நடிகர் ஸ்ரீகாந்த் வழக்கு! பரபரப்பு திருப்பம்! இதுவரை நடந்தது என்ன? சென்னை காவல்துறை அதிர்ச்சி தகவல்!

Published : Jun 25, 2025, 08:15 AM IST
Actor Srikanth Drug Using Case

சுருக்கம்

நடிகர் ஸ்ரீகாந்த் கொக்கைன் பயன்படுத்தியதாக கைது செய்யப்பட்டுள்ளார். காவல்துறை விசாரணையில், வேலைவாய்ப்பு மோசடி, நில அபகரிப்பு மற்றும் போதைப்பொருள் கடத்தல் போன்ற பல குற்றச் செயல்கள் தொடர்புடையதாக தெரியவந்துள்ளது.

கொக்கைன் போதைப்பொருள் பயன்படுத்தியதாக தமிழ் திரை உலகில் முன்னணி கதாநாயகனாக திகழ்ந்த நடிகர் ஸ்ரீகாந்த் சென்னையில் போலீசார் கைது செய்யப்பட்ட சம்பவம் திரையுலகில் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியது. அவரது வீட்டில் நடந்த சோதனையில் 7 கொக்கைன் கவா்கள் 1 கிராம் கொக்கைன் போதைப்பொருள் பறிமுதல் செய்யப்பட்டன. இந்நிலையில் நடிகர் ஸ்ரீகாந்த் கைது தொடர்பாக காவல்துறை பரபரப்பு அறிக்கை ஒன்றை வெளியிட்டுள்ளது.

காவல்துறை பரபரப்பு அறிக்கை

அதில், சென்னை பெருநகரக் காவல் கிழக்கு மண்டலம் - திருவல்லிக்கேணி மாவட்டம் - நுங்கம்பாக்கம் காவல் நிலைய எல்லைக்குட்பட்ட இரவு விடுதியில் கடந்த மே 22ம் தேதி அன்று மது அருந்தச் சென்ற இரு தரப்பினரிடையே ஏற்பட்ட மோதல்களின் காரணமாக 2 வழக்குகள் பதிவு செய்யப்பட்டு அதில் 1 வழக்கில் 1 எதிரியும், 2வது வழக்கில் 7 எதிரிகளும் கைது செய்யப்பட்டுள்ளனர். மேற்படி வழக்கு ஒன்றில் கைது செய்யப்பட்ட எதிரி பிரசாத் என்பவரை முழுமையாகவும், அறிவியல் பூர்வமாகவும், தொழில் நுட்ப ரீதியாகவும், சம்மந்தப்பட்ட எதிரியின் வீட்டினை சோதனை செய்து, வங்கி பணப்பரிவர்த்தனை மற்றும் சில ஆதாரங்கள் அடிப்படையில் விசாரணை மேற்கொண்டதில், இந்த கொலை முயற்சி வழக்கு மட்டுமல்லாமல் பல இடங்களில், பலரிடம் அரசு வேலை வாங்கி தருவதாக ஏமாற்றி சுமார் ரூபாய் 2 கோடி அளவில் மோசடி செய்துள்ளார் என்பது தெரியவருகிறது.

சுமார் 200 நபர்களிடம் மோசடி

எதிரி TNPSC, Chennai Corporation, Water Board, Income Tax, Railways போன்ற துறைகளில் வேலை வாங்கி தருவதாக ஒவ்வொரு நபரிடமிருந்தும் ரூபாய் 2 லட்சம் முதல் 20 லட்சம் வரை சுமார் 200 நபர்களிடம் பணம் பெற்றிருப்பது புலன் விசாரணையில் தெரியவருகிறது. இது சம்மந்தமாக எதிரியுடன் தொடர்பில் இருந்த மதுரை மாநகர ஆயுதப்படை தலைமைக் காவலர் செந்தில் கைது செய்யப்பட்டுள்ளார். மேற்கண்ட வேலை வாய்ப்பு மோசடி சம்மந்தமாக எதிரி பிரசாத் மற்றும் அவரது கூட்டாளிகள் மீது இதுவரை 3 வழக்குகள் பதிவு செய்யப்பட்டுள்ளது. பல புகார்கள் வந்த வண்ணம் உள்ளன.

ஆதாரங்கள் சிக்கியது

பிரசாத் என்பவர் இதுமட்டுமல்லாமல் அவருக்கு தெரிந்த சந்தோஷ் என்பவர் மூலம் காவல்துறையில் பணிபுரியும் காவலர்களின் உதவியுடன் தனிப்பட்ட நபர்களின் Call Details மற்றும் Location பெற்று, அவர்களை மிரட்டி பணம் பெற்றிருப்பது தெரியவருகிறது. இது சம்மந்தமாக 1 வழக்கு பதிவு செய்யப்பட்டு, 2 உதவி ஆய்வாளர்கள் விசாரணைக்கு உட்படுத்தப்பட்டும், மேலும் ஒரு நபர் கைது செய்யப்பட்டு நடவடிக்கைக்கு உட்படுத்தப்பட்டுள்ளனர். தொடர் விசாரணையில் பிரசாத் என்பவருக்கு பெங்களூருவைச் சேர்ந்த பிரதீப் மற்றும் பிரதீப்பின் வெளிநாட்டு நண்பன் கானா நாட்டைச் சேர்ந்த ஜான் என்பவர் உட்பட சில நபர்களிடமிருந்து கடந்த 3 வருடங்களாக கொக்கைன் என்ற போதைப்பொருளை பெற்று, தனக்கு தெரிந்த நண்பர்களிடம் விற்பனை செய்துள்ளதாக தெரியவருகிறது. இதற்காக சில இடங்களில் அவரது நண்பர்களுக்கு போதை விருந்தும் தந்துள்ளார். இந்த வழக்கு விசாரணையின் போது கொக்கைன் போதை மருந்து 11 கிராம் அளவிலும், இது சம்மந்தப்பட்ட பணப்பரிவர்த்தனை மற்றும் மின்னணு தொழில்நுட்ப சம்மந்தப்பட்ட ஆதாரங்களும் கைப்பற்றப்பட்டது.

