ஸ்டெர்லைட் ஆலையில் இருந்து வெளியேறிய வடமாநில தொழிலாளர்கள்; மூட்டை கட்டிக்கொண்டு சொந்த ஊருக்கு பயணம்... 

First Published May 24, 2018, 10:58 AM IST
Highlights
North indian workers leaving from Sterlite plant Traveling to their hometown


திருநெல்வேலி
 
தூத்துக்குடி ஸ்டெர்லைட் ஆலையில் வேலை செய்துவந்த வடமாநில தொழிலாளர்கள் மூட்டை முடிச்சுகளை  கட்டிக்கொண்டு தங்களது சொந்த ஊருக்கு கிளம்பினர்.

தூத்துக்குடி ஸ்டெர்லைட் ஆலையை நிரந்தரமாக மூட வேண்டும் என்று வலியுறுத்தி அந்தப் பகுதி மக்கள் தொடர்ந்து போராட்டம் நடத்தி வருகின்றனர். 

நேற்று முன்தினம் தூத்துக்குடியில் நடந்த பேரணியில், காவலாளர்கள் நடத்திய துப்பாக்கி சூட்டில் இதுவரை 13 பேர் பலியானார்கள். மேலும், பலர் காயமடைந்து தூத்துக்குடி, நெல்லை அரசு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு சிகிச்சை பெற்று வருகின்றனர். இதனால் அந்த பகுதியில் பதற்றம் நீடிக்கிறது.

இந்த நிலையில், அந்த ஆலையில் வேலை செய்யும் வடமாநில தொழிலாளர்கள் மூன்று லாரிகளில் மூட்டை முடிச்சுகளுடன் திருநெல்வேலி சந்திப்பு இரயில் நிலையம் வந்தனர்.

அப்போது அந்த தொழிலாளர்கள, "மேற்கு வங்காள மாநிலம் கொல்கத்தா மற்றும் அதை சுற்றியுள்ள கிராமங்களைச் சேர்ந்தவர்கள் சில மாதங்களுக்கு முன்பு தூத்துக்குடி ஸ்டெர்லைட் ஆலை விரிவாக்க பணிக்காக வந்தோம். 

மொத்தம் 400 பேர் வேலைக்காக வந்தோம். ஒரு நாளைக்கு ரூ.350 சம்பளம் கொடுத்து ஒப்பந்த அடிப்படையில் பணியாற்றி வந்தோம். அங்கேயே சமைத்து சாப்பிட்டு விட்டு தங்கி வேலை செய்தோம்.

ஆனால், ஸ்டெர்லைட் ஆலையை மூட வேண்டும் என்று மக்கள் தொடர்ந்து போராட்டம் நடத்தி வருகிறார்கள். தற்போது அந்த போராட்டம் தீவிரமடைந்துள்ளதால் சில நாட்கள் வேலை இல்லாமல் இருந்தோம். இங்கு நடந்த துப்பாக்கி சூட்டில் 13 பேர் இறந்தனர்.

போராட்டம் தீவிரமடைந்து வருவதால் எங்களுக்கு இனி வேலை கிடைக்கும் என்ற நம்பிக்கையை இழந்துவிட்டோம். அதனால் சொந்த ஊருக்கு திரும்புகிறோம்" என்று அவர்கள் தெரிவித்தனர்.

பின்னர் அந்த தொழிலாளர்கள் திருநெல்வேலி விரைவு, கன்னியாகுமரி விரைவு ரெயில்களின் ஏறி சென்னைக்கு புறப்பட்டனர். அங்கிருந்து இரயில்களில் தங்களது ஊருக்கு செல்ல அவர்கள் திட்டமிட்டுள்ளனர். 

click me!