பேரறிஞர் அண்ணாவின் நிளைவு தினமான இன்றாவது பூரண மதுவிலக்கு தொடர்பான அறிவிப்பு வந்துவிடாதா என்ற நோக்கத்தோடு காத்திருப்பதாக பாமக தலைவர் அன்புமணி ராமதாஸ் தெரிவித்துள்ளார்.
சேலம் சூரமங்கலம் பகுதியில் பாமக தலைவர் அன்புமணி ராமதாஸ் செய்தியாளர்களை சந்தித்தார். அவர் பேசியதாவது, நாடாளுமன்ற தேர்தலுக்கு கடந்த 10 மாதங்களாக பாமக தயார் நிலையில் உள்ளது. தமிழ்நாட்டின் நலன் மற்றும் இந்தியாவின் நலன் கருதி, அதற்கு ஏற்ப முடிவுகளை எடுக்கும் அதிகாரத்தை ராமதாஸ்சிற்கு பொதுக்குழு வழங்கியுள்ளது.
ஜாதிவாரி கணக்கெடுப்பை எடுக்கவேண்டும் என்று தமிழக அரசிடம் தொடர்ந்து கோரிக்கை வைத்து வருவதாகவும், பிறமாநிலங்களில் ஜாதிவாரி கணக்கெடுப்பு முடிந்துள்ளது. இதுகுறித்து தமிழகஅரசு ஒரு வார்த்தை கூட பேசாமல் இருக்கிறது. இவ்வாறு இருக்கும்போது சமூகநீதி பற்றி தமிழக அரசு பேசக்கூடாது. எனவே தமிழக அரசு ஜாதி வாரி கணக்கெடுப்பை விரைந்து எடுக்க வேண்டும்.
வனத்துறையில் உள்ள நிலங்களுக்கு மாற்று இடத்தில் நிலத்தை கையகப்படுத்தி கொடுக்க வேண்டும் என்று கர்நாடகாவில் ஆளுநர் உரையில் இடம் பெற்றுள்ளது.உச்சநீதிமன்றம் மற்றும் காவிரி நடுவர் மன்றத்திற்கு எதிராக கர்நாடகா அரசு செயல்பட்டு வருகிறது. இதற்கு மத்தியஅரசு உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும். தமிழ்நாட்டின் அனுமதி இல்லாமல் கர்நாடகாவில் காவிரி படுகையில் சின்ன கட்டுமானம் கூட கட்டக்கூடாது என்று தீர்ப்பு உள்ளது; அதை மீறியும் வேண்டுமென்றெ கர்நாடக அரசு செயல்பட்டு வருகிறது.இந்த விவகாரத்தில் தமிழக அரசு கூடுதல் கவனம் செலுத்த வேண்டும்.
தமிழகத்தில் கஞ்சா விற்பனை சரளமாக உள்ளது. காவல்துறை கடுமையான நடவடிக்கை எடுக்க வேண்டும். காவல்துறையினருக்கு தெரியாமல் கஞ்சா எங்கும் விற்கமுடியாது. கஞ்சா மட்டுமில்லாமல் பல்வேறு போதைப் பொருட்கள் எங்கு பார்த்தாலும் கிடைத்து வருகிறது. கஞ்சா புழக்கத்தால் தற்போது உள்ள இளம் தலைமுறையும் மோசமாகி வருகிறது எனவும் வேதனை தெரிவித்தார்.
நடிகர் விஜய் அரசியல் கட்சி துவங்கியது குறித்த கேள்விக்கு, யார் வேண்டுமென்றாலும் கட்சி துவங்கலாம் டாக்டராக இருந்தாலும், சரி ஆக்டராக இருந்தாலும் சரி....கட்சி துவங்கினால் மக்களுக்கு நல்லது செய்ய வேண்டும்; சமூக நீதிக்காக தான் பாமக கட்சி துவங்கியது. பாமகவால் தமிழகத்திற்கும், இந்தியாவிற்கும் 6 இடஒதுக்கீட்டை பெற்றுக் கொடுத்துள்ளோம். தமிழகத்தில் பூரண மதுவிலக்கு வேண்டுமென பாமக தொடர் போராட்டத்தால் அனைத்துக் கட்சிகளும் கொள்கை ரீதியாக ஏற்றுக் கொண்டுள்ளது.
