மக்களுக்கான திட்டப் பணிகளை துரிதமாக முடிக்க வேண்டும் - உறுதிமொழிக்குழு தலைவர் அறிவுரை...

First Published Feb 23, 2018, 1:13 PM IST
Highlights
Planning for People to Completely Accomplish - Advisory Committee Leader ...


நாமக்கல்

சட்டப்பேரவை அரசு உறுதிமொழிக்குழு பரிந்துரை கூட்டத்தில் பரிந்துரைக்கப்படும் மக்கள் திட்ட பணிகளை துரிதமாக முடிக்க வேண்டும் என்று ஆய்வுக்கூட்டத்தில் அதன் தலைவர் ராஜா அறிவுறுத்தியுள்ளார்.

தமிழ்நாடு சட்டப்பேரவை அரசு உறுதி மொழிக்குழு ஆய்வுக் கூட்டம் நாமக்கல் மாவட்ட ஆட்சியர் அலுவலக கூட்டரங்கில் நேற்று நடைபெற்றது. 

இந்தக் கூட்டத்திற்கு ஆட்சியர் ஆசியா மரியம் வரவேற்று பேசினார். இந்தக் கூட்டத்திற்கு அரசு உறுதிமொழி குழு உறுப்பினர்கள் குணசேகரன், துரை.சந்திரசேகரன் பெரியபுள்ளான் என்கிற செல்வம், பொன்முடி, மனோ தங்கராஜ் ஆகியோர் முன்னிலை வகித்தனர்.

இக்கூட்டத்தில் எம்.எல்.ஏ.க்கள் கே.பி.பி.பாஸ்கர், சந்திரசேகரன், பொன்.சரஸ்வதி ஆகியோர் சிறப்பு அழைப்பாளர்களாக கலந்து கொண்டனர். இந்த கூட்டத்துக்கு அரசு உறுதிமொழிக்குழு தலைவர் ராஜா தலைமை தாங்கி பேசினார். 

அப்போது அவர், "சட்டமன்ற உறுப்பினர்கள் தங்களது தொகுதி சார்ந்த மக்களின் தேவைகளையும், மக்களுக்காக செய்யப்பட வேண்டிய பணிகளையும் சட்டமன்றத்தில் எடுத்துக்கூறி, அவற்றை நிறைவேற்றி கொடுக்கவேண்டும் என்று அமைச்சர்களிடம் கோரிக்கை வைக்கிறோம். 

அவ்வகையான கோரிக்கைகளுக்கு பதில் அளிக்கின்ற அமைச்சர்கள், உறுப்பினர்களின் கோரிக்கைகளை நிறைவேற்றுவதாக வாக்குறுதி அளித்தால், அவை அரசின் உறுதிமொழிகளாக தேர்ந்தெடுக்கப்படுகின்றன.

அந்த உறுதிமொழிகள் நிறைவேற்றப்பட்டு உள்ளனவா? என்பதனை ஆய்வு செய்யும் வகையில் அமைக்க பெற்றதே இந்த அரசு உறுதிமொழிக்குழு ஆகும். சட்டபேரவையில் அமைச்சர்களால் அளிக்கப்பட்ட உறுதிமொழிகள் நிறைவேற்றப்பட வில்லை என்றால், மக்களின் தேவைகள் பூர்த்தியடையாது. 

எனவே, உறுதிமொழிகள் எந்த காரணங்களுக்காக நிறைவேற்றப்படவில்லை என்பதை ஆய்ந்து, இடர்பாடுகளை நீக்கும் வகையில் செயலாற்றவும், அரசுக்கு பரிந்துரை செய்யவும் இக்குழுவிற்கு அதிகாரம் உண்டு.

அந்த வகையில் நாமக்கல் மாவட்டத்தில் 43 அரசு உறுதிமொழிகள் குறித்து ஆய்வு செய்கின்றோம். இந்த உறுதிமொழிகள் குறித்து ஆட்சியர் மூலம் பெறப்பட்ட பதில் அறிக்கைகளை தற்போது குழு ஆய்வுக்கு எடுத்துக்கொள்கிறது. 

அரசு உறுதி மொழிக்குழு பரிந்துரை செய்கின்ற பணிகளை விரைந்து முடித்து மக்களுக்கான திட்டங்களை உடனுக்குடன் நிறைவேற்றி தந்திட துறை அலுவலர்கள் துரித நடவடிக்கை மேற்கொள்ள வேண்டும்" என்று அவர் கூறினார்.

தொடர்ந்து தொழில் துறை, மாவட்ட பிற்படுத்தப்பட்டோர் மற்றும் சிறுபான்மையினர் நலத்துறை, நகராட்சி நிர்வாகம் மற்றும் குடிநீர் வழங்கல் துறை, சமூக நலன் மற்றும் சத்துணவுத் திட்டத்துறை, நெடுஞ்சாலைகள் உள்ளிட்ட துறைகளின் சார்பில் 43 மனுக்கள் ஆய்விற்கு எடுத்துக்கொள்ளப்பட்டு, பதிலுரைகள் பெறப்பட்டன.

click me!