
ஐம்பொன் சிலைகளை கடத்திய வழக்கில் தலைமறைவாக இருந்த போலீஸ் டிஎஸ்பி காதர் பாட்ஷா கைது செய்யப்பட்டார்.
விருதுநகர் மாவட்டம் அருப்புக்கோட்டை அருகே உள்ள ஆலப்பட்டியில் கடந்த 2008-ம் ஆண்டு விவசாயி ஒருவர் தனது நிலத்தில் இருந்து 3 ஐம்பொன் சிலைகளை கண்டெடுத்தார்.
விவசாயியைத் துப்பாக்கியை காட்டி மிரட்டி அந்த சிலைகளை காவல்துறை அதிகாரி காதர் பாட்ஷா பறித்து சென்று தாய்லாந்திற்கு விற்றுள்ளார்.
இந்த சிலைக்கடத்தல் வழக்கில் காவல்துறை சிறப்பு உதவி ஆய்வாளர் சுப்புராஜ் ஏற்கனவே கைது செய்யப்பட்டு அவரிடம் விசாரணைகள் நடத்தப்பட்டன.
இந்நிலையில், சிலைகளை கடத்தி விற்ற காதர் பாட்ஷா தலைமறைவாக இருந்து வந்தார். சிலைக்கடத்தல் தடுப்புப் பிரிவு ஐஜி பொன்மாணிக்க வேல் தலைமையிலான போலீசார் காதர் பாட்ஷாவை கைது செய்துள்ளனர்.
மக்களுக்கும் பொதுச்சொத்துக்களுக்கும் பாதுகாப்பு அரணாக இருக்க வேண்டிய காவல்துறை அதிகாரியே விவசாயியிடம் துப்பாக்கியைக் காட்டி மிரட்டி சிலைகளை கடத்தியது மக்களிடையே அதிர்ச்சியை ஏற்படுத்தியது. தற்போது அவர் கைது செய்யப்பட்டிருப்பது மக்களுக்கு நம்பிக்கை அளிக்கிறது.