
மதுரை
மதுரையில், தொடக்க வேளாண்மை கடன் சங்கத்திற்கு தேர்தலை முறையாக நடத்த வேண்டும் என்று வலியுறுத்தி மக்கள் முற்றுகை போராட்டத்தில் ஈடுபட்டதால் பரபரப்பு ஏற்பட்டது.
மதுரை மாவட்டம், திருமங்கலம் வட்டம் செக்கானூரணியில் உள்ள தொடக்க வேளாண்மை கடன் சங்கத்திற்கு முறையாக தேர்தலை நடத்தக்கோரி மக்கள் முற்றுகை போராட்டத்தில் ஈடுபட்டனர்.
அதனைத் தொடர்ந்து செக்காணூரணி காவல் ஆய்வாளரிடம் நடவடிக்கை எடுக்க கோரி மனு அளித்தனர். மேலும் மாவட்ட தேர்தல் நடத்தும் அலுவலரிடமும் முறையிட்டனர்.
இதுகுறித்த அந்த பகுதி மக்கள், "உச்சநீதி மன்ற ஆணைப்படி செக்காணூரயில் உள்ள தொடக்க வேளாண்மை கடன் சங்கத்திற்கு தேர்தல் அறிவிக்கப்பட்டது. அதன்படி தொடர்ந்து உறுப்பினர்கள் வேட்பு மனுதாக்கல் செய்தனர்.
பெறப்பட்ட 27 மனுக்களில் சிலவற்றை தேர்தல் நடத்தும் அதிகாரி முறையான காரணங்களை சொல்லாமல் நிராகரித்தார். இதனைக் கண்டித்தும், முறையான மனுக்களை பரீசிலனை செய்ய கோரியும் சுமார் 300-க்கும் மேற்பட்டோர் வங்கி அலுவலகம் முன்பாக கூடி ஆர்ப்பாட்டம் நடத்துகிறோம்.
இதையும் மீறி நடவடிக்கை மேற்கொள்ளப்படாவிட்டால், தொடர்ந்து பல்வேறு கட்ட போராட்டங்கள் நடத்தப்படும். இதுகுறித்து செக்கானூரணி போலீஸ் இன்ஸ்பெக்டர் எங்களிடம் நடந்தவற்றை விசாரித்து மனுவை பெற்றுக்கொண்டார். தொடர்ந்து கூட்டுறவு சங்க தேர்தலை நடத்தும் மாவட்ட தேர்தல் அலுவலரிடமும் முறையிடப்பட்டுள்ளது" என்று அவர்கள் கூறினர்.