சேலம் விமான நிலைய விரிவாக்கத்துக்கு மக்கள் எதிர்ப்பு; 570 ஏக்கர் நிலம் கேட்டால் போராடாமல் என்ன பண்ணுவாங்க?

First Published Jun 15, 2018, 10:21 AM IST
Highlights
People protest against Salem airport expansion


சேலம் 

570 ஏக்கர் நிலத்தை கையக்கப்படுத்தி சேலம் விமான நிலையத்தை விரிவாக்கம் செய்யும் அரசின் திட்டத்தை எதிர்ப்பு வீடுகளில் கருப்புக்கொடி கட்டி கிராம மக்கள் போராட்டத்தில் ஈடுபட்டனர்.

சேலம் மாவட்டம், ஓமலூரை அடுத்த காமலாபுரத்தில் விமான நிலையம் செயல்பட்டு வருகிறது. இங்கிருந்து தற்போது நாள்தோறும் சென்னைக்கு விமான சேவை நடைபெற்று வருகிறது. 

இந்த நிலையில், 'விமான நிலையத்தை விரிவாக்கம்' செய்ய அரசு நடவடிக்கை எடுத்து வருகிறது. இதற்காக அருகில் உள்ள கிராமங்களில் இருந்து 570 ஏக்கர் நிலம் கையகப்படுத்தப்பட உள்ளது.

இதனால், 'விவசாயம் பாதிக்கப்படும்' சூழ்நிலை உருவாகும் என்றும் 'விமான நிலைய விரிவாக்கத்துக்கு எதிர்ப்பு தெரிவித்தும்' கிராம மக்கள் பல்வேறு போராட்டங்களில் ஈடுபட்டு வருகிறார்கள். 

குறிப்பாக, காமலாபுரம், பொட்டியபுரம், தும்பிப்பாடி, சிக்கனம்பட்டி ஆகிய ஊராட்சிகளை சேர்ந்த விவசாயிகள், கிராம மக்கள் போராட்டங்களை நடத்தி வருகிறார்கள். இவர்களின் போராட்டத்துக்கு பல்வேறு அரசியல் கட்சியினர் ஆதரவு தெரிவித்துள்ளனர்.

இந்த நிலையில், விமான விரிவாக்கம் தொடர்பாக கிராம மக்கள், விவசாயிகளுடன் கருத்து கேட்பு கூட்டம் ஓமலூர், காடையாம்பட்டி தாலுகா அலுவலகத்தில் கடந்த 6-ஆம் தேதி முதல் நேற்று முன்தினம் வரை நடைபெற்றது. 

மாவட்ட வருவாய் அதிகாரி சுகுமார் மற்றும் மேட்டூர் உதவி ஆட்சியர் (பொறுப்பு) ராமதுரை முருகன் ஆகியோர் தலைமையில் நடந்த இந்தக் கூட்டத்தில் எந்தவித சமரச உடன்பாடும் ஏற்படவில்லை. 

இந்தக் கூட்டத்தில், 'விமான நிலைய விரிவாக்கத்துக்கு நிலத்தை கொடுக்க மாட்டோம்' என்று விவசாயிகள் திட்டவட்டமாக தெரிவித்துவிட்டனர்.

இதனிடையே விமான நிலைய விரிவாக்கத்துக்கான பணிகளை அதிகாரிகள் தீவிரப்படுத்தி வருகின்றனர். இதனைக் கண்டித்தும், விமான நிலைய விரிவாக்கத்துக்கு எதிர்ப்பு தெரிவித்தும், நேற்று காமலாபுரம், பொட்டியபுரம், தும்பிப்பாடி, சிக்கனம்பட்டி ஆகிய 4 ஊராட்சிகளில் தங்களது வீடுகளில் கிராம மக்கள் கருப்புக்கொடி கட்டி போராட்டத்தில் ஈடுபட்டனர்.

இதுகுறித்து கிராம மக்கள், "விமான நிலைய விரிவாக்கத்தால் எங்களது வாழ்வாதாரம் பாதிக்கப்படும் நிலை உள்ளது. எனவே, இதனை கைவிடும் வரை எங்களது போராட்டம் அறவழியில் தொடரும்" என்று திட்டவட்டமாக தெரிவித்தனர்.

click me!