
சென்னையைச் சுற்றியுள்ள பகுதிகளில் இதுவரை எந்த ஏரியும் நிரம்பவில்லை, ஏரிகள் எதுவும் இதுவரை முழு கொள்ளளவை எட்டவில்லை என்று அமைச்சர் ஆர்.பி. உதயகுமார் தெரிவித்துள்ளார்.
சென்னையில் எழிலகத்தில் ஆய்வுக் கூட்டம் நடைபெற்றது. அதன்பின்னர் செய்தியாளர்களைச் சந்தித்தார் அமைச்சர் ஆர்.பி. உதயகுமார். அப்போது அவர், மழை குறித்து சமூக வலைத்தளங்களில் பரவி வரும் வதந்திகளை நம்பாதீர்கள் என்று வேண்டுகோள் விடுத்தார். ஊடகங்கள் மூலம் தரும் தகவல்களை மட்டுமே கவனத்தில் கொள்ள வேண்டும் என்று மக்களுக்கு வேண்டுகோள் விடுத்த அமைச்சர் உதயகுமார், இதுவரை சென்னையைச் சுற்றியுள்ள எந்த ஏரியும் முழுதாக நிரம்பவில்லை என்று கூறினார்.
ஏரிகள் பல நிரம்பியுள்ளதாகப் பரவி வரும் வதந்திகளை நம்பவேண்டாம் என்று கேட்டுக் கொண்ட உதயகுமார், சமூக வலை தளங்களில் மழை குறித்துப் பரவும் தகவல்களை நம்ப வேண்டாம். தடையில்லாமல் போக்குவரத்து நடைபெற நடவடிக்கை எடுக்கப்பட்டு வருகிறது. நோய்த்தொற்று பரவாமல் இருக்க மருத்துவ முகாம்கள் அமைக்கப்பட்டுள்ளன. தேங்கிய மழை நீரை அகற்ற நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டுள்ளன” என்று கூறினார் ஆர்.பி.உதயகுமார்.
மேலும், மழைக்காலத்தில் வெளியே வருவதை மக்கள் தவிர்க்க வேண்டும். மின்சாரத்தை கவனமாக கையாள வேண்டும், மின்சாரப் பெட்டிகள் அருகில் செல்ல வேண்டாம். தாழ்வான பகுதிகளில் உள்ளவர்கள் மேடான பகுதிகளுக்கு செல்ல வேண்டும். மழை நீர் வெளியேற்றும் பணியில் அதிகாரிகள் ஈடுபட்டுள்ளனர். சுரங்கப் பாதைகளில் உள்ள நீர் வெளியேற்றப்பட்டு வருகிறது. மழை நீர் வடிந்த பிறகு சாலைகளை செப்பனிடுவோம். தற்போது ரெடிமிக்ஸ் மூலம் சாலைகளை தாற்காலிகமாக சரி செய்கிறோம்... என்றார் உதயகுமார்.
சென்னை முழுவதும் கனமழை பெய்து வருகிறது. பல இடங்களில் ஆக்கிரமிப்புகள் பெருகியுள்ளதாலும், முன்னெச்சரிக்கையாக ஆக்கிரமிப்புகளை நீக்கவும், மழை நீர் கால்வாய்களை சரிசெய்யாததாலும் மழை நீர் வெளியேற வழியின்றி ஆங்காங்கே தேங்கியுள்ளது. இதனால், மக்களின் இயல்பு வாழ்க்கை பாதிக்கப்பட்டுள்ளது. சாலைகளில் வெள்ள நீர் பெருக்கெடுத்து ஓடுவதால் போக்குவரத்து பாதிக்கப்பட்டுள்ளது. சாலைகளில் தேங்கியுள்ள நீரை வெளியேற்றும் நடவடிக்கைகளில் மாநகராட்சி அதிகாரிகள் முழு வீச்சில் ஈடுபட்டுள்ளனர்.