
கன்னியாகுமரி
இரண்டு வருடங்களாக சரியாக மழை இல்லாததால் வறண்டு கிடந்த பெரியகுளம் பருவமழை தொடங்கி தொடர்ந்து பெய்த இரண்டு வார மழைக்கு நிரம்பியதால் விவசாயிகள் பெரும் மகிழ்ச்சி அடைந்துள்ளனர்.
கன்னியாகுமரி மாவட்டம், களக்காடு அருகே உள்ள திருக்குறுங்குடி. இங்குள்ள பெரியகுளத்தின் மூலம் ஆயிரத்திற்கும் மேற்பட்ட ஏக்கர் விவசாய நிலங்கள் பாசன வசதி பெறுகின்றன.
இந்தக் குளம் கடந்த 2015-ஆம் ஆண்டு வடகிழக்குப் பருவமழையின்போது டிசம்பர் 12-ஆம் தேதி நிரம்பியது. அதன்பின்னர் பருவமழை சரிவர பெய்யாததால் குளம் நிரம்பவே இல்லை.
கடந்த ஓராண்டுக்கும் மேலாக குளம் வறண்டே காணப்பட்ட நிலையில் கடந்த இரண்டு வார காலமாக திருக்குறுங்குடி மலைப் பகுதியில் பலத்த மழை பெய்தது. இதையடுத்து, குளத்திற்கு நீர்வரத்து காணப்பட்டது.
இந்த நிலையில், கடந்த சில தினங்களாக பெய்துவரும் தொடர் மழையால் திருக்குறுங்குடி பெரியகுளம் நேற்று முழுவதுமாக நிரம்பியது.
இந்தக் குளத்தின் மடைகள் கடந்த பல ஆண்டுகளாக பழுதடைந்த நிலையில் காணப்படுகிறது. மழை தொடர்ந்தால் மடையில் பழுது ஏற்பட்டு தண்ணீர் வீணாகிச் செல்லும் அபாயம் உள்ளது.
இக்குளம் பருவமழைக் காலங்களில் நவம்பர் மாதம் 15-ஆம் தேதிக்குப் பின்னர்தான் நிரம்பும்.
இரண்டு ஆண்டுகளுக்குப் பின் நிகழாண்டில் பருவமழை தொடக்கத்திலேயே குளம் நிரம்பியுள்ளதால் விவசாயிகள் பெரும் மகிழ்ச்சியுடன் விவசாயப் பணிகளை தொடங்கியுள்ளனர்.