மம்முட்டி பட பாடலுக்கு தடை விதிப்பதா..? பொதுமக்களை சீண்டி பார்க்க கூடாது..! கொதித்தெழுந்த பாமக

By Ajmal KhanFirst Published May 16, 2022, 2:56 PM IST
Highlights

நடிகர் மம்முட்டி நடித்த மறுமலர்ச்சி திரைப்படத்தில் வரும் ராசுபடையாச்சி பாடலுக்கு காவல்துறை தடைவிதிப்பதற்கு பாமக கடும் கண்டனத்தை தெரிவித்துள்ளது.
 

கோயில் திருவிழாவில் மம்முட்டி பாடல்

தமிழக கோயில்களில் திருவிழாக்காலங்களில் தங்கள் குல தெய்வம், விவசாயம், ஜாதி மற்றும் மத அடிப்படையில் பாடல்களை ஒலிபரப்புவார்கள். இதனை பொதுமக்கள் ரசித்து கேட்பார்கள். பாடலுக்கு ஏற்ப நடனமும் ஆடி மகிழ்வார்கள். அதே நேரத்தில் பாடல்களில் மற்ற ஜாதியினரை விமர்சித்து வரும் கருத்துகளால் மோதலோடு வெட்டு குத்தும் ஏற்படும் நிலை உருவாகும், இந்தநிலையில் நடிகர் மம்முட்டி மற்றும் தேவையானி நடித்து மிகப்பெரிய அளவில் வெற்றி பெற்ற படம் மறுமலர்ச்சி, இந்த படத்தில் படையாச்சி கதாப்பாத்திரத்தில் மம்முட்டி நடித்து இருப்பார். இந்த படத்தில் வரும் ஒரு பாடலில்  ராசு படையாட்சி புகழை பரப்பும் வகையில் இருப்பதால்  தமிழகத்தில் உள்ள வடக்கு- மேற்கு மாவட்டங்களில் கிராமப்புற மக்கள் விழாக்காலங்களில் ஒலிபரப்புவார்கள் அந்த பாடலுக்கு தான் தற்போது போலீசார் தடைவிதித்துள்ளதாக கூறப்படுகிறது.

பாடலில் தவறான கருத்து இல்லை

இதனை கண்டிக்கும் வகையில், பாமக மாநில தலைவர் ஜி.கே.மணி அறிக்கை வெளியிட்டுள்ளார், அதில், கிராமப்புற திருவிழாக்கள் மற்றும் சிறப்பு நிகழ்வுகளில் மறுமலர்ச்சி படத்தின் ராசு படையாட்சி பாடலை ஒலிக்கச் செய்யக்கூடாது என்று கிராமப்புற மக்களுக்கு காவல்துறையினர் நெருக்கடி கொடுத்து வருகின்றனர். காவல்துறையினரின் இந்த அத்துமீறிய செயல் கண்டிக்கத்தக்கது! எனக்கூறியுள்ளார்.  ராசு படையாட்சி பாடலில் ஆட்சேபிக்கும் வகையில் எந்தக் கருத்துகளும் இல்லை. ஊர்மக்களுக்காக வாழும், ஊர்மக்களுக்கு உதவும் ராசு படையாட்சி என்பவரை புகழும் பாடல். அப்பாடல் மக்களிடம் நல்லிணக்கத்தை வலியுறுத்துகிறது. அதில் யாருக்கும் எதிராக எதுவும் இல்லை! என தெரிவித்துள்ளார்

மக்களை சீண்ட கூடாது

இந்த  ராசு படையாட்சி பாடல் வடக்கு- மேற்கு மாவட்டங்களில் கிராமப்புற மக்களின் உணர்வுகளுடன் சம்பந்தப்பட்ட பாடல் ஆகும்.  அதற்கு தடை விதிப்பது மக்களின் உணர்வுகளைக் காயப்படுத்தும். தணிக்கைத்துறையால் அனுமதிக்கப்பட்ட இப்பாடலை தடுக்க காவல்துறைக்கு யார் அதிகாரம் கொடுத்தது? என கேள்வி எழுப்பியுள்ளார்.  தமிழ்நாடு முழுவதும் போதைப் பொருள், கள்ள லாட்டரி போன்ற சமூகக் கேடுகளை தடுக்க முடியாத காவல்துறை, கிராமப்புற மக்களின் உணர்வுகளை சீண்டக்கூடாது. மக்களின் உணர்வுகளை மதித்து நடக்கும்படி காவல்துறையினருக்கு தமிழக அரசு  அறிவுறுத்த வேண்டும்! என கேட்டுக்கொண்டுள்ளார்.
 

click me!