர் ராஜமாணிக்கம் நேற்று உத்தரவு ஒன்றை பிறப்பித்தார்.
அதன்பேரில், சுகாதார அலுவலர் ராஜாராம் தலைமையில் சுகாதார ஆய்வாளர் பெருமாள், துப்புரவுப் பணி மேற்பார்வையாளர்கள் மாரியப்பன், முத்துமாணிக்கம், மாரிமுத்து, தூய்மை இந்தியா திட்டப் பரப்புரையாளர்கள், மேற்பார்வையாளர்கள் அடங்கிய குழுவினர் நகராட்சிப் பகுதியில் உள்ள கடைகளில் அதிரடியாக சோதனை நடத்தினர்.
அப்போது, சில கடைகளிலிருந்து தடை செய்யப்பட்ட 600 கிலோ பிளாஸ்டிக் பொருள்களைப் பறிமுதல் செய்தனர். அதனைத் தொடர்ந்து கடைகளின் உரிமையாளர்களுக்கு ரூ. 21 ஆயிரம் அபராதம் விதிக்கப்பட்டது.
தொடர்ந்து இதுபோன்று பிளாஸ்டிக் பொருள்களைப் பயன்படுத்தினால் கடும் நடவடிக்கை எடுக்கப்படும் என்று அவர்கள் எச்சரித்துவிட்டு சென்றனர்.
பின்னர், நகராட்சி அலுவலக வளாகத்தில் ஆணையர் தலைமையில் அலுவலக ஊழியர்கள், பொதுமக்கள் இணைந்து சுற்றுப்புற சுகாதார உறுதிமொழி எடுத்துக் கொண்டனர்.
உறுதிமொழி எடுத்துக்கொண்ட பின்னர், "அதிரடி சோதனை நடத்தி 600 கிலோ பிளாஸ்டிக் பொருள்களை ஒரே நாளில் கண்டிபிடித்தது போல ஒவ்வொரு நாளும் இதுபோன்ற சோதனைகளில் ஈடுபட வேண்டும்" என்று மக்கள் கேட்டுக்கொண்டனர்.