மாணவ - மாணவிகள் இடையே தற்கொலை எண்ணத்தை தடுத்து நிறுத்த குழுக்கள் அமைக்க திட்டம்...

First Published Jun 11, 2018, 9:00 AM IST
Highlights
Plan to set groups to stop suicidal thoughts between students


பெரம்பலூர்

மாணவ - மாணவிகள் இடையே தற்கொலை எண்ணத்தை தடுத்து நிறுத்தவும், வட்டார மற்றும் கிராம அளவில் குழுக்கள் அமைக்கப்பட்டு பள்ளி ஆசிரியர்களுக்கு திறன் வளர்ப்பு பயிற்சி நடத்தப்பட வேண்டும் என்று பெரம்பலூர் ஆட்சியர் சாந்தா தெரிவித்தார்.

பெரம்பலூர் மாவட்ட குழந்தை பாதுகாப்பு குழுவின் காலாண்டு கூட்டம் மற்றும் பெண் குழந்தைகள், வளர் இளம் பெண்கள் மற்றும் பெண்கள் விடுதி, இல்லங்களை நடத்தும் நிறுவனங்கள் அரசின் வழிகாட்டு நெறிமுறைகள் பின்பற்றுவதை உறுதி செய்வதற்கான கண்காணிப்பு குழுக் கூட்டம் நடைப்பெற்றது.

இதற்கு ஆட்சியர் சாந்தா தலைமைத் தாங்கினார்.  இந்தக் கூட்டத்தில் பாலியல் குற்றங்களிலிருந்து குழந்தைகளை பாதுகாப்பதற்கான சட்டத்தின் கீழ் பதிவு செய்யப்பட்ட வழக்குகள், பாதிக்கப்பட்ட குழந்தைகளின் நிலை, குழந்தை திருமணத்திலிருந்து மீட்கப்பட்ட குழந்தைகளின் தற்போதைய நிலை குறித்து விவாதிக்கப்பட்டது.

மேலும், பெண் குழந்தைகள், வளர் இளம் பெண்கள் மற்றும் பெண்கள் விடுதி, இல்லங்களை நடத்தும் நிறுவனங்கள் சமூக நலம் மற்றும் சத்துணவுத் திட்டத்துறை அரசாணை எண்.31-ல் குறிப்பிட்டுள்ள வழிகாட்டு நெறிமுறைகள் பின்பற்றுவதை உறுதி செய்தல் மற்றும் இவ்வகை விடுதிகளை உரிய சட்டத்தின் கீழ் பதிவு செய்தல், 

விடுதிகள் முறையாக செயல்படுவதை உறுதி செய்ய மாவட்டத்திலுள்ள பல்வேறு வகை துறையினர் மேற்கொள்ள வேண்டிய நடவடிக்கைகள், சைல்டு லைன் அமைப்பின் செயல்பாடுகள் குறித்தும் விவாதிக்கப்பட்டது.

இந்தக் கூட்டத்தில் ஆட்சியர் சாந்தா பேசினார். அதில், "குழந்தை திருமணத்தை தடுத்தல் மற்றும் வளர் இளம் பருவத்திலுள்ள மாணவ - மாணவிகள் இடையே தற்கொலை எண்ணத்தை தடுத்து நிறுத்தவும், வட்டார மற்றும் கிராம அளவில் குழுக்கள் அமைக்கப்பட வேண்டும்.  இது தொடர்பாக பள்ளி ஆசிரியர்களுக்கு திறன் வளர்ப்பு பயிற்சி நடத்தப்பட வேண்டும். 

பாதிக்கப்பட்ட குழந்தைகளுக்கு ஆற்றுப்படுத்துதல் வழங்கவும், குழந்தை உரிமைகள் மற்றும் பாதுகாப்பினை உறுதி செய்ய மாவட்ட குழந்தை பாதுகாப்பு அலகு, குழந்தை நலக்குழு, சைல்டு லைன் மற்றும் கல்வித்துறை இணைந்து விழிப்புணர்வு நிகழ்ச்சிகளை நடத்த வேண்டும்" என்று அவர் பேசினார்.

இந்தக் கூட்டத்தில் முதன்மை நீதிபதி (இளைஞர் நீதிக்குழுமம்) அசோக்பிரசாத், மாவட்ட காவல் கண்காணிப்பாளர் திஷாமித்தல், வருவாய் கோட்டாட்சியர் விஸ்வநாதன், உதவி இயக்குனர்(ஊராட்சிகள் மற்றும் தணிக்கை) பாரதிதாசன், 

மாவட்ட சமூக நல அதிகாரி தமீமுன்னிசா, ஒருங்கிணைந்த குழந்தை வளர்ச்சி திட்ட அதிகாரி பூங்கொடி, மாவட்ட குழந்தை பாதுகாப்பு அதிகாரி அருள்செல்வி உள்பட பலர் பங்கேற்றனர்.  


 

click me!