
நீலகிரி
பிளஸ்- 2 தேர்வில் தோல்வியடைந்ததால் விரக்தியில் மாணவி விஷம் குடித்து தற்கொலை செய்து கொண்டார்.
தமிழகம், புதுச்சேரியில் 9 இலட்சத்து 7 ஆயிரத்து 620 மாணவ - மாணவிகள் பிளஸ்-2 தேர்வு எழுதினர். இதில் தோல்வி அடையும் மாணவ - மாணவிகள் துவண்டு போக வேண்டாம். தோல்வி அடைந்த மாணவ - மாணவிகளுக்கு ஆலோசனை வழங்க 14417 என்ற இலவச தொலைபேசி எண்ணை தமிழக அரசு தொடங்கியது.
மேலும், தோல்வி அடைந்த பாடங்களுக்கு வருகிற ஜூன் மாதம் 25-ஆம் தேதி மீண்டும் தேர்வு நடத்தப்படும் என கல்வி அமைச்சர் செங்கோட்டையன் அறிவித்து இருந்தார்.
இந்த நிலையில் நேற்று முன்தினம் பிளஸ்-2 முடிவுகள் வெளியிடப்பட்டது. இதில் கூடலூர் ஏழுமுறம் பகுதியை சேர்ந்த ராமச்சந்திரன் என்பவரின் மகள் சந்தியா (17) பிளஸ்-2 தேர்வில் ஐந்தூ பாடங்களில் தோல்வி அடைந்தார். இதனால் மனம் வருத்தமடைந்த விரக்தியில் இருந்த சந்தியா வீட்டில் யாரும் இல்லாத சமயத்தில் விஷம் குடித்து மயங்கி கிடந்தார்.
அவரை அக்கம்பக்கத்தினர் மீட்டு கூடலூர் அரசு மருத்துவமனையில் சேர்த்தனர். அங்கு அவருக்கு முதற்கட்ட சிகிச்சை அளிக்கப்பட்டு மேல் சிகிச்சைக்காக சுல்தான்பத்தேரி தனியார் மருத்துவமனைக்கு கொண்டு செல்லப்பட்டார்.
அங்கு சிகிச்சை பலனின்றி சந்தியா பரிதாபமாக இறந்தார். அவரது உடலை பார்த்து தாயார் மற்றும் உறவினர்கள் கதறி அழுதனர்.