நடிகர் ஸ்ரீகாந்த் கைது

இந்த வழக்கில் கொக்கைன் பொருளை பெற்று பயன்படுத்திய நடிகர் ஸ்ரீகாந்த் என்பவரை உரிய மருத்துவ பரிசோதனை செய்து, அவருடைய பணப்பரிவர்த்தனை, அவருடைய வீடுகள் முழுமையாகவும் சோதனை செய்யப்பட்டு உரிய ஆதாரங்களுடன் அவரை கைது செய்துள்ளோம். மேலும் இவ்வழக்கில் தலைமறைவாக உள்ள எதிரிகளையும், புலன்விசாரணை செய்து விரைவில் கைது நடவடிக்கை மேற்கொள்ளப்படும்.

அஜய் வாண்டையார் நில அபகரிப்பு

இந்த வழக்கில் சம்மந்தப்பட்ட பிரசாத்தின் நண்பர் அஜய் வாண்டையார் என்பவர் சென்னையிலும் மற்றும் சில இடங்களிலும் நில உரிமையாளர்களை மிரட்டியும், வெளிநாடுகளில் வசிப்பவர்களின் நிலத்தையும் அபகரிக்கும் நோக்கத்தோடு, போலி ஆவணங்கள் தயார் செய்து, அந்நிலங்களை அபகரிக்கும் குற்றங்களை செய்துள்ளார். அந்த குற்றங்களை செய்ய உதவியாக இருந்த நாகேந்திர சேதுபதி மற்றும் சந்திரசேகர் (எ) செந்தில், சிவசங்கரன் மற்றும் சிலர் கைது செய்யப்பட்டுள்ளனர். இவ்வாறாக வன்முறையின் மூலம் மற்றவர்களிடமிருந்து மோசடியாக நிலங்களை கைப்பற்றியது குறித்து IG Rigistration, Sub - Registrar Office, Bank Details ஆகியவை மூலம் ஆதாரங்கள் சேகரிக்கப்பட்டு, விசாரணை தொடர்ந்து நடைப்பெற்று வருகிறது.

வேலைவாய்ப்பு மோசடி

அஜய் வாண்டையார் என்பவர் AJ Trust & Enterprises என்ற அமைப்பின் மூலம் இந்த பணப்பரிவர்த்தனை பற்றி விசாரணை தொடர்ந்து நடைபெற்று வருகிறது. மேற்கண்ட குற்ற செயலுக்காக அஜய் வாண்டையார் மற்றும் அவரது கூட்டாளிகளின் மீது இதுவரை 3 வழக்குகள் பதிவு செய்யப்பட்டுள்ளது. இதுவரை பதியப்பட்ட வழக்குகளில் 22 நபர்கள் கைது செய்யப்பட்டும், 5 நபர்கள் குண்டர் தடுப்பு சட்டத்திலும், கைது செய்யப்பட்டுள்ளனர். இந்த தொடர் விசாரணையில் பிரசாந்த், அஜய் வாண்டையார் மற்றும் அவரது கூட்டாளிகள் இணைந்து அரசு சம்பந்தப்பட்ட வேலைவாய்ப்பு மோசடி, நில அபகரிப்பு, கட்டப்பஞ்சாயத்து மற்றும் தகவல் தொழில் நுட்ப பிரிவை சட்டவிரோதமாக பயன்படுத்துதல், போதைப்பொருள் கடத்தல் மற்றும் புழக்கத்தில் விடுதல் போன்ற குற்றச்செயல்களில் ஈடுபட்டுள்ளனர்.

கொக்கைன், ஓஜி கஞ்சா

மேலும் கொக்கைன், ஓஜி கஞ்சா மற்றும் பிற போதைப்பொருளை கடத்துவது, தன் வசம் வைத்திருப்பதும், உட்கொள்வதும் தண்டனைக்குரிய குற்றமாகும். போதைப்பொருளை வைத்திருப்பவர்களை பற்றியும், விருந்து நிகழ்ச்சிகளில் பயன்படுத்துபவர்கள் பற்றியும் தகவல் தெரிந்தும், காவல்துறைக்கு தகவல் தெரிவிக்காமல் இருப்பது குற்றமாக கருதப்படும் என்று சென்னை பெருநகர காவல்துறை சார்பாக தெரிவித்துக்கப்பட்டுள்ளது.

PREV
Read more Articles on
click me!

Recommended Stories

அமித்ஷா, மோடி ஒன்னு கூடி வந்தாலும் காவி நுழைய முடியாது..! திமுகவுக்காக மீண்டும் குதித்த "ஊத்தி கொடுத்த".. கோவன்
இன்னும் மழையின் ஆட்டம் முடியல! வானிலை மையம் எச்சரிக்கையும்! டெல்டா வெதர்மேனின் அப்டேட்டும்