
கரூர்
ரேசன் கடைகளில் சர்க்கரைக்கு பதிலாக கருப்பட்டி விநியோகிக்க அரசு நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று கள் இயக்கத்தின் ஒருங்கிணைப்பாளர் நல்லசாமி வேண்டுகோள் விடுத்துள்ளார்.
தமிழ்நாடு கள் இயக்கத்தின் ஒருங்கிணைப்பாளர் நல்லசாமி நேற்று கரூரில் செய்தியாளர்களிக்கு பேட்டியளித்தார்.
அதில், “தமிழகத்தில் கள் இறக்கி விற்பதற்கும், விற்கும் கள்ளை வாங்கி குடிப்பதற்கும் கடந்த 1987-ஆம் ஆண்டு தடை விதிக்கப்பட்டது. அதேநேரத்தில் கள் இறக்கி குடிக்க தடை விதிக்கப்படவில்லை.
எனவே வருகிற ஜனவரி மாதம் 21-ஆம் தேதி முதல் பனை, தென்னை, ஈச்சமரங்கள் வைத்திருப்போர் அவரவர் சொந்த தேவைக்கு ஏற்ப கள் இறக்கி குடிக்கப்படும். மேலும் சொந்த உபயோகத்திற்கு பயன்படுத்துவோம். இதற்கு தடை விதிக்க முயன்றால் நீதிமன்றத்தை நாடுவோம்.
ரேசன் சர்க்கரை விலை உயர்வை திரும்ப பெற வேண்டும். ரேசன் கடைகளில் சர்க்கரைக்கு பதிலாக கருப்பட்டியை வினியோகிக்க அரசு நடவடிக்கை எடுக்க வேண்டும். சர்க்கரைக்கு அரசு மானியம் வழங்குவதை தவிர்த்து கருப்பட்டிக்கு அரசு மானியம் வழங்க வேண்டும்.
கரும்புக்கு அரசு விதித்த கொள்முதல் விலையை சர்க்கரை ஆலைகள் விவசாயிகளுக்கு கடந்த நான்கு ஆண்டுகளாக கொடுக்கவில்லை. விவசாயிகள் பல போராட்டம் நடத்தியும் தமிழக அரசு கண்டுகொள்ளவில்லை. அறிவித்த விலையை பெற்றுத்தர வேண்டிய பொறுப்பு அரசுக்கு உள்ளது. ஆனால் அரசு பொறுப்பை தட்டிக்கழிக்கிறது.
இப்படிப்பட்ட நிலையில் விவசாயத்தை மத்திய அரசின் பட்டியலில் சேர்ப்பது நல்லது தான். விவசாயிகளின் ஒற்றுமை ஓங்கும். சம்பள கமிஷன் நாடு முழுவதும் அமல்படுத்தப்படுவது போல விவசாய கமிஷனும் அமல்படுத்த முடியும். விவசாயிகள் பயன்பெற முடியும். நாடு முழுவதும் ஒருங்கிணைந்து விவசாயிகள் போராட முடியும்.
மாநில சுயாட்சி பற்றி பேசும் அரசியல் கட்சியினர் உள்ளாட்சி அமைப்புகளின் அதிகாரத்தை பறித்தது ஏன்? உள்ளாட்சி அமைப்புகளிடம் இருந்த அதிகாரத்தை வழங்கிய பின்னரே உள்ளாட்சி தேர்தலை நடத்த வேண்டும்.
கைவிடப்பட்ட ஓரத்துப்பாளையம் பாசனத்திற்கு ரூ.7 கோடி செலவு செய்து முத்தூர் தடுப்பணை புதுப்பித்தது தொடர்பாக அரசு வெள்ளறிக்கை வெளியிட வேண்டும்” என்று அவர் கூறினார்.