குறிப்பாக திராவிட கட்சிகள் அதை ஏற்றுக் கொண்டுள்ளது. எனவே பல்வேறு புரட்சிகளையும், சாதனைகளையும், மக்கள் சார்ந்த திட்டங்களை பல்வேறு கொள்கை முடிவுகளை மாற்றியமைத்தது பாமக கட்சி தான்... இதுதான் ஒரு கட்சியின் வேலைகள். யார் கட்சி துவங்கினாலும் இது போன்ற சாதனைகளை செய்ய வேண்டும். அந்த வகையில் நடிகர் விஜய் கட்சி துவங்குவதற்கு வாழ்த்துக்களை தெரிவித்துக் கொள்கிறோம். நல்ல கொள்கை முடிவு, மக்களை சார்ந்த திட்டங்கள் என்னென்ன என்று முன்வைத்து நல்லமுறையில் மக்களை சார்ந்த திட்டங்களை கொண்டு வர முயற்சிக்க வேண்டும் எனவும் தெரிவித்தார்.
பகலில் போலீஸ் வேலை, இரவில் செயின் பறிப்பு; பொள்ளாச்சியில் தலைமை காவலர் அதிரடி கைது
நாடாளுமன்றத் தேர்தலில் பாமக இளைஞர்களுக்கு அதிக வாய்ப்பு கொடுப்போம். கடந்த காலங்களிலும் இளைஞர்களுக்கு அதிக வாய்ப்பு கொடுத்துள்ளோம்;நாடாளுமன்ற தேர்தல் கூட்டணி குறித்து பாமக விரைவில் முடிவுகள் வெளியிடப்படும் எனவும் கூறினார்.
ஆளுநருக்கும், தமிழக அரசுக்கும் இடையே ஈகோ பிரச்சனை நடந்து வருகிறது. இதனால் மக்கள் மற்றும் பல்கலைக்கழகங்களுக்கு தான் பாதிப்பு. பல்வேறு சட்டதிருத்தங்கள் வேண்டும் என்று மாநில அரசு விரும்புகிறது. அதை ஆளுநர் நிலுவையில் வைத்து உள்ளார் என பல்வேறு குற்றச்சாட்டுகள் உள்ளது. குறிப்பாக சேலத்தில் உள்ள பெரியார் பல்கலைக்கழகத்தில் பல்வேறு பிரச்சனைகள் உள்ளன. அதற்கு ஏற்ப அரசு நடவடிக்கைகளை எடுத்து செயல்பட்டு வருகிறது. எங்களுடைய கோரிக்கை என்றால் முழுமையான விசாரணை நடத்த வேண்டும்.இது ஒரு பிரச்சினையை மட்டுமில்லை, சேலம் பெரியார் பல்கலைகழகத்தில் பல பிரச்சினைகள் உள்ளது. எனவே இது குறித்து முழுமையான ஆய்வு நடத்தி நடவடிக்கை எடுக்க வேண்டும் கோரிக்கை விடுத்தார்.
மேலும் பல்கலைக்கழகங்கள் அனைத்தும் கல்வி கொடுக்கும் இடங்கள் இதற்கு தமிழகஅரசு முன்னுரிமை கொடுக்கவில்லை என்றால் ஏற்றுக் கொள்ளமுடியாது. தமிழக அரசு பொங்கல் பரிசுகள் உள்ளிட்டவைகளில் கொடுத்து வருகிறார்கள்.இதுபோன்று கல்விகளுக்கு முக்கியத்துவம் கொடுங்கள்.தமிழக அரசு வேளாண் துறைக்கு 14000 கோடி போதுமானதாக கிடையாது எனவும் பேசினார்.
எந்த காரணத்திற்காக செந்தில் பாலாஜி இவ்வளவு நாட்களுக்கு அமைச்சராக வைத்திருக்கிறார்கள் என்று தெரியவில்லை.. இதற்கான முடிவை முதல்வர் தான் எடுக்கவேண்டும் என்றார்.
கிளாம்பாக்கம் பேருந்து நிலையத்தை திட்டமிட்டு திறந்திருக்க வேண்டும். கோயம்பேடு பேருந்து நிலையத்தை அவசரம் அவசரமாக அப்புறப்படுத்த வேண்டும் என பார்க்கிறார்கள். இங்கு பசுமை பூங்காதான் வர வேண்டும்.பசுமை பூங்காவை தவிர வேறு என்ன கொண்டு வந்தாலும் நானே முதல் ஆளாக இறங்கி கடுமையாக போராடுவேன். அரசு இடத்தில் மால் கட்ட கூடாது என்றும் கூறினார்.