பாலியல் புகார் அளிக்க சென்ற கர்ப்பிணி மீது தாக்குதல்! காவல்துறையின் ஈரல் முற்றிலுமாக அழுகி விட்டதா? அன்புமணி!

Published : Jun 25, 2025, 09:01 AM IST
anbumani ramadoss

சுருக்கம்

திருத்தணியை அடுத்துள்ள கனகம்மாசத்திரம் காவல் நிலையத்தில் பாலியல் தொல்லை குறித்து புகார் அளிக்கச் சென்ற கர்ப்பிணி உட்பட மூன்று பெண்களை தலைமைக் காவலர் ராமன் தாக்கிய சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. 

திருவள்ளூர் மாவட்டம், திருத்தணியை அடுத்துள்ள கனகம்மாசத்திரம் காவல் நிலையத்தில் பாலியல் தொல்லை குறித்து புகார் அளிக்கச் சென்ற கர்ப்பிணி உட்பட மூன்று பெண்களை தலைமைக் காவலர் ராமன் தாக்கும் வீடியோ காட்சி வெளியாகி பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியது. தாக்குதல் நடத்தியவர் மீது கடும் நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று எதிர்க்கட்சிகளை சேர்ந்த நயினார் நாகேந்திரன், அன்புமணி உள்ளிட்டோர் வலியுறுத்தி இருந்தனர்.

இதுதொடர்பாக பாமக தலைவர் அன்புமணி ராமதாஸ் வெளியிட்டுள்ள அறிக்கையில்: திருவள்ளூர் மாவட்டம் கனகம்மாசத்திரம் காவல் நிலையத்தில் பாலியல் தொல்லை குறித்து புகார் அளிப்பதற்காக சென்ற செவ்வந்தி என்ற கருவுற்ற பெண் உள்பட 3 பெண்கள் அந்தக் காவல்நிலையத்தில் பணியாற்றும் இராமர் என்ற காவலரால் கொடூரமாகத் தாக்கும் காணொலி இணையத்தில் வேகமாக பரவி வருகிறது. நீதி கேட்டு வந்த பெண்ணை காவல்துறையினர் கொடூரமாகத் தாக்கியிருப்பது கண்டிக்கத்தக்கது.

காவல்துறை பொதுமக்களின் நண்பனாகச் செயல்பட வேண்டும்; அனைத்துக் காவல் நிலையங்களிலும் வரவேற்பாளர்கள் அமர்த்தப்பட்டு புகார் கொடுக்க வரும் அனைவரும் கனிவாக நடத்தப்பட வேண்டும் என்று முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் அவர்கள் வசன மழை பொழிந்து வருகிறார். ஆனால், குற்றங்களைச் செய்து விட்டு கையூட்டு கொடுக்கும் பணக்காரர்களுக்கு மட்டும் தான் காவல்நிலையங்களில் மரியாதைக் கிடைக்கிறது. பாதிக்கப்பட்டு நீதி கேட்டு செல்லும் பெண்களுக்கு அடி உதை தான் கிடைக்கிறது. திமுக ஆட்சியின் காவல் அறம் இது தானா?

தமிழகக் காவல்துறையின் ஈரல் முக்கால்வாசி அழுகி விட்டது என்று 1996 ஆம் ஆண்டு அன்றைய முதல்வர் கலைஞர் கருணாநிதி சட்டப் பேரவையிலேயே குற்றஞ்சாட்டினார். ஆனால், இன்று அவரது புதல்வர் ஆட்சியில் காவல்துறையின் ஈரல் முழுமையாகவே அழுகி விட்டது என்பதைத் தான் கன்னம்மாசத்திரம் காவல்நிலையத் தாக்குதல் காட்டுகிறது. பாலியல் தொல்லையாலும், அதன் பின் காவல்நிலையத்தில் காவலரின் தாக்குதலாலும் பாதிக்கப்பட்ட பெண்களுக்கு தமிழக அரசு நீதி வழங்க வேண்டும். இதில் சம்பந்தப்பட்ட காவலர் இராமர் உள்ளிட்ட அனைத்துக் குற்றவாளிகளுக்கும் சட்டப்படி கடுமையான தண்டனை வழங்கப்படுவதை அரசு உறுதி செய்ய வேண்டும் என அன்புமணி ராமதாஸ் வலியுறுத்தியுள்ளார். இதனிடையே கர்ப்பிணியைத் தாக்கிய தலைமைக் காவலர் ராமனை சஸ்பெண்ட் செய்து மாவட்ட காவல் கண்காணிப்பாளர் சீனிவாச பெருமாள் உத்தரவிட்டுள்ளார்.

PREV
Read more Articles on
click me!

Recommended Stories

ஓட்டு போட்ட நீங்கள் தான் ஆட்சி ஒழுங்காக இருக்கிறதா என்று பார்க்க வேண்டும்! கமல்ஹாசன் அதிரடி
TN Rain Update: வெயிலுக்கு குட்பை! தமிழகத்தில் ருத்ரதாண்டவம் ஆடப்போகும் மழை! எந்தெந்த மாவட்டங்கள்?