
மதுரை மாவட்டம் அலங்காநல்லூரில் ஜல்லிக்கட்டுப் போட்டி காலை 8 மணிக்கு துவங்கி நடைபெற்று வருகிறது. இதில் பங்கேற்க 1000 காளைகள் பதிவு செய்யப்பட்டன.1241 மாடுபிடி வீரர்கள் இந்தப் போட்டியில் பங்கேற்க முன்பதிவு செய்திருந்தனர். மாடுபிடி வீரர்கள் மற்றும் காளைகளுக்கு மருத்துவப் பரிசோதனை நடைபெற்று, தீவிர பரிசோதனைக்குப் பின்னரே போட்டியில் களம் இறக்கப் பட்டனர். நேற்றைய அசம்பாவிதத்தை அடுத்து, நிர்வாகத்தின் அறிவுறுத்தலின் பேரில், மருத்துவர்கள் தயார் நிலையில் இருந்தனர்.
இந்த ஜல்லிக்கட்டுப் போட்டியில் பல காளைகள் பொலிவுடன் திமிறி ஓடின. குறிப்பாக, அமைச்சர் விஜயபாஸ்கரின் ‘கொம்பன்’ என்ற காளை பலரது கவனத்தையும் பெற்றது.
அலங்காநல்லூர் ஜல்லிக்கட்டுப் போடியில் பங்கேற்றுள்ளன சுகாதாரத்துறை அமைச்சர் விஜயபாஸ்கரின் 2 காளைகள். அவற்றில் கொம்பன் என்ற காளையை, வீரர்கள் யாரும் அடக்கவில்லை.
கொம்பனை 3 முறை அடக்க முயன்றும் வீரர்களுக்கு பிடிகொடுக்காமல் அது சீறிப் பாய்ந்து சென்றது. இதனைக் கண்ட பார்வையாளர்கள் பரவசத்தில் கோஷமிட்டனர்.
அலங்காநல்லூர் ஜல்லிக்கட்டில் காளைகள் முட்டியதில் 11 பேர் காயமடைந்துள்ளனர். காளை உரிமையாளர் ஒருவரையும் காளை முட்டியது. அவர்களுக்கு மருத்துவர்கள் சிகிச்சை அளித்து வருகின்றனர். தொடர்ந்து ஜல்லிக்கட்டுப் போட்டி நடைபெற்று வருகிறது.
மதுரையைப் போல், சிவகங்கை மாவட்டம் காரைக்குடி அருகே சிராவயல் கிராமத்தில் நடைபெற்ற மஞ்சுவிரட்டு நிகழ்ச்சியில் நூற்றுக்கணக்கான காளைகள் மற்றும் மாடுபிடி வீரர்கள் கலந்து கொண்டனர். காளைகள் அவிழ்த்துவிடப்பட்ட போது, பார்வையாளர்களை முட்டியது. இதில் 2 பேர் உயிரிழந்தனர். 50 பேர் வரை காயமடைந்துள்ளனர்.