தமிழக அரசின் நலத்திட்ட உதவிகளை தகுதி வாய்ந்த பயனாளிகளுக்கு வழங்க வேண்டும் - அரசு செயலர் அறிவுரை...

First Published May 24, 2018, 10:17 AM IST
Highlights
provide Tamilnadu schemes to qualified beneficiaries - Government Secretary


தேனி 

தமிழக அரசால் வழங்கப்பட்டு வரும் அரசின் நலத்திட்ட உதவிகள் தகுதி வாய்ந்த பயனாளிகளுக்கு வழங்கிடும் வகையில் ஒருங்கிணைந்து பணியாற்ற வேண்டும் என்று தேனியில் அரசு செயலர் கார்த்திக் தெரிவித்தார்.

தேனி மாவட்டத்தில், தமிழக அரசால் செயல்படுத்தப்பட்டு வரும் திட்டங்கள், வளர்ச்சி பணிகளின் முன்னேற்றம் குறித்து அனைத்துத்துறை அலுவலர்களுடனான ஆய்வுக்கூட்டம் மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் நேற்று நடந்தது. 

இந்தக் கூட்டத்துக்கு பிற்படுத்தப்பட்டோர் மற்றும் சிறுபான்மையினர் நலத்துறை அரசு செயலரும், தேனி மாவட்டத்துக்கான கண்காணிப்பு அலுவலருமான கார்த்திக் தலைமை தாங்கினார். மாவட்ட ஆட்சியர் பல்லவி பல்தேவ் முன்னிலை வகித்தார்.

இந்தக் கூட்டத்தில், வேளாண்மைத்துறையின் சார்பில் விவசாயிகளுக்கு வழங்கப்பட்டுள்ள விதைகள் மற்றும் உரங்களின் நிலவரம், இருப்பு நிலை, விவசாயிகளுக்கு வழங்கப்பட்ட இடுபொருட்கள், 

எந்திர தளவாடங்கள் குறித்தும், கால்நடை பராமரிப்புத்துறையின் மூலம் கோழி வளர்ப்பு மற்றும் பால் பண்ணை அமைப்பதற்காக மேற்கொள்ளப்பட்ட பணிகள், நபார்டு வங்கி உதவியுடன் மேற்கொள்ளப்பட்ட திட்டங்கள், 

ஆவின் மூலம் ஏற்படுத்தப்பட்ட சங்கங்களின் விவரங்கள், பால் உற்பத்தி, கூட்டுறவுத்துறையின் சார்பில் குறுகிய, மத்திய காலக்கடன் வழங்கப்பட்ட விவரங்கள், வேளாண் கடனுதவி வழங்கப்பட்ட விவரங்கள், பொது சேவை மையங்கள், கூட்டுறவு மற்றும் அம்மா மருந்தகங்கள், 

பொது வினியோகத்திட்ட செயல்பாடுகள், வருவாய்த்துறையின் மூலம் வழங்கப்பட்ட மாதாந்திர உதவித்தொகை, கல்வி உதவித்தொகை போன்ற பல்வேறு திட்டங்கள் குறித்து ஆய்வு நடத்தினார்.

இந்தக் கூட்டத்தில் அரசு செயலர் கார்த்திக் பேசும்போது, "தமிழக அரசால் வழங்கப்பட்டு வரும் அரசின் நலத்திட்ட உதவிகள் தகுதி வாய்ந்த பயனாளிகளுக்கு வழங்கிடும் வகையில் ஒருங்கிணைந்து பணியாற்றிட வேண்டும். 

ஒவ்வொரு துறையினரும் மற்ற துறை அலுவலர்களுடன் கலந்து ஆலோசித்து ஒருமித்து செயல்படும்போது அரசு திட்டங்களின் பயன்கள் விரைந்து பயனாளிகளை சென்றடையும். 

மக்களுக்கு தட்டுப்பாடின்றி சீரான முறையில் குடிநீர் விநியோகம் செய்ய வேண்டும். மாவட்டத்தில் மேற்கொள்ளப்பட்டு வரும் வளர்ச்சி திட்ட பணிகளை விரைந்து முடித்திட அலுவலர்கள் சிறப்பான முறையில் பணியாற்ற வேண்டும்" என்று அவர் தெரிவித்தார். 

இந்தக் கூட்டத்தில் மாவட்ட வருவாய் அலுவலர் கந்தசாமி, மாவட்ட ஊரக வளர்ச்சி முகமை திட்ட இயக்குனர் திலகவதி, வேளாண்மைத்துறை இணை இயக்குனர் முகமது அப்துல்நசீர் மற்றும் அரசின் பல்வேறு துறை அலுவலர்கள் பங்கேற்றனர்.
 

click me!