
தருமபுரி
பெட்ரோல் சேமிப்புக் கிடங்கு அமைக்கும் திட்டத்தை செயல்படுத்தக்கூடாது என்று மக்கள் குறைதீர்க்கும் கூட்டத்தில் சிவாடி கிராம மக்கள் கோரிக்கை மனு அளித்தனர்.
தர்மபுரி மாவட்ட மக்கள் குறைதீர்க்கும் நாள் கூட்டம் ஆட்சியர் அலுவலகத்தில் மாவட்ட வருவாய் அலுவலர் சங்கர் தலைமையில் நடைப்பெற்றது.
இந்தக் கூட்டத்தில் மாவட்டத்தின் பல்வேறு பகுதிகளைச் சேர்ந்த மக்கள் பங்கேற்று பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி மனுக்கள் அளித்தனர்.
இந்தக் கூட்டத்தில் நல்லம்பள்ளி ஒன்றியம் சிவாடி கிராமத்தைச் சேர்ந்த மக்கள் மனு ஒன்றை கொடுத்தனர்.
அந்த மனுவில், “சிவாடி கிராமத்தில் பத்தாயிரத்திற்கும் மேற்பட்டோர் வசிக்கின்றனர். இங்கு தற்போது பெட்ரோல் சேமிப்பு கிடங்கு அமைக்க இந்தப் பகுதியைச் சேர்ந்த விவசாயிகளின் நிலத்தை கையகப்படுத்த நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டுள்ளது.
இங்கு பெட்ரோல் சேமிப்பு கிடங்கு அமைக்கப்பட்டால் விவசாயிகளின் வாழ்வாதாரம் பாதிக்கப்படுவதோடு நிலத்தடிநீர் மாசுபாடு, சுற்றுச்சூழல் பாதிப்பு ஆகியவையும் ஏற்படும். இதனால் இந்த ஊர் வறண்ட பாலைவன பூமியாக மாறிவிடும்.
எனவே, சிவாடியில் பெட்ரோல் சேமிப்பு கிடங்கு அமைக்கும் திட்டத்தை செயல்படுத்தக்கூடாது” என்று தெரிவித்துள்ளனர்.