
உடுமலை சங்கர் ஆணவ கொலை வழக்கில், நீதிமன்றம் விதித்த தண்டனையை விமர்சித்தும் சங்கர் கொலையை நியாயப்படுத்தியும் பேசிய இருவரை நீதிமன்ற வளாகத்தில் சிலர் அடித்து உதைத்தனர். அதனால் நீதிமன்ற வளாகத்தில் பரபரப்பு ஏற்பட்டது.
திருப்பூர் மாவட்டம் உடுமலைப்பேட்டையை சேர்ந்த சங்கர் என்ற பொறியியல் பட்டதாரியும் பழனியை சேர்ந்த கௌசல்யாவும் காதலித்து சாதி மறுப்புத் திருமணம் செய்துகொண்டனர்.
இதையடுத்து கடந்த ஆண்டு மார்ச் 13-ம் தேதி உடுமலையில் பட்டப்பகலில் பொதுமக்களின் கண்முன்னே சங்கர் வெட்டி படுகொலை செய்யப்பட்டார். இந்த கொடூர கொலை காட்சிகள் அப்பகுதியில் இருந்த சிசிடிவி கேமராவில் பதிவானது.
பட்டப்பகலில் பொதுமக்களின் கண்முன்னே சங்கர் கொலை செய்யப்பட்ட சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியது. இதுதொடர்பாக கௌசல்யாவின் தந்தை சின்னசாமி, தாய் அன்னலட்சுமி, தாய்மாமன் பாண்டித்துரை மற்றும் கொலை செய்த மணிகண்டன், ஜெகதீசன் உள்ளிட்ட 11 பேர் கைது செய்யப்பட்டனர்.
இந்த வழக்கு திருப்பூர் வன்கொடுமை தடுப்பு சிறப்பு நீதிமன்றத்தில் கடந்த ஒன்றரை ஆண்டுகளாக நடந்துவந்தது. இந்த வழக்கில் சம்மந்தப்பட்ட 11 பேரின் மீதும் 1500 பக்க குற்றப்பத்திரிகை தாக்கல் செய்யப்பட்டது.
கடந்த ஒன்றரை ஆண்டுகளாக நடந்துவந்த இந்த வழக்கில், கௌசல்யாவின் தந்தை மற்றும் கூலிப்படையை சேர்ந்த ஜெகதீசன், மணிகண்டன், செல்வகுமார், கலை தமிழ்வாணன், மதன் ஆகிய 6 பேருக்கு இரட்டை தூக்கு தண்டனையும் ஸ்டீபன் தன்ராஜுக்கு இரட்டை ஆயுள் தண்டனையும் மணிகண்டன் என்ற மற்றொருவருக்கு 5 ஆண்டுகள் சிறை தண்டனையும் விதித்து தீர்ப்பளிக்கப்பட்டது.
தமிழகத்தையே உலுக்கிய வழக்கின் தீர்ப்பு வழங்கப்பட இருந்ததால், நீதிமன்ற வளாகத்தில் போலீசார் பாதுகாப்பு பலப்படுத்தப்பட்டிருந்தது. இந்நிலையில், சங்கரின் கொலையை நியாயப்படுத்தியும் நீதிமன்ற தீர்ப்பை விமர்சித்தும் பேசிய இருவரை நீதிமன்ற வளாகத்துக்குள் இருந்தவர்கள், அடித்து உதைத்தனர். நீதிமன்ற வளாகத்துக்குள் அடிதடி நடந்ததால் பரபரப்பு ஏற்பட்டது. அடிதடி நடப்பதை அறிந்த போலீசார், உடனடியாக சென்று சமாதானப்படுத்தி அடி வாங்கியவர்களை மீட்டு அழைத்து சென்றனர்.