
கரூர் மாவட்டம், கிருஷ்ணராயபுரம் வட்டாட்சியர் அலுவலகம் முன்பு உள்ள கரூர் - திருச்சி தேசிய நெடுஞ்சாலையில் ஆங்காங்கே பள்ளங்கள் ஏற்பட்ட நிலையில் இதை நிர்வகித்து சுங்கக் கட்டணத்தை வசூலித்து வரும் டி.கே.டி.ஆர்.பி.எல் என்ற நிறுவனம் கடந்த சில வாரங்களுக்கு முன்னர் சாலையை செப்பனிட, பள்ளம் தோண்டியது ஆனால் தோண்டப்பட்ட சாலை செப்பனிடப் படாத நிலையில், அந்தச் சாலை மேடு பள்ளம் கொண்டதாக மாறிவிட்டது. இந் நிலையில் இரு சக்கர வாகனம் ஓட்டிக் கொண்டு வரும் பலரும் குறிப்பாக நடந்து செல்லும் குழந்தைகளும் கூட கீழே விழுந்து விபத்துக்குள்ளாகின்றனர்.
இதே சாலையில் கரூரிலிருந்து சென்னைக்குச் செல்லும் கரூர் அமைச்சர் விஜயபாஸ்கர், திருச்சி விமான நிலையத்திற்கும் இதே வழியாகத் தான் செல்கிறார். அவரும் இதே சாலையின் நிலையை தினமும் பார்த்தும் பார்க்காத போல சென்று வருகின்றார்.
இந்நிலையில், இதே பகுதியில் வசிக்கும் ஒருவர் இரு சக்கர வாகனத்தில் சென்ற போது இருசக்கர வாகனம் கவிழ்ந்து விபத்துக்கு உள்ளானார்கள். இந்த விபத்துகளை நாள் தோறும் பார்த்துக் கொண்டிருந்த அப்பகுதி மக்கள் திடீரென்று இன்று காலை சாலை மறியலில் ஈடுபட்டனர்.
இதனால் கரூர் - திருச்சி தேசிய நெடுஞ்சாலையில் ஒரு மணி நேரம் போக்குவரத்து பாதிக்கப்பட்டது. தமிழக போக்குவரத்துத் துறை அமைச்சர் எம்.ஆர்.விஜயபாஸ்கரை கண்டித்தும், சாலைகளை செப்பனிடாத தனியார் டோல்கேட் நிர்வாகத்தைக் கண்டித்தும், கரூர் மாவட்ட நிர்வாகத்தைக் கண்டித்தும் நடைபெற்ற இந்த சாலை மறியலால் பெரும் பரபரப்பு நிலவியது.
இதை அடுத்து கரூர்- மாயனூர் போலீஸார் சாலை மறியலில் ஈடுபட்ட மக்களுடன் அமைதிப் பேச்சுவார்த்தையில் ஈடுபட்டனர். பின்னர் இப்பிரச்சினைக்கு உரிய தீர்வு காண உறுதுணையாக இருப்பதாகக் கூறியதை அடுத்து அனைவரும் கலைந்து சென்றனர்.