
போலி பஸ் பாஸ் தயாரித்து பல லட்சம் ரூபாய் மோசடி செய்ததாக மாநகர போக்குவரத்துக் கழக ஊழியர்கள் உட்பட 5 பேர் கைது செய்யப்பட்டுள்ளனர்.
கடந்த சில மாதங்களாக பஸ் பயணிகளிடம் ரூ.1000 பஸ் பாசில் குளறுபடி இருந்து வந்தது. குறிப்பாக மந்தைவெளியில் வாங்கிய பஸ் பாசில், திருவான்மியூர் டிக்கெட் கவுன்டரில் வாங்கிய முத்திரை இருந்தது. இதனை பரிசோதனை செய்யும்போது, டிக்கெட் பரிசோதகர்களுக்கும், பஸ் பயணிகளுக்கும் கடும் வாக்குவாதம் ஏற்பட்டு வந்தது.
இதையடுத்து அதிகாரிகள், இதுதொடர்பாக விசாரணை நடத்தியபோது, போலி பஸ் பாஸ் தயாரித்து விற்பனை செய்யப்படுவது தெரியவந்தது. இதுதொடர்பாக சென்னை மாநகர போக்குவரத்துக் கழக மேலாண் இயக்கு நர் கிருஷ்ணமூர்த்தி, சென்னை கமிஷனர் அலுவலகத்தில் புகார் செய்தார்.
அதில், ‘சென்னை மாநகர போக்குவரத்துக் கழகம் சார்பில் பயணிகளின் வசதிக்காக ஆயிரம் ரூபாய் கட்டணத்தில் மாதாந்திர பஸ் பாஸ் மற்றும் பல்வேறு பயண சலுகை பாஸ்களை வழங்கி வருகிறோம். இந்த பாஸ்களை சென்னையில் 29 மையங்களில் வழங்கி வருகிறோம். ஆனால், சிலர் போலி பாஸ்களை தயார் செய்து மோசடி செய்துள்ளனர். அவர்களை கண்டறிந்து நட வடிக்கை எடுக்க வேண்டும்’ என கூறப்பட்டு இருந்தது.‘
இதைதொடர்ந்து போலீசார் தனிப்படை அமைத்து தீவிர விசாரணை நடத்தினர். மேலும், மத்திய குற்றப்பிரிவின் போலி ஆவண மோசடி தடுப்புப் பிரிவு போலீஸார் தனிப்படை அமைத்து விசாரணையில் இறங்கினர்.
முதல்கட்டமாக பயண சலு கைச் சீட்டுகள் விற்கப்படும் இடங்களில் தனிப்படை போலீசார் விசாரணை நடத்தினர். இதில் அண்ணா நகர் (மேற்கு), திருவான்மியூர், ஆதம்பாக்கம் உள்ளிட்ட பணிமனை டிக்கெட் கவுன்டர்களில் போலி பஸ் பாஸ் தயாரித்து மோசடி நடப்பது கண்டுபிடிக்கப்பட்டது.
இது தொடர்பாக ஆதம்பாக்கம் பணிமனையில் கணக்காளராக பணிபுரியும் கிருஷ்ணகுமார், அண்ணா நகர் பணிமனையில் மாதாந்திர டிக்கெட் விற்பனை செய்யும் பிரகாஷ், சுரேஷ்குமார், வேளச்சேரி ஜெகதீஷ், திருத்தணி ரமேஷ்பாபு ஆகியோரை கைது செய்தனர்.
அவர்களிடம் நடத்திய விசாரணையில், பஸ் பாசை இருபுறமும் கலர் ஜெராக்ஸ் எடுத்து, அதன் நடு பகுதியில் விசிட்டிங் கார்டு வைத்து, லேமினேஷன் செய்தனர். பின்னர், வழக்கமான பஸ் பாஸ்களுடன் அதனை சேர்த்து விற்பனை செய்ததை அவர்கள் ஒப்பு கொண்டதாக போலீசார் தெரிவித்தனர்.
மேலும் விசாரணையில், போலி பஸ் பாஸ் தயாரித்து பல லட்ச ரூபாய் மோசடிக்கு மூளையாக கிருஷ்ணகுமார் செயல்பட்டுள்ளார். இவரே போலி பஸ் பாஸ்களை தயாரித்து விநியோகித்தார்