அமர்நாத் யாத்திரை சென்ற தமிழர்கள் 21 பேர் பனிமலையில் சிக்கி தவித்து வருகிறார்கள். தங்களை உடனடியாக மீட்க வேண்டும் என அவர்கள் கண்ணீர் மல்க கோரிக்கை விடுத்துள்ளனர்
சென்னை தாம்பரத்தைச் சேர்ந்த சங்கர் (77) என்பவர், அடிக்கடி புனித யாத்திரைகளுக்கு கோயில் கோயிலாக சென்று வருபவர். மேலும், ஆன்மீக சுற்றுலா என்ற பெயரில் வட இந்தியாவில் பல மாநிலங்களில் உள்ள ஆன்மீக தளங்களை காண சுற்றுலா ஏற்பாடுகளையும் செய்து வருகிறார். இதற்காக வாட்ஸ் அப் குழு ஒன்றை அமைத்து அதன் மூலமாக தமிழகத்திலிருந்து பல்வேறு நபர்களை அழைத்துச் சென்று வருகிறார்.
ஒடிசா ரயில் விபத்து: ரயில்வே ஊழியர்கள் 7 பேர் பணியிடை நீக்கம்!
அதன்படி கடந்த ஜூலை 4 ஆம் தேதி சங்கர் தலைமையில் தமிழகத்தைச் சேர்ந்த சுமார் 21 பேர் கொண்ட யாத்திரை குழுவினர்கள் சென்னையில் இருந்து ரயில் மூலமாக காஷ்மீரில் உள்ள பால்டால் பகுதிக்கு 7ஆம் தேதி சென்றடைந்தனர். அதன்பின்னர், அங்கிருந்து 14 கிலோ மீட்டர் தூரத்தில் உள்ள அமர்நாத் பணிலிங்கம் கோயிலில் தரிசனம் செய்ய கடும் மழை குளிரையும் பொருட்படுத்தாமல் சாலையில் நடந்து சென்று பணி லிங்கத்தை தரிசித்துள்ளனர். அன்று இரவு கோயிலில் தங்கிய அவர்கள், மறுநாள் 8ஆம் தேதி புறப்பட்டு 14 கிலோ மீட்டர் நடந்து கீழே இறங்கி பால்டால் பகுதிக்கு வந்தடைந்தனர்.
இதையடுத்து, நடைபயனமாக ஸ்ரீநகருக்கு புறப்பட்ட அவர்களை வழி மறித்த சி.ஆர் பி.எப் போலீசார், “ஸ்ரீநகருக்கும், காஷ்மீருக்கும் இடையில் நிலச்சரிவு ஏற்பட்டு அப்படியே மூடி விட்டது; பாதை முற்றிலும் இல்லை; நீங்கள் யாரும் செல்ல முடியாது; பாதை இல்லாததால் இங்கேயே தங்குங்கள்.” என எச்சரித்துள்ளனர். மேலும், மணிகாம்ப் என்ற முகாம் இடத்தில் அவர்கள் தங்க வைக்கப்பட்டுள்ளனர்.
இந்த நிலையில், தங்களை உடனடியாக மீட்க வேண்டும் என அவர்கள் கண்ணீர் மல்க கோரிக்கை விடுத்துள்ளனர். கடந்த நான்கு நாட்களாக சோறு தண்ணீர் இல்லாமல் அடைத்து வைத்துள்ளதாக கண்ணீர் மல்க தெரிவிக்கும் அவர்கள், பனிமலையில் நிலச்சரிவு ஏற்பட்டு சாலைகள் முழுவதும் சேதம், அடைந்து தமிழகம் வர முடியாமல் சிக்கித் தவிக்கும் தங்களை மீட்க முதல்வர் நடவடிக்கை எடுக்க கோரி வீடியோ வெளியிட்டு கோரிக்கை விடுத்துள்ளனர்.
அமர்நாத் புனித யாத்திரைக்கு சென்ற தமிழகர்கள் 21 பேர் பணி மலையில் சிக்கி தவித்து வருவது பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. இந்த விவகாரத்தில் தமிழக அரசு உடனடியாக தலையிட்டு அவர்களை மீட்க நடவடிக்கை எடுக்க வேண்டும் எனவும் வேண்டுகோள் விடுக்கப்படுகிறது.