டூருக்கு போன பாமக நிர்வாகியை ம.பி.யில் வைத்து தூக்கிய போலீஸ்! உங்க கடமை உணர்ச்சி மெய்சிலிக்குது! அன்புமணி!

By vinoth kumar  |  First Published Jul 25, 2024, 2:18 PM IST

கொலை, கொள்ளை வழக்குகளில் சம்பந்தப்பட்ட குற்றவாளிகளை கைது செய்யாமல் அவர்களின் சுதந்திரமான நடமாட்டத்தை வேடிக்கைப் பார்த்துக் கொண்டிருக்கும் காவல்துறையினர், திமுகவினர் தூண்டி விட்டார்கள் என்பதற்காக ஏதோ சர்வதேச பயங்கரவாதியை கைது செய்வது போன்று மத்தியப் பிரதேசம் வரை சென்று கைது செய்து வருவதை என்னவென்று சொல்வது? 


வட மாநிலங்களுக்கு சுற்றுலா சென்றிருந்த  பாமக நிர்வாகியை மத்தியப் பிரதேசத்திற்கு சென்று கைது செய்ததற்கு அன்புமணி ராமதாஸ் கண்டனம் தெரிவித்துள்ளார். 

இதுதொடர்பாக பாமக நிறுவனர் வெளியிட்டுள்ள அறிக்கையில்: விக்கிரவாண்டி தொகுதி இடைத்தேர்தலின் போது பதிவு செய்யப்பட்ட பொய் வழக்கில், வட மாநிலங்களுக்கு சுற்றுலா சென்றிருந்த பாட்டாளி மக்கள் கட்சியின் நிர்வாகியை மத்தியப் பிரதேசத்திற்கு சென்று கைது செய்திருக்கிறது விழுப்புரம் மாவட்ட காவல்துறை. கள்ளச்சாராய வணிகர்களையும், கஞ்சா வியாபாரிகளையும் கைது செய்வதற்கு திறனற்ற காவல்துறை, திமுகவின் ஏவல் துறையாக மாறி, பா.ம.க. நிர்வாகியை பல ஆயிரம் கிலோ மீட்டர் தொலைவுக்கு தேடிச் சென்று கைது செய்திருப்பது கடுமையாக கண்டிக்கத்தக்கது.

Tap to resize

Latest Videos

இதையும் படிங்க: சர்க்கரை அட்டைதாரர்களுக்கு குட்நியூஸ்! அமைச்சர் போட்ட உத்தரவால் ரேஷன் கடையில் நடந்த அதிரடியை பாருங்க!

விக்கிரவாண்டி சட்டப்பேரவைத் தொகுதி இடைத்தேர்தலின் போது காணை ஒன்றியம் அத்தியூர் திருக்கை கிராமத்தில் கடந்த ஜூலை 1ஆம் நாள் நான் பரப்புரை மேற்கொள்ளச் சென்ற போது, எனது கூட்டத்தில் பங்கேற்க முடியாத வகையில் அங்குள்ள மக்களை திமுகவினர் அவர்களால் உருவாக்கப்பட்ட பட்டியில் அடைத்து வைத்தனர். அதற்கு எதிர்ப்பு தெரிவித்து பா.ம.க. மற்றும் கூட்டணி கட்சியினர் போராட்டத்தில் ஈடுபட்டனர்.  அதைத் தொடர்ந்து பட்டியில் அடைத்து வைக்கப்பட்டிருந்த மக்களை அவசரம், அவசரமாக வேறு இடத்திற்கு  திமுகவினர் அழைத்துச் சென்றனர். அவ்வாறு செல்லும் வழியில் அமைக்கப்பட்டிருந்த பா.ம.க. தேர்தல் அலுவலகத்தை செய்யாறு தொகுதி திமுக சட்டப்பேரவை உறுப்பினர் ஜோதி தலைமையிலான குண்டர்கள் சூறையாடினார்கள். அதற்கு  எதிர்ப்பு தெரிவித்த பா.ம.க. நிர்வாகிகளையும் கண்மூடித்தனமாக தாக்கினர்.

