
கன்னியாகுமரி
தமிழகத்தின் அனைத்துத் துறை அரசு அலுவலர்களும் அலுவலக கோப்புகளில் தமிழில் குறிப்புகளை எழுத வேண்டும் என்று கன்னியாகுமரி மாவட்ட ஆட்சியர் சஜ்ஜன்சிங் ரா.சவாண் வலியுறுத்தியுள்ளார்.
கன்னியாகுமரி மாவட்டம், நாகர்கோவிலில் தமிழ் வளர்ச்சித் துறை சார்பில் ஆட்சிமொழி பயிலரங்கம் மற்றும் கருத்தரங்கு நேற்று நடத்தப்பட்டது.
இதனை மாவட்ட ஆட்சியர் சஜ்ஜன்சிங் ரா.சவாண் தொடங்கி வைத்தார். அப்போது அவர் பேசியது:
“தமிழ் வளர்ச்சித் துறையின் மூலமாக பல்வேறு திட்டங்கள் செயல்படுத்தப்பட்டு வருகிறது.
அனைத்துத் துறை அலுவலர்களும் தமிழில் குறிப்புகளை எழுத வேண்டும். மேலும், இப்பயிற்சியில் வழங்கிய கருத்துகளை மனதில் நிறுத்திக் கொள்வதோடு, நடைமுறைக்கு கொண்டுவர வேண்டும்” என்று பேசினார்.
பின்னர், பள்ளி மற்றும் கல்லூரி மாணவ, மாணவிகளுக்கு நடைபெற்ற பேச்சுப் போட்டி, கவிதைப் போட்டி மற்றும் கட்டுரைப் போட்டிகளில் வெற்றிப் பெற்றோருக்கு முதல் பரிசுத் தொகையாக ரூ.10 ஆயிரம், இரண்டாம் பரிசுத் தொகையாக ரூ.7 ஆயிரம், மூன்றாம் பரிசுத் தொகையாக ரூ.5 ஆயிரத்துக்கான காசோலைகள் மற்றும் சான்றிதழ்களை வழங்கி பாராட்டுகளைத் தெரிவித்தார் ஆட்சியர்.
மேலும், சிறந்த வரைவுகள் மற்றும் குறிப்புகள் எழுதிய அரசுப் பணியாளர்களுக்கும் பரிசு மற்றும் பாராட்டு சான்றிதழ் வழங்கினார்.
பின்னர், மாவட்ட வருவாய் அலுவலர் சோ.இளங்கோ தலைமையில், ஆட்சிமொழி பயிலரங்கம் நடைப்பெற்றது.
இதில், கணினி மென்தமிழ்ச் சொல்லாளர் குறித்து பேராசிரியர் ந.தெய்வசுந்தரம், ஆட்சிமொழி செயலாக்க அரசாணைகள் குறித்து திருச்சிராப்பள்ளி மாவட்ட தமிழ் வளர்ச்சித் துணை இயக்குநர் துரை தம்புசாமி ஆகியோர் விளக்கினர்.
கன்னியாகுமரி மாவட்ட தமிழ் வளர்ச்சித் துறை உதவி இயக்குநர் க.பசும்பொன் வரவேற்றார். எழுத்தாளர் பொன்னீலன், முனைவர் க.சுபாசினி ஆகியோர் கருத்துரை ஆற்றி விழாவை சிறப்பித்தனர்.