
ராஜீவ் கொலை வழக்கில் சிறையில் அடைக்கப்பட்டிருக்கும் பேரறிவாளனை விடுதலை செய்வதில் சாத்தியமில்லை என்று உச்சநீதிமன்றம் கூறியுள்ளது.
என் மகனுக்கு வயது கூடிக் கொண்டே போகிறது. விடுதலையும் தாமதமாகிறது. நியாயமாக கிடைக்க வேண்டிய பரோலையாவது விரைந்து வழங்குங்கள் என்று ராஜீவ் கொலை வழக்கில் சிறையில் அடைக்கப்பட்டுள்ள பேரறிவாளனின் தாய் அற்புதமாள் கூறியது.
முன்னாள் பிரதமர் ராஜீவ் காந்தியின் கொலை வழக்கில் கடந்த 26 ஆண்டுகளுக்கு மேலாக சிறைவாசம் அனுபவித்து வருபவர் பேரறிவாளன். பேரறிவாளனின் விடுதலைக்காக அவரின் தாய் அற்புதம்மாள் கடும் முயற்சிகள் மேற்கொண்டார்.
இதனைத் தொடர்ந்து கடந்த ஆகஸ்ட் மாதம் 24 ஆம் தேதி பேரறிவானுக்கு பரோல் வழங்கப்பட்டது. உடல்நலக் குறைவால் பாதிக்கப்பட்டுள்ள தந்தை குயில்தாசனை கவனிக்க அவருக்கு பரோல் வழங்கப்பட்டது. ஒரு மாத காலம் பரோல் வழங்கப்பட்ட நிலையில் பேரறிவாளனுக்கு மேலும் ஒரு மாதம் பரோல் காலத்தை நீட்டித்து தமிழக அரசு உத்தரவிட்டது. இரண்டு மாதங்களுக்குப் பிறகு அவர் மீண்டும் சிறையில் அடைக்கப்பட்டார்.
இந்த நிலையில், பேரறிவாளன், உச்சநீதிமன்றத்தில் வழக்கு ஒன்றை தொடர்ந்திருந்தார். அந்த வழக்கு இன்று நீதிமன்றத்தில் விசாரணைக்கு எடுத்துக்கொள்ளப்பட்டது. அதில், ராஜீவ் கொலை வழக்கில் இருந்து விடுவிக்கக்கோரி பேரறிவாளன் அதில் கூறியிருந்தார்.
மனுவை விசாரித்த உச்சநீதிமன்ற நீதிபதிகள், தற்போதைய சூழலில் பேரறிவாளனை விடுதலை செய்வது சாத்தியமில்லை என்று கூறியுள்ளனர். மேலும், இந்த வழக்கை ஜனவரி மாதம் 26 ஆம் தேதிக்கு நீதிபதிகள் ஒத்தி வைத்தனர்.