
நீலகிரி
கூடலூரில், நிழற்குடை இல்லாத பேருந்து நிறுத்தங்களில் பேருந்து வரும்வரை வெளுத்து வாங்கும் கோடை வெயில் தாக்கத்தில் பயணிகள் வதங்கி வாடுகின்றனர்.
இதுவரை மிதமான வெயிலும், அவ்வப்போது மேகமூட்டத்துடனும் இருந்த தமிழகம் தற்போது கோடை வெயிலை கக்குகிறது.
வெயிலின் தாக்கம் நாளுக்குநாள் அதிகரித்து வருவதால் வெளுத்து வாங்கும் வெயிலில் மக்கள் வறுக்கப்படுகின்றனர்.
குளுமைக்குப் பெயர்போன நீலகிரியில், கடந்த சில தினங்களாக இருக்கும் கோடை வெப்பத்தால் மக்கள் வாடி வதங்குகின்றனர்.
இதில், அடிக்கும் வெளியிலுக்கு சிறிது நேரம் நிழலில் ஒதுங்கலாம் என்று நினைத்து ஒதுங்க இடம் தேடினால் ஒரு பேருந்து நிழற்குடை கூட இல்லை என்பது தான் கொடுமை.
கூடலூரில் வசிக்கிற மக்களின் எண்ணிக்கை நாள்தோறும் அதிகரித்துக் கொண்டே வருகிறது. கூடலூரைச் சேர்ந்த மாணவ, மாணவிகள் கம்பம், உத்தமபாளையம், தேனி, மதுரை போன்ற பகுதிகளில் உள்ள பள்ளி, கல்லூரிகளில் படித்து வருகின்றனர்.
மேலும், கூடலூரில் இருந்து அரசு மற்றும் தனியார் அலுவலகங்களுக்கு பலர் வேலைக்குச் செல்கின்றனர். இதைத் தவிர வணிகம், சுற்றுலா போன்ற காரணங்களுக்காக தினமும் ஏராளமானோர் கூடலூருக்கு வருவது வழக்கம்.
இதற்காக கூடலூர் புதிய பேருந்து நிலையம், அரசமரம், பெட்ரோல் விற்பனை நிலையம், லோயர் காலனி ஆகிய இடங்களில் பேருந்து நிறுத்தங்களை அரசு உருவாக்கி உள்ளது. அங்கு அரசு மற்றும் தனியார் பேருந்துகள் நின்று பயணிகளை ஏற்றிச் செல்கின்றன. ஆனால், பேருந்துகள் நிறுத்தங்கள் இருக்கும் அத்தனை இடங்களிலும் ஒரு நிழற்குடை கூட இல்லை என்பது மக்களை மிகவும் வருத்தப்பட வைத்துள்ளது.
பேருந்து வருவதற்கு எவ்வளவு நேரமானாலும், உச்சி வெயில் தாக்கத்தில் நின்றபடியே அனைத்து பயணிகளிம் அவதிப்படுகின்றனர்.
இது தொடர்பாக நகராட்சி நிர்வாகத்திற்கு புகார் தெரிவித்தும் எந்த நடவடிக்கையும் எடுக்கப்படவில்லை.
சட்டமன்ற, பாராளுமன்ற உறுப்பினர் தொகுதி மேம்பாட்டு நிதியில் இருந்தோ, தொண்டு நிறுவனங்கள் மூலமாகவோ நகரசபை நிர்வாகம் பயணிகள் நிழற்குடயை அமைக்க வேண்டும் என்று மக்கள் கோரிக்கை வைத்துள்ளனர்.