பிளாஸ்டிக்கு தடை போட்டால் மட்டும் போதுமா? அதுக்கு மாற்று அறிவிக்காத தமிழக அரசு!

By vinoth kumarFirst Published Dec 31, 2018, 12:52 PM IST
Highlights

பிளாஸ்டிக் பொருட்களுக்கு தடை போட்டால் மட்டும் போதுமா என்ற நிலைதான் தற்போது தமிழகத்தில் நிலவுகிறது.  தமிழகத்தில் பிளாஸ்டிக் பொருட்களுக்கு விதிக்கப்பட்ட தடை நாளை (ஜனவரி 1) முதல் அமலுக்கு வருகிறது. 

பிளாஸ்டிக் பொருட்களுக்கு தடை போட்டால் மட்டும் போதுமா என்ற நிலைதான் தற்போது தமிழகத்தில் நிலவுகிறது.  தமிழகத்தில் பிளாஸ்டிக் பொருட்களுக்கு விதிக்கப்பட்ட தடை நாளை (ஜனவரி 1) முதல் அமலுக்கு வருகிறது. பூமியைக் காக்கவும் எதிர்கால சந்ததியினருக்கு இந்தப் பூமியை அப்படியே விட்டுச் செல்ல வேண்டும் போன்ற உயரிய காரணங்களுக்காவும் பிளாஸ்டிக் மீதான தடையை பல தரப்பினரும் வரவேற்கவே செய்கிறார்கள். அதே நேரத்தில் இந்தத் தடையை சிறு வணிகர்கள் பலரும் எதிர்க்கிறார்கள். 

கடைகளுக்கு செல்லும்போது வெறுங்கையுடன் செல்லும் நிலைக்கு பொதுமக்கள் பழகி பல ஆண்டுகளாகிறது. சிறு கடை முதல் பெரிய கடை என எங்கே சென்றாலும் கையை வீசிக்கொண்டுதான் பொதுமக்கள் செல்கிறார்கள். அப்படி பழகிய மக்கள், இனி தாங்களே சொந்தமாகத் துணி பையைக் கொண்டு செல்ல வேண்டும். பிளாஸ்டிக் பயன்பாடுக்கு தடை விதிக்கப்பட்ட நிலையில், அந்தப் பொருட்களைப் பயன்படுத்தாமல் இருக்க பெரிய அளவில் மக்களிடம் அரசு விழிப்புணர்வு ஏற்படுத்தவில்லை. மக்களின் பங்களிப்பு இல்லாமல் எந்தத் திட்டத்தையும் வெற்றிகரமாகச் செயல்படுத்த முடியாது என்ற அடிப்படையை அரசு மறந்துவிட்டதோ என்றுதான் சொல்ல வேண்டியிருக்கிறது.

பிளாஸ்டிக் பொருட்களுக்கு ஜனவரி 1 முதல் தடை விதிக்கப்படும் என்று அறிவிக்கபப்ட்ட பிறகு, அதை ஏன் பயன்படுத்தக் கூடாது என்ற விழிப்புணர்வை மக்களிடம் அரசு ஏற்படுத்தவில்லை என்று குற்றம்சாட்டுகிறார்கள் சிறு வணிகர்கள். “பிளாஸ்டிக் தடை நாளை முதல்தான் அமலுக்கு வருகிறது. அதற்கு முன்பாகவே ஓரிரு மாதங்களாக பிளாஸ்டிக் பைகளை வைத்திருந்தால், அதிகாரிகள் பறிமுதல் செய்தேவந்தனர். அப்போது முதலே கடைக்கு வரும் பொதுமக்களிடம் வீட்டிலிருந்து பையைக் கொண்டு வாருங்கள் என்றே சொல்லிவருகிறோம். 

ஆனால், பொதுமக்கள் பெரும்பாலும் கேட்பதாகவே தெரியவில்லை. வழக்கம்போல வெறுங்கையுடன்தான் வந்து நிற்கின்றனர். 10 கிலோ அரிசி வாங்கக்கூட சும்மாதான் வருகிறார்கள். அரசு போதுமான அளவு மக்களிடம் விழிப்புணர்வே ஏற்படுத்தவில்லை. தொடர்ச்சியாக விழிப்புணர்வு செய்திருந்தால், ஓரளவுக்காவது பலன் கிடைக்கும். விழிப்புணர்வே ஏற்படுத்தாமல் பிளாஸ்டிக் தடை அமலுக்கு வரப்போகிறது. 

கடைக்கு வருவோரிடம் நாளை முதல் பிளாஸ்டிக் பை இல்லை என்றால், வேறு கடைக்கு செல்வார்கள். இதனால் வாடிக்கையாளர்களை இழக்க நேரிடும். இந்தத் தடை பற்றி பொதுமக்களிடம் விழிப்புணர்வு ஏற்படும்வரை எங்களுக்கு இழப்பு ஏற்படுவது உறுதி” என நொந்துகொண்டார் வேளச்சேரியைச் சேர்ந்த சிறு வியாபாரி ராமலிங்கம். பொதுமக்களே, நாளை முதல் கடைகளுக்கு செல்லும்போது வீட்டிலிருந்து துணிப்பையை நீங்களே மறக்காமல் எடுத்துச் சென்று பூமியையும் காப்பாற்றுங்கள்; சிறு வணிகர்களையும் காப்பாற்றுங்கள்.

click me!