ராமேஸ்வரம் அக்னி தீர்த்த கடலில் கழிவுநீர் கலப்பது தொடர்பான குற்றச்சாட்டுக்கு நகராட்சி நிர்வாகம், நீர் வளங்கள் துறை செயலர், ராமநாதபுரம் மாவட்ட ஆட்சியர், ராமேஸ்வரம் சிவன் கோயில் இணை ஆணையர் ஆகியோர் தரப்பில் பதில் மனு தாக்கல் செய்ய உயர்நீதிமன்ற மதுரைக்கிளை உத்தரவு பிறப்பித்துள்ளது.
ராமநாதபுரம் பகுதியைச் சேர்ந்த மார்க்கண்டன் உயர்நீதிமன்ற மதுரைக்கிளையில் பொதுநல மனு ஒன்றை தாக்கல் செய்திருந்தார். அதில், ராமேஸ்வரத்தில் பழமையான சிவன் கோவில் தீர்த்தங்கள் கங்கை தீர்த்தத்திற்கு சமமானது எனக் கூறப்படுகிறது. ராமேஸ்வரம் பகுதியில் உள்ளே மற்றும் வெளியே 64 தீர்த்தங்கள் உள்ளது. இவற்றில், அக்னி தீர்த்தம் கோயிலின் வெளியே உள்ள கடல் பகுதியை குறிக்கும்.
ராமேஸ்வரத்தில் உள்ள தீர்த்தத்தில் குளிப்பதற்காக இந்தியா முழுவதும் இருந்து தினந்தோறும் ஆயிரக்கணக்கில் பக்தர்கள் வந்து செல்கின்றனர். ஆனால், ராமேஸ்வரம் கோயில் அருகே உள்ள அக்னி தீர்த்தம் கடல் பகுதியில் சாக்கடைகள், குப்பைகள் மற்றும் பல்வேறு கழிவுகள் கொட்டப்படுகிறது. இதனால், ராமேஸ்வரம் கடற்கரை பகுதியில் சுற்றுச்சூழல் பாதிப்பு ஏற்படுகிறது.
ராமேஸ்வரம் பகுதியில் பாதாள சாக்கடை அமைக்க ரூ.52.60 கோடி ஒதுக்கப்பட்டது. 7 வருடங்கள் ஆகியும் இதுவரை 50% பணிகள் நடைபெற்று, தற்போது பணிகள் நடைபெறாமல் உள்ளது. இது குறித்து பல முறை மனு அளித்தும் அதிகாரிகள் எந்த நடவடிக்கையும் எடுக்கவில்லை. எனவே, ராமேஸ்வரம் கோயில் அருகே உள்ள அக்னி தீர்த்தம் கடல் பகுதியில் சாக்கடை,, குப்பைகள் மற்றும் பல்வேறு கழிவுகள் கலப்பதை தடுத்து உரிய நடவடிக்கை எடுக்க சம்மந்தப்பட்ட அதிகாரிகளுக்கு உத்தரவிட வேண்டும்'' என மனுவில் கூறியிருந்தார்.
அலர்ட் !! நாளை மறுநாள் சென்னையில் இலவச வேலைவாய்ப்பு முகாம்.. தெரிந்துக் கொள்ள வேண்டியவை..
இந்த மனு நீதிபதிகள் மகாதேவன், சத்தியநாராயண பிரசாத் அமர்வு முன்பு விசாரணைக்கு வந்தது.
மனுதாரர் தரப்பில் புகைப்படத்துடன் கூடிய ஆதாரங்களும் தாக்கல் செய்யப்பட்டு இருந்தது. இத்துடன் தொடர்புடைய மற்றொரு வழக்கில். வழக்கறிஞர் ஆணையம் நியமனம் செய்து அறிக்கை தாக்கல் செய்யப்பட்டுள்ளது. வங்காள விரிகுடா கடலில் சாக்கடை தண்ணீர் கலப்பதை தடுக்க பல்வேறு வழிமுறைகள் கொடுக்கப்பட்டுள்ளது என தெரிவிக்கப்பட்டு இருந்தது.
இதனையடுத்து நீதிபதிகள், இதனை சரி செய்ய யார் நடவடிக்கை எடுக்க வேண்டும்? பல்வேறு நாடுகள் மற்றும் மாநிலங்களிலிருந்து ராமேஸ்வரம் கோயிலுக்கு மக்கள் வந்து செல்கின்றனர். ராமேஸ்வரம் அக்னி தீர்த்தம் பகுதியில் சாக்கடை கலப்பதை தடுக்க மாவட்ட நிர்வாகம் முறையான நடவடிக்கை மேற்கொள்ளவில்லை.
இந்தியா முழுவதிலும் இருந்து தீர்த்தத்தில் குளிக்க வருகிறார்களா? கழிவுநீரில் குளிக்க வருகின்றார்களா? என கேள்வி எழுப்பினர். உடனடியாக நடவடிக்கை மேற்கொண்டால்தான் இந்தப் பிரச்சனைக்கு தீர்வு ஏற்படும் என கருத்து தெரிவித்தனர்.
வழக்கறிஞர் ஆணையம் தாக்கல் செய்த அறிக்கையை முழுமையாக தாக்கல் செய்யவும், வழக்கு குறித்து நகராட்சி நிர்வாகம், நீர் வளங்கள் துறை செயலர், ராமநாதபுரம் மாவட்ட ஆட்சியர், ராமேஸ்வரம் சிவன் கோயில் இணை ஆணையர் தரப்பில் பதில் மனு தாக்கல் செய்ய உத்தரவிட்டு வழக்கு விசாரணையை ஒரு வாரத்திற்கு நீதிபதிகள் ஒத்தி வைத்தனர்.