இது தொடர்பாக திமுக சட்டப்பேரவை உறுப்பினர் ஜோதி உள்ளிட்ட 26 பேர் மீது கஞ்சனூர் காவல் நிலையத்தில் பா.ம.க.வினர் புகார் அளித்தனர். ஆனால், அதன் மீது காவல்துறையினர் முதல் தகவல் அறிக்கை பதிவு செய்யவில்லை. மாறாக, தாக்குதலுக்கு உள்ளாக்கப்பட்ட பா.ம.க. நிர்வாகிகள் மீது திமுகவினர் கொடுத்த  பொய்ப்புகாரின் அடிப்படையில் பொய்வழக்கை காவல்துறையினர் பதிவு செய்தனர். அந்த வழக்கில் தான் 20 நாட்களுக்குப் பிறகு அத்தியூர் திருக்கையைச் சேர்ந்த பா.ம.க. நிர்வாகிகள் இளங்கோவன், திருநாவுக்கரசு ஆகியோரை கஞ்சனூர் காவல்துறையினர் கடந்த 22ஆம் தேதி கைது செய்துள்ளனர். இந்த பொய் வழக்கில் திட்டமிட்டு சேர்க்கப்பட்ட காணை மேற்கு ஒன்றிய பா.ம.க. துணை செயலாளர் முருகவேல், அவரது ஊர் மக்களுடன் வட மாநில சுற்றுலா சென்று விட்டு 22ஆம் தேதி மத்தியப் பிரதேச மாநிலம் ஹோசங்காபாத் மாவட்டம் இட்டார்சி தொடர்வண்டி நிலையத்தில் தொடர்வண்டி ஏறுவதற்காக  ஊர் மக்களுடன் காத்திருந்த போது, அவரை  காவல்துறை கைது செய்து விமானம் மூலம் தமிழ்நாட்டிற்கு அழைத்து வந்திருக்கிறது.

திமுகவினர் அளித்த பொய்ப்புகாரின் அடிப்படையில் பதிவு செய்யப்பட்ட பொய்வழக்கில் கைது செய்யப் படும் வாய்ப்பு இருப்பதை அறிந்த முருகவேல், முன்பிணை கோரி நீதிமன்றத்தில் மனுத்தாக்கல் செய்திருந்தார். அந்த மனு மீது நேற்று தீர்ப்பளித்த நீதிமன்றம், அவருக்கு முன்பிணை வழங்கியிருக்கிறது. முருகவேலுக்கு முன்பிணை கிடைக்க வாய்ப்பிருப்பதை அறிந்த காவல்துறை, அதற்கு முன்பாக அவரை கைது செய்ய வேண்டும் என்பதற்காக மத்தியப் பிரதேசத்திற்கு சென்று கைது செய்திருக்கிறது. இது அப்பட்டமான அரசியல் பழிவாங்கும் நடவடிக்கை ஆகும். சட்டத்தின்படி செயல்பட வேண்டிய காவல்துறையினர், ஆளும் திமுகவின் ஏவல்துறையாக மாறி, அவர்களின் ஆணைக்கு கட்டுப்பட்டு இந்த கைதை அரங்கேற்றியுள்ளனர். இவர்களின் கைகளில் தமிழகமும், தமிழக மக்களும் எவ்வாறு பாதுகாப்பாக இருப்பர்? என்பதை நினைக்கவே அச்சமாக இருக்கிறது.

இதையும் படிங்க:  பட்ஜெட்டில் தமிழ்நாடு பெயர் வேண்டுமா? அதுக்கு நீங்க 25 எம்.பி. குடுத்துருக்கணும் - அன்புமணி சர்ச்சை பேச்சு

பா.ம.க.வினர் மீது ஜூலை 2ஆம் தேதி தொடரப்பட்ட பொய்வழக்கின் மீது அடுத்த 15 நாட்களுக்கு எந்த நடவடிக்கையும் எடுக்கப்படவில்லை. ஜூலை 13ஆம் நாள் விக்கிரவாண்டி தேர்தல் முடிவுகள் அறிவிக்கப்பட்ட போது, அத்தியூர் திருக்கையில் உள்ள 17,18,19,20 ஆகிய எண் கொண்ட 4 வாக்குச்சாவடிகளில் பா.ம.க. முறையே 601, 344, 70, 506 என மொத்தம் 1521 வாக்குகள் பெற்று முன்னிலை பெற்றது. மாறாக, இந்த வாக்குச்சாவடிகளில் திமுக முறையே 259, 127, 472, 308 வாக்குகள் பெற்று 355 வாக்குகள் பின்தங்கி இருந்தது.  ஓட்டுக்கு பணத்தை வாரி இறைத்தும், அத்துமீறல்களை அரங்கேற்றியும் வாக்குகள் பெற முடியாத ஆத்திரத்தில் தான் திமுக தலைமை, காவல்துறையை ஏவி விட்டு பா.ம.க. நிர்வாகிகளை கைது  செய்து குரூரமான மகிழ்ச்சியை அனுபவித்துக் கொண்டிருக்கிறது. இது அருவருக்கத்தக்க அரசியலாகும்.

