அரசியலிலும் விஜயகாந்த் கேப்டன்தான்: பிரதமர் மோடி நெகிழ்ச்சி!

By Manikanda Prabu  |  First Published Jan 2, 2024, 2:38 PM IST

சினிமா உலகில் மட்டுமின்றி அரசியலிலும் கேப்டனாக இருந்தவர் விஜயகாந்த் என பிரதமர் மோடி புகழஞ்சலி சுட்டியுள்ளார்


தேமுதிக நிறுவன தலைவர் நடிகர் கேப்டன் விஜயகாந்த் கடந்த சில ஆண்டுகளாகவே உடல்நலக் குறைவால் பாதிக்கப்பட்டிருந்தார். அமெரிக்கா, சிங்கப்பூர் உள்ளிட்ட நாடுகளுக்கு சென்று சிகிச்சை பெற்று திரும்பிய அவர், தீவிர அரசியலில் இருந்து ஒதுங்கி வீட்டிலேயே தங்கி ஓய்வெடுத்து வந்தார்.

இதனிடையே, உடல்நலக் குறைவு காரணமாக மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு தீவிர சிகிச்சை பெற்று வந்த விஜயகாந்த் சிகிச்சை பலனின்றி, டிசம்பர் 28ஆம் தேதி காலமானார். அவரது உடல் சென்னை கோயம்பேட்டில் உள்ள தேமுதிக தலைமை அலுவலகத்தில் அரசு மரியாதையுடன் நல்லடக்கம் செய்யப்பட்டது.

Latest Videos

இந்த நிலையில், சினிமா உலகில் மட்டுமின்றி அரசியலிலும் கேப்டனாக இருந்தவர் இருந்தவர் என பிரதமர் மோடி புகழஞ்சலி சுட்டியுள்ளார். பிரதமர் மோடி பல்வேறு நிகழ்ச்சிகளில் கலந்து கொள்வதற்காக தமிழகம் வந்துள்ளார். திருச்சி பாரதிதாசன் பல்கலைக்கழகத்தின் 38ஆவது பட்டமளிப்பு விழாவில் சிறப்பு விருந்தினராக கலந்து கொண்ட பிரதமர் மோடி, திருச்சியில் நடைபெற்ற பொது நிகழ்ச்சியில் கலந்து கொண்டு, ரூ. 19,850 கோடிக்கும் அதிக மதிப்புள்ள பல வளர்ச்சித் திட்டங்களை நாட்டுக்கு அர்ப்பணித்து, இத்துறைகளில் புதிய திட்டங்களுக்கு அடிக்கல் நாட்டினார்.

நிகழ்சியில் பேசிய பிரதமர் மோடி, “2023ஆம் ஆண்டின் கடைசி சில வாரங்கள் தமிழ்நாட்டில் பலருக்கு கடினமாக இருந்தது. கனமழையால் சக குடிமக்கள் பலரை இழந்தோம். கணிசமான அளவு உட்கட்டமைப்பு சேதங்கள் ஏற்பட்டன. நெருக்கடியான இந்த நேரத்தில் தமிழக மக்களுக்கு மத்திய அரசு துணை நிற்கிறது. மாநில அரசுக்கு தேவையான அனைத்து உதவிகளையும் செய்து வருகிறோம்.” என்றார்.

மேலும், சில நாட்களுக்கு முன்புதான் விஜயகாந்தை இழந்தோம். சினிமா உலகில் மட்டுமின்றி அரசியலிலும் கேப்டனாக இருந்தவர். திரைப்படங்களில் நடித்து மக்கள் மனதில் இடம்பிடித்தவர். ஒரு அரசியல்வாதியாக, அவர் எப்பொழுதும் எல்லாவற்றிற்கும் மேலாக தேச நலனை முன்னிறுத்தியவர். அவருக்கு எனது அஞ்சலியை செலுத்துகிறேன் என்று பிரதமர் மோடி தெரிவித்தார்.

அதேபோல், வேளான் விஞ்ஞானி எம்.எஸ்.சுவாமிநாதனை நினைவு கூர்ந்த பிரதமர், நமது நாட்டின் உணவுப் பாதுகாப்பை உறுதி செய்வதில் முக்கியப் பங்காற்றிய அவரையும் கடந்த ஆண்டும் இழந்தோம். அவருக்கும் எனது அஞ்சலியை செலுத்துகிறேன் என்று கூறினார்.

தமிழகம் வரும்போது புதிய சக்தியை பெறுகிறேன்: பிரதமர் மோடி!

முன்னதாக, விஜயகாந்த் மறைவுக்கு அஞ்சலி செலுத்திய பிரதமர் மோடி, “விஜயகாந்தின் மறைவு மிகுந்த வருத்தத்தை அளிக்கிறது. தமிழ் திரையுலகின் ஜாம்பவான், அவரது கவர்ச்சியான நடிப்பு லட்சக்கணக்கானவர்களின் இதயங்களைக் கவர்ந்தது. ஒரு அரசியல் தலைவராக, தமிழ்நாட்டின் அரசியல் நிலப்பரப்பில் நீடித்த தாக்கத்தை ஏற்படுத்திய அவர், பொது சேவையில் ஆழ்ந்த ஈடுபாடு கொண்டிருந்தார். அவரது மறைவு ஒரு வெற்றிடத்தை ஏற்படுத்தியுள்ளது. அதனை நிரப்புவது கடினமாக இருக்கும். அவர் எனது நெருங்கிய நண்பராக இருந்தார். பல ஆண்டுகளாக அவருடனான எனது தொடர்புகளை நான் அன்புடன் நினைவுகூர்கிறேன்.” என தனது எக்ஸ் பக்கத்தில் பதிவிட்டிருந்தார் என்பது குறிப்பிடத்தக்கது.

click me!