குடிக்க தண்ணீர் இல்லாமல் எவ்வளவு கஷ்டப்படுகிறோம் தெரியுமா? மறியலில் ஈடுபட்ட மக்கள் குமுறல்...

First Published Aug 7, 2018, 2:23 PM IST
Highlights

ஈரோட்டில் முறையாக தண்ணீர் விநியோகம் செய்யப்படாததால் கிராம மக்கள் சாலை மறியலில் ஈடுபட்டனர். 

ஈரோடு மாவட்டம், சத்தியமங்கலம், கொமராயனூர் ஊராட்சிக்குட்ப்பட்டவை இந்திரா நகர் மற்றும் வி.என்.எஸ்.நகர். இந்தப் பகுதி மக்களுக்கு பவானி ஆற்று நீர் மேல்நிலைத் தொட்டிக்கு ஏற்றப்பட்டு குழாய் வழியாக விநியோகிக்கப்பட்டது. இந்த தண்ணீர் கடந்த சில வாரங்களாக முறையாக விநியோகிக்கப்படவில்லை.

இதுகுறித்து இப்பகுதி மக்கள் பலமுறை  புகார் கொடுத்தும் மாநகராட்சி நிர்வாகம் நடவடிக்கை எடுக்கவில்லை. தண்ணீர் இல்லாமல் மிகுந்த சிரமப்பட்டு வந்த மக்கள் தண்ணீரை காசு கொடுத்தும் அவல நிலைக்கு தள்ளப்பட்டுள்ளனர்.

இதனால் ஆத்திரமடைந்த கிராம மக்கள், நேற்று சத்தியமங்கலம் - அத்தாணி சாலையில் வெற்றுக் குடங்களுடன் திரண்டு மறியல் போராட்டத்தில் ஈடுபட்டனர். இதனால் அங்கு ஒரு மணிநேரத்திற்கும் மேலாக போக்குவரத்து பாதிக்கப்பட்டது.

போராட்டம் குறித்து தகவலறிந்து சம்பவ இடத்திற்கு வந்தனர் சத்தியமங்கலம் காவல் உதவி ஆய்வாளர் பன்னீர் செல்வம் மற்றும் காவலாளர்கள். இவர்கள் போராட்டத்தில் ஈடுபட்டவர்களிடம் பேச்சுவார்த்தை நடத்தினர். 

அப்போது அவர்கள், "எட்டு நாட்களுக்கு ஒருமுறைதான் தண்ணீர் விநியோகம் செய்கிறார்கள். நாங்கள் அத்தியாவசியத்திற்கு கூட தண்ணீர் இல்லாமல் பெரும் சிரமம் அடைந்து வருகிறோம்" என்று குமுறிய மக்கள், "வட்டார வளர்ச்சி இங்கு வந்து இதற்கு தீர்வு சொன்னால்தான் போராட்டத்தை கைவிடுவோம்" என்று திட்டவட்டமாக தெரிவித்தனர்.

இதனைத் தொடர்ந்து சத்தியமங்கலம் வட்டார வளர்ச்சி அலுவலர் மூர்த்தி சம்பவ இடத்திற்கு வரவழைக்கப்பட்டார். அவர் பொதுமக்களிடம், "குடிநீர் குழாய்கள் உடைந்ததால் இந்த பிரச்சனை ஏற்பட்டுள்ளது. இன்னும் நான்கு நாட்களில் குடிநீர் குழாய்கள் சரிசெய்யப்பட்ட சீராக குடிநீர் விநியோகம் செய்யப்படும்" என்று உறுதியளித்தார். 

அதனையேற்றுக் கொண்ட மக்கள் தங்களது போராட்டத்தைக் கைவிட்டு அங்கிருந்து அமைதியாக கலைந்து சென்றனர். 

click me!