
திருநெல்வேலி
தூத்துக்குடியில் காவலர்கள் துப்பாக்கி சூடு நடத்தி 13 பேரை கொன்றதை கண்டித்து திருநெல்வேலியின் பல்வேறு பகுதிகளில் மக்கள், அரசியல் கட்சியினர், விவசாயிகள் ஆர்ப்பாட்டம், சாலை மறியல் போன்ற போராட்டங்களில் ஈடுபட்டனர்.
தூத்துக்குடியில் காவலர்கள் துப்பாக்கி சூடு நடத்தி 13 பேரை கொன்றதை கண்டித்தும், ஸ்டெர்லைட் ஆலையை நிரந்தரமாக மூட வேண்டும் என்றும் திருநெல்வேலி மாவட்டத்தில் பல்வேறு இடங்களில் மக்கள் நேற்று ஆர்ப்பாட்டம், சாலை மறியல் போராட்டங்களில் ஈடுபட்டனர்.
அதன்படி, ஏர்வாடி வடக்கு பிரதான சாலை சூசையப்பர் கெபி அருகில் இருந்து திரளான மக்கள் கருப்பு கொடி ஏந்தியவாறு, ஊர்வலமாக ஏர்வாடி பேருந்து நிறுத்தத்துக்கு சென்றனர்.
அதனைத் தொடர்ந்து அங்கு மக்கள் ஸ்டெர்லைட் ஆலையை மூடக்கோரி முழக்கம் எழுப்பியவாறு ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர்.
ஊர் தலைவர் வளன் அரசு, கிழக்கு மாவட்ட காங்கிரஸ் பொருளாளர் ஜெர்மான்ஸ், வழக்கறிஞர் மோசஸ் உள்பட திரளானவர்கள் கலந்து கொண்டனர்.
இதேபோன்று ஆலங்குளம் காமராஜர் சிலை முன்பு இளைஞர்கள், மக்கள் நேற்று காலையில் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர். தூத்துக்குடியில் நடந்த துப்பாக்கி சூட்டை கண்டித்து முழக்கம் எழுப்பப்பட்டது.
ஸ்டெர்லைட் ஆலையை நிரந்தரமாக மூட வேண்டும் என்று வலியுறுத்தி, விழிப்புணர்வு வாசகங்கள் எழுதிய பதாகைகளை ஏந்தியவாறு, இளைஞர்கள் ஆர்ப்பாட்டத்தில் கலந்து கொண்டனர்.
தொழிலாளர்கள், விவசாயிகள், விவசாய தொழிலாளர்கள், இளைஞர்கள், மாணவர்கள், மாதர் சங்கங்கள், மத்திய அரசு ஊழியர்கள் உள்ளிட்ட பல்வேறு சங்கங்கள் இணைந்து தமிழக மக்கள் மேடை என்ற புதிய அமைப்பு உருவாக்கப்பட்டது. இந்த அமைப்பின் நெல்லை மாவட்டம் சார்பில் நேற்று நெல்லை சந்திப்பு இரயில் நிலையம் முன்பு ஆர்ப்பாட்டம் நடந்தது.
சி.ஐ.டி.யு. மாவட்ட செயலாளர் மோகன் தலைமை தாங்கினார். தொழிற்சங்க நிர்வாகிகள் நல்லதம்பி, கணேசன் ஆகியோர் முன்னிலை வகித்தனர். காவிரி மேலாண்மை வாரியம் அமைக்க வேண்டும், ஸ்டெர்லைட் ஆலையை நிரந்தரமாக மூட வேண்டும் என்பன உள்ளிட்ட பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி இந்த ஆர்ப்பாட்டம் நடந்தது.
நெல்லை சந்திப்பு சிந்துபூந்துறையில் கம்யூனிஸ்டு, காங்கிரஸ், ம.தி.மு.க. உள்ளிட்ட பல்வேறு அரசியல் கட்சிகள் சார்பில் ஆர்ப்பாட்டம் நடத்தினார்கள். ஆர்ப்பாட்டத்திற்கு மார்க்சிஸ்ட்டு கம்யூனிஸ்டு மாவட்ட செயலாளர் பாஸ்கரன் தலைமை தாங்கினார்.
ம.தி.மு.க. மாவட்ட செயலாளர் தி.மு.ராஜேந்திரன் ஆர்ப்பாட்டத்தை தொடங்கி வைத்து பேசினார். இதில் கலந்து கொண்டவர்கள் கோரிக்கையை வலியுறுத்தியும், மத்திய – மாநில அரசை கண்டித்தும் முழக்கங்கள் எழுப்பினர்.