மிகச்சாதாரணமான, அதுவும் நீதிமன்றமே நிபந்தனையின்றி முன்பிணை வழங்கியுள்ள பொய் வழக்கில் தொடர்புடைய பா.ம.க. நிர்வாகி முருகவேலுவை பல லட்சம் செலவழித்து மத்தியப் பிரதேசம் வரை சென்று கைது செய்து வந்துள்ள காவல்துறையின் கடமை உணர்வு மெய்சிலிர்க்க வைக்கிறது. இந்த கடமை உணர்வை எல்லா வழக்குகளிலும் காட்டினால் தமிழ்நாடு சட்டம் & ஒழுங்கில் சிறந்து, சொர்க்கபுரியாக மாறி விடும். ஆனால், ஆளுங்கட்சியின் ஆதரவு பெற்ற கஞ்சா வியாபாரிகள், கள்ளச்சாராய வணிகர்கள் ஆகியோரிடம் மட்டும் இந்த காவல்துறை கணிவுடன் நடந்து கொள்கிறது. கொலை, கொள்ளை வழக்குகளில் சம்பந்தப்பட்ட குற்றவாளிகளை கைது செய்யாமல் அவர்களின் சுதந்திரமான நடமாட்டத்தை வேடிக்கைப் பார்த்துக் கொண்டிருக்கும் காவல்துறையினர், திமுகவினர் தூண்டி விட்டார்கள் என்பதற்காக ஏதோ சர்வதேச பயங்கரவாதியை கைது செய்வது போன்று மத்தியப் பிரதேசம் வரை சென்று கைது செய்து வருவதை என்னவென்று சொல்வது? காவல்துறையினரின் இந்த செயல் அவர்கள் அணிந்திருக்கும் சீருடைக்கு இழுக்கு; நேர்மையாக பணி செய்வதாக ஏற்றுக் கொண்ட உறுதிமொழிக்கு களங்கம் ஆகும்.

இதையும் படிங்க:   என்னது மேலும் ஒரு ஆண்டா? வன்னியர்களின் எதிர்காலம் உங்களுக்கு விளையாட்டப்போச்சா.. கொதிக்கும் ராமதாஸ்!

1996ஆம் ஆண்டு ஆட்சிக்கு வந்த திமுக தலைவர் கலைஞர், காவல்துறையின் செயல்பாடுகள் பற்றி சட்டப்பேரவையில் பேசும் போது, ‘‘காவல்துறையின் முக்கால்வாசி ஈரல் அழுகி விட்டது’’ என்று கூறினார். ஆனால், இப்போது ஈரல் மட்டுமல்ல, மூளை, இதயம் உள்பட காவல்துறையின் அனைத்து உறுப்புகளும் அழுகி விட்டன என்பதையே அவர்களின் செயல்பாடுகள் காட்டுகின்றன. ஒருவேளை, இது பொய் என்றால், பொய்வழக்கில் எவ்வளவு விரைவாக செயல்பட்டு பா.ம.க.வினரை கைது செய்தார்களோ, அதேவேகத்தில் பா.ம.க.வினர் கொடுத்த உண்மையான புகாரின் அடிப்படையில் செய்யாறு தொகுதி திமுக சட்டப்பேரவை உறுப்பினர் ஜோதி உள்ளிட்ட 26 பேரையும் கைது செய்ய வேண்டும். இல்லாவிட்டால், காவல்துறையின் அனைத்து உறுப்புகளும் அழுகி விட்டன என்பதை காவல்துறையும், அதை வழி நடத்திச் செல்லும் தமிழக முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் அவர்களும் தமிழ்நாட்டு மக்கள் முன்னிலையில் ஒப்புக்கொள்ள வேண்டும் என தெரிவித்துள்ளார். 

click me!