
நாமக்கல்,
நாமக்கல்லில் ஏறுதழுவுதல் மீதான தடையை நீக்க நடவடிக்கை எடுக்ககோரி ஆட்சியர் ஆசியா மரியத்திடம், ஜல்லிக்கட்டு பேரவையினர் மனு அளித்தனர்.
தமிழ்நாடு ஜல்லிக்கட்டு பேரவையினர் 50–க்கும் மேற்பட்டவர்கள் திங்கள்கிழமை நாமக்கல் மாவட்ட ஆட்சியர் அலுவலகத்திற்கு வருகைத் தந்தனர்.
அங்கு அவர்கள் குறைதீர்க்கும் நாள் கூட்டத்தில் ஆட்சியர் ஆசியா மரியத்திடம் கோரிக்கை மனு ஒன்றை வழங்கினர்.
அந்த மனுவில், “அமெரிக்க நிறுவனமான ‘பீட்டா’ தொடர்ந்த வழக்கில் உச்ச நீதிமன்றம் ஜல்லிக்கட்டு, மஞ்சுவிரட்டு, மராட்டிய பெயில்காடா, கேரளா செத்தலி மற்றும் மாட்டு வண்டிகள் திருவிழா நடத்த கடந்த 2014–ம் ஆண்டு முதல் முழுமையாக தடை விதித்து உள்ளது.
ஜல்லிக்கட்டு இல்லாமல் கோவில் திருவிழாக்கள் நடத்துவது தெய்வ குற்றம் என்பது எங்களின் நம்பிக்கை. இந்த தடையால் நூற்றுக்கணக்கான கோவில் திருவிழாக்கள் நடத்தப்படாமல் நின்று விட்டன.
இந்து, கிறிஸ்தவர், இஸ்லாம் என அனைத்து மதத்தை சேர்ந்தவர்களும் மாடு வளர்த்து வருகின்றனர். சாதி, மத பேதமின்றி அனைவரும் ஜல்லிக்கட்டில் மாடு பிடிக்கின்றனர். இவ்வாறு நடத்தப்படும் ஜல்லிக்கட்டு வெறும் விளையாட்டு மட்டும் அல்ல. சாதி, மத வேற்றுமைகளை உடைத்தெறிந்து, தமிழர்களின் சாதி, மத நல்லிணக்கத்தை, ஒற்றுமையை உலகிற்கு பறைசாற்றி வந்த சரித்திர கலாச்சாரம்.
இந்து மக்கள் தங்கள் மாடுகளை கோ பூசை, நந்தி பூசை போன்ற பாரம்பரிய பூசைக்கு கூட கோவில்களுக்கு கூட்டி செல்ல முடியாத வண்ணம் அதிகாரிகள் தடுக்கிறார்கள்.
ஜல்லிக்கட்டுக்கு தடை நீடித்து வருவதால் தமிழகத்தில் ஜல்லிக்கட்டு மாடுகளை வளர்க்க விவசாயிகள் இடையே ஆர்வம் குறைந்து வருகிறது. இதனால் ஜல்லிக்கட்டு மாடுகளின் இனமே அழியக்கூடிய அபாயம் உள்ளது.
‘ஆலாம்பாடி’ என்ற மாட்டு இனமே முற்றிலும் அழிந்து விட்டதாக புள்ளி விவரங்கள் தெரிவிக்கின்றன.
எனவே ஜல்லிக்கட்டுக்கான தடையை நீக்க பிரதமரிடமும், மத்திய சுற்றுச்சூழல் துறை மந்திரியிடமும், தமிழக அரசிடமும் தாங்கள் எடுத்துக் கூறி தடையை நீக்க நடவடிக்கை செய்ய வேண்டும்” என்று அந்த மனுவில் கூறியிருந்தனர்.