மஃப்டியில் இருந்த போலீஸை குழந்தை கடத்தல் கும்பல் என நினைத்து ஓட ஓட துரத்திய பொதுமக்கள்...

First Published Jun 26, 2018, 11:37 AM IST
Highlights
people thoughts police were child kidnapped gang followed and captured


திருச்சி
 
குற்றவாளியின் தங்கையின் மகனை காவல் நிலையத்திற்கு அழைத்து சென்ற மஃப்டியில் இருந்த போலீஸை குழந்தை கடத்தல் கும்பல் என நினைத்து பொதுமக்கள் துரத்தி சென்று மடக்கி பிடித்தனர்.

தஞ்சாவூர் மாவட்டம், ஐயம்பேட்டை கிராமத்தில் கடந்த இரண்டு மாதங்களுக்கு முன்பு கொலை ஒன்று நடந்தது. இந்த கொலையில் சம்பந்தப்பட்டிருந்த 8 பேரில் 7 பேர் கைது செய்யப்பட்டனர். 

இந்த கொலை வழக்கு தொடர்பாக திருச்சி மாவட்டம், திருவரங்கம் மேலூர் மேலத்தெருவை சேர்ந்த சிவக்குமார் மனைவி தேவி (42) என்பவரை காவலாளர்கள் தீவிரமாக தேடி வந்தனர்.

இந்த நிலையில் தேவி திருவரங்கம் மேலூரில் தங்கியிருப்பதாக ரகசிய தகவல் கிடைத்தது. அதனைத் தொடர்ந்து ஐயம்பேட்டை காவல் ஆய்வாளர் முருகேசன் தலைமையில் உதவி ஆய்வாளர் சசிகுமார் மற்றும் காவலாளர்கள் நேற்று மாலை 6 மணியளவில் மேலூர் பகுதிக்கு மஃப்டியில் வாடகை கார் ஒன்றில் வந்தனர்.

தேவி வீட்டிற்குச் சென்று விசாரித்தபோது தேவி அங்கிருந்து தப்பி ஓடிவிட்டார். உடனே மஃப்டியில் இருந்த காவலாளர்கள் தேவியின் தங்கை மகன் சந்தோஷ்  (10) என்ற சிறுவனை பிடித்து தங்கள் காரில் ஏற்றிக்கொண்டு திருவரங்கம் நோக்கி வந்தனர். 

இதனைப் பார்த்து அதிர்ச்சியடைந்த அப்பகுதியினர் இவர்களை குழந்தை கடத்தல் கும்பல் என்றும், சந்தோஷை கடத்தி செல்கின்றனர் என்றும் நினைத்து அந்த காரை மோட்டார் சைக்கிள் மற்றும் ஆட்டோக்களில் துரத்தி வந்தனர்.

மேலும் பொதுமக்கள், திருவரங்கம் மேலவாசல் பகுதியில் உள்ள ஆட்டோ ஓட்டுநர்களை தொடர்புகொண்டு சிறுவனை கடத்தி வரும் காரை மடக்கி பிடிக்குமாறு தகவல் கொடுத்தனர். 

அதன்படியே மேலவாசல் பகுதியில் சிறுவனுடன் வந்த காரும் தடுத்து நிறுத்தப்பட்டது. அங்கு திரண்ட மேலூர், தெப்பக்குளம் மற்றும் மேலவாசல் பகுதி மக்களுக்கும் காரில் வந்த காவலாளர்களுக்கும் வாக்குவாதம் ஏற்பட்டது. பின்னர், திருவரங்கம் காவலாளர்களுக்கு தகவல் கொடுக்கப்பட் டது.

நிகழ்விடத்துக்கு விரைந்து வந்த சிறப்பு காவல் உதவி ஆய்வாளர் அறிவழகன் தலைமையிலான திருவரங்கம் காவலாளர்கள் நிலைமையை புரிந்து கொண்டு சிறுவன் சந்தோஷ், ஐயம்பேட்டை காவலாளர்கள் மற்றும் பொதுமக்கள் அனைவரையும் திருவரங்கம் காவல் நிலையத்துக்கு அழைத்து வந்தனர். 

அங்கிருந்த திருவரங்கம் காவல் உதவி ஆணையர் ராமச்சந்திரன் ஐயம்பேட்டை காவலாளர்களிடம் நடந்ததை விசாரித்து தெரிந்து கொண்டார். அதன்பின்னர் அவர்களிடம் திருவரங்கத்திற்கு வழக்கு தொடர்பாக சம்பந்தப்பட்டவர்களை கைது செய்ய வரும்போது, எங்களுக்கு தகவல் தெரிவிக்க வேண்டும்.

அப்படி தகவல் சொல்லாமல் வந்தது தவறு என்றும், ஒரு சிறுவனை வலுக்கட்டாயமாக காரில் ஏற்றி கொண்டு வரும்போது அதனை பார்க்கும் பொதுமக்கள் சிறுவன் கடத்தப்படுகிறான் என்று நினைத்துதான் பதற்றமடைவார்கள். 

எனவே, இதுபோன்று இனி நடக்காமல் பார்த்துக் கொள்ளுங்கள் என்று அறிவுறுத்தி அவர்களிடமிருந்து சந்தோஷை மீட்டு அவர்களை அனுப்பி வைத்தனர். அதன்பின்னர் சந்தோஷ், தேவியின் தங்கையிடம் ஒப்படைக்கப்பட்டதின்பேரில் அனைவரும் அங்கிருந்து கலைந்து சென்றனர்.
 

click me!