
கடந்த 2015 ஆம் ஆண்டில் நவம்பர் மாதத்தில் பரவலாக மழை பெய்து ஏற்கெனவே ஏரிகள் நிரம்பி வழிந்திருந்தன. அந்த நேரத்தில், டிசம்பர் 1 ஆம் தேதி ஒரு நாளில் பெய்த மேக வெடிப்பு கனமழையால் சென்னை நகரில் பெரும் வெள்ளம் ஏற்பட்டு, உயிர்ச் சேதமும் பொருட் சேதமும் அதிகமானது. அந்தக் காட்சிகளை நேரில் கண்டவர்கள் இப்போதெல்லாம் சிறிய மழை வருவதற்குள் அச்சத்தின் உச்சத்துக்கே சென்று விடுகின்றனர்.
இந்நிலையில் கடந்த 4 நாட்களாக தொடர்ந்து பெய்துவரும் கன மழையால், பல இடங்களில் வெள்ள நீர் தேங்கியுள்ளது. நீர் சிறிது சிறிதாக வடியத் தொடங்கும் நேரத்தில், மீண்டும் மழை பெய்வதால், பல சாலைகளில் வெள்ள நீர் தேங்கியபடியே இருந்தது.
இந்நிலையில், சென்னை மாநகராட்சி ஆணையர் கார்த்திகேயன் செய்தியாளர்களைச் சந்தித்துப் பேசினார். அப்போது அவர், 2015-ம் ஆண்டு ஏற்பட்ட அசம்பாவிதம் போல், தற்போது எதுவும் ஏற்படாது என்று நம்பிக்கை அளித்தார்.
இன்று காலை முதல் களத்தில் இறங்கி நிவாரணப் பணிகளில் ஈடுபட்டார் மாநகராட்சி ஆணையர் கார்த்திகேயன். கீழ்ப்பாக்கம் பகுதியில் நிவாரணப் பணிகளை ஆய்வு செய்த அவர், கீழ்ப்பாக்கத்தில் வெள்ளத்தில் சிக்கியுள்ளவர்கள் படகுகள் மூலம் மீட்கப் பட்டு வருகின்றனர். வெள்ளம் தேங்கியுள்ள பகுதிகளில் பாதிக்கப்பட்டவர்களை படகுகள் மூலம் மீட்க நடவடிக்கை எடுத்து வருகிறோம்.
பேரிடர் மீட்புக் குழு தாம்பரத்தில் முகாம் இட்டுள்ளது. 30 பேர் கொண்ட குழுவினர் மாவட்ட நிர்வாகத்துடன் இணைந்து பணிகளை கவனித்து வருகின்றனர்... என்று கூறினார் கார்த்திகேயன்.
முன்னதாக, நேற்று இரவு இடைவிடாமல் பெய்த பெருமழை காரணமாக சென்னை நகரே முடங்கியது. பெருமழை காரணமாக நகரின் முக்கிய சாலைகளில் மழைநீர் வெள்ளமெனப் பெருகியது. இதனால் சென்னையில் கடும் போக்குவரத்து நெரிசல் ஏற்பட்டது. மெதுமெதுவாக ஊர்ந்து சென்றன. போக்குவரத்து நெரிசலை போலீஸாரால் கட்டுப்படுத்த முடியவில்லை.
அடையாறு, மந்தைவெளி, சாந்தோம், புரசைவாக்கம், அயனாவரம், அண்ணாநகர், கீழ்ப்பாக்கம், செக்ரடரியேட் காலனி, காமராஜர் சாலை, பாரிமுனை, கிண்டி உள்ளிட்ட பல இடங்களில் மழைநீர் சாலைகளில் பெருக்கெடுத்து வெள்ளமென ஓடியது. தெருக்களிலும் மழைநீர் சூழ்ந்திருந்ததை பார்க்க முடிந்தது.