தேர்தல் வருவதால் 7வது முறையாக தமிழ்நாடுக்கு வந்திருக்கும் பிரதமர் மோடி, எட்டாவது முறையாக மீண்டும் தமிழகம் வருவதாகத் தகவல் வெளியாகி இருக்கிறது.
வரும் நாடாளுமன்றத் தேர்தலை முன்னிட்டு 7வது முறையாக தமிழ்நாடுக்கு வந்திருக்கும் பிரதமர் மோடி, எட்டாவது முறையாக மீண்டும் தமிழகம் வருவதாகத் தகவல் வெளியாகி இருக்கிறது.
தமிழ்நாட்டில் வரும் ஏப்ரல் 19ஆம் தேதி மக்களவைத் தேர்தல் வாக்குப்பதிவு நடைபெற உள்ளது. பிரச்சாரத்திற்கு இன்னும் ஒருவார காலமே இருப்பதால் அரசியல் கட்சியினர் தீவிர பரப்புரையில் ஈடுபட்டுள்ளனர். பிரதமர் மோடியும் அடிக்கடி தமிழ்நாட்டுக்கு வருவதால் அரசியல் களத்தில் அனல் பறக்கிறது.
இரண்டு நாள் பயணமாக நேற்று (செவ்வாய்க்கிழமை) மாலை சென்னை வந்த பிரதமர் மோடி 2 கி.மீ. தூர ரோடு ஷோவில் பாஜக தொண்டர்களைச் சந்தித்து பாஜக வேட்பாளர்களுக்கு ஆதரவு திரட்டினார். தொடர்ந்து இன்று வேலூர் மற்றும் கோவையில் நடைபெற்ற பொதுக்கூட்டங்களில் பேசினார்.
இந்நிலையில், பிரதமர் மோடி மீண்டும் தமிழ்நாட்டின் நெல்லை மாவட்டத்துக்கு வரவுள்ளார் என்று தகவல் வெளியாகியுள்ளது. அம்பை சட்டமன்றத் தொகுதியைச் சேர்ந்த அகஸ்தியபுரத்தில் 15ஆம் தேதி மாலை 3 மணிக்கு பாஜக தேர்தல் பிரச்சாரப் பொதுக்கூட்டம் நடைபெற உள்ளது. இந்தக் கூட்டத்திற்காக பந்தல் போடும் பணிக்கு வியாழக்கிழமை (ஏப்ரல் 11) காலை 6 மணியளவில் அடிக்கல் நாட்டப்பட உள்ளதாகத் தெரிகிறது.
முன்னதாக, வேலூரில் பாஜக கூட்டணி வேட்பாளரான புதிய நீதிக்கட்சியின் தலைவர் ஏ.சி.சண்முகம், தருமபுரி, கிருஷ்ணகிரி உள்ளிட்ட 5 தொகுதிகளில் போட்டியிடும் பாஜக கூட்டணி வேட்பாளர்களுக்கு ஆதரவாக வாக்கு சேகரித்தார். பின்னர் மேட்டுப்பாளையத்தில் நடந்த பொதுக்கூட்டத்தில் பாஜகவின் கோவை வேட்பாளர் அண்ணாமலை, நீலகிரி வேட்பாளர் எல். முருகன் ஆகியோரை ஆதரித்து பிரச்சாரம் செய்தார்.