‘என் மண் என் மக்கள்’ பாதயாத்திரை நிறைவு விழாவில் பிரதமர் நரேந்திர மோடி அதிமுகவின் முன்னாள் தலைவர்களான எம்ஜிஆர் மற்றும் ஜெயலலிதாவை புகழ்ந்தது அரசியல் வட்டாரங்களில் புது அதிர்வலைகளை உண்டாக்கி உள்ளது.
திருப்பூர் மாவட்டம், பல்லடம் மாதப்பூரில் நடக்கும் 'என் மண் என் மக்கள்' பாதயாத்திரை நிறைவு விழாவில் பிரதமர் நரேந்திர மோடி கலந்து கொண்டு பேசினார். அப்போது, தொழில்துறையில் முக்கிய பங்காற்றும் மண்ணாக கொங்கு மண் உள்ளது. ஜவுளி மற்றும் தொழில்துறையில் பல்லடம் முக்கிய பங்கு வகிக்கிறது. தமிழகம் தேசியத்தின் பக்கள் நிற்கும் மாநிலம் என்பது இந்த கூட்டம் மூலம் நிரூபணம் ஆகி உள்ளது. தமிழ்நாடு வரும் 2024ஆம் ஆண்டு புதிய சரித்திரத்தை படைக்க உள்ளது.
பல ஆண்டுகளாக தமிழ்நாட்டை கொள்ளை அடித்தவர்கள், பாஜகவின் வளர்ச்சியைப் பார்த்து பயப்படுகிறார்கள். இன்று தமிழ்நாடு வந்துள்ள நான் எம்.ஜி.ஆரை நினைத்துப் பார்க்கிறேன். எம்.ஜி.ஆர் ஏழைகளுக்கு செய்த உதவியால் இன்னும் நினைவில் இருக்கிறார். எம்.ஜி.ஆர் குடும்ப ஆட்சி செய்யவில்லை, அவருக்குப் பிறகு தமிழ்நாட்டில் நல்ல ஆட்சியை கொடுத்தது ஜெயலலிதா மட்டுமே.
தமிழ்நாட்டை ஆளுகின்ற கட்சி, இளைஞர்களின் வேலைவாய்ப்பை தடுக்கிறது” என்று ஒருபக்கம் ஆளும் கட்சியான திமுகவை கடுமையாக விமர்சித்தும், அதிமுக முன்னாள் தலைவர்களான எம்ஜிஆர் மற்றும் ஜெயலலிதாவை புகழ்ந்தும் பேசியுள்ளார் பிரதமர் மோடி. இதற்கு என்ன காரணம் என்று பார்க்கும் போது, பல்வேறு காரணங்கள் தெரிய வருகிறது. தற்போது தமிழகத்தை ஆண்டு வரும் திமுக பல்வேறு பிரச்சனைகளை எதிர்கொண்டு வருகிறது.
குறிப்பாக நீட் எதிர்ப்பு, அனைத்து ரேஷன் கார்டுகளுக்கும் 1000 ரூபாய் திட்டம், அம்மா உணவகம், தாலிக்கு தங்கம் போன்ற அதிமுக திட்டங்களை நிறுத்தியது என பல குற்றச்சாட்டுகள் மக்கள் மத்தியில் நிலவி வருகிறது. அதே நேரத்தில் பாஜக கூட்டணியில் இருந்த அதிமுக, பிரிந்து சென்றது தற்போது நடக்கவிருக்கின்ற 2024 நாடாளுமன்ற தேர்தலில் நிச்சயம் பாஜக தலைமையிலான அணிக்கு பின்னடைவை கொடுக்கும் என்று கருதப்படுகிறது.
தமிழகத்தின் பிரதான இரு திராவிட கட்சிகளான திமுக, அதிமுக ஆகிய இரண்டும் பெரும் வாக்கு வங்கியை வைத்துள்ளது. எப்படியாவது தமிழகத்தில் தாமரையை மலர வைக்க வேண்டும் என்பதற்கு ஒருபக்கம் அண்ணாமலை என் மண், என் மக்கள் யாத்திரை என்று சென்றதும் ஒரு காரணம். அடிக்கடி சர்ச்சை பேச்சுக்களால் ட்ரெண்டிங்கில் இருப்பதற்கான காரணமும், தமிழகத்தில் பாஜக முக்கிய கட்சியாக இடம்பெற வைப்பதே என்றும் கூறப்படுகிறது.
அதுமட்டுமின்றி 2024 மக்களவை தேர்தலில் கடந்த தேர்தலில் இருந்த கூட்டணியை மீண்டும் திமுக தக்க வைத்துள்ளது. கூட்டணிகளுக்கான தொகுதி பங்கீடு குறித்த பேச்சு வார்த்தை நடைபெற்று வருகிறது. மற்றொரு பக்கம் அதிமுகவும், பிற முக்கிய கட்சிகளான பாமக, தேமுதிக ஆகியவற்றுடன் பேச்சு வார்த்தையில் ஈடுபட்டு வருகிறது. அநேகமாக இந்த இரு கட்சிகளும் அஇஅதிமுகவுடன் கூட்டணி சேருவதற்கு வாய்ப்புள்ளது.
இந்த் நிலையில் தமிழகத்தின் 3ம் பெரிய கட்சியாக பாஜகவை கொண்டு வர வேண்டும், அதற்கு எம்ஜிஆர் மற்றும் ஜெயலலிதா பற்றி புகழ்வது பாஜகவின் வாக்கு வங்கியை அதிகரிக்கும். எனவே தான் பிரதமர் மோடி உரையில் தமிழ் மொழி, திமுக எதிர்ப்பு, அதிமுக தலைவர்கள் பற்றி புகழ்ந்தது போன்றவை இடம்பெற்றிருக்கிறது என்று அரசியல் நோக்கர்கள் கருதுகிறார்கள்.
உங்கள் வங்கி கணக்கில் பணம் இல்லாவிட்டாலும் 10000 ரூபாய் எடுக்கலாம்.. எப்படி தெரியுமா?