
புதுக்கோட்டை
கீரமங்கலம் பேரூராட்சி பகுதியில் நிலவும் குடிநீர் பிரச்சனையைத் தீர்க்கக் கோரி வெற்றுக் குடங்களுடன் ஆலங்குடி தொகுதி எம்.எல்.ஏ. மெய்யநாதன் தலைமையில் மக்கள் ஆர்ப்பாட்டம் நடத்தினர்.
புதுக்கோட்டை மாவட்டத்தைச் சேர்ந்தது கீரமங்கலம் பேரூராட்சி.
இந்தப் பகுதிக்கு போதுமான குடிநீர் கிடைக்காததால் மக்கள் பெரும் அவதியடைகின்றனர். மேலும், அடிக்கடி மின்வெட்டு வேறு. இதனால், ஆழ்குழாய் கிணறுகளில் இருந்து தண்ணீர் கிடைப்பதிலும் சிக்கல் ஏற்பட்டுள்ளது.
இந்நிலையில் பேரூராட்சிப் பகுதியில் ஏற்பட்டுள்ள குடிநீர் பிரச்சனைக்கு தீர்வு காண வேண்டும் என்று வலியுறுத்தி அப்பகுதியைச் சேர்ந்த மக்கள் நேற்று திடீரென பேருந்து நிலையம் அருகே வெற்றுக் குடங்களுடன் சாலை மறியல் போராட்டம் நடத்தலாம் என முடிவு செய்திருந்தனர்.
அதேபோன்று பேருந்து நிலையமும் வந்தனர். ஆனால், போராட்டம் நடத்துவதற்கு முன்பே, இதுகுறித்து தகவலறிந்த அலுவலர்கள் மற்றும் காவலாளர்கள் நிகழ்விடத்திற்கு வந்து மக்களிடம் பேச்சுவார்த்தை நடத்தினர்.
இதனைத் தொடர்ந்து சாலை மறியல் போராட்டம் கைவிடப்பட்டது.
ஆனால், ஆர்ப்பாட்டம் நடத்தினர். இந்த ஆர்ப்பாட்டத்திற்கு ஆலங்குடி தொகுதி எம்.எல்.ஏ. மெய்யநாதன் தலைமை வகித்தார்.
இந்த ஆர்ப்பாட்டத்தின்போது, “தடையின்றி குடிநீர் வழங்க வேண்டும்,
பேரூராட்சி மக்களுக்கும் 100 நாள் வேலை வழங்க வேண்டும்,
தடையின்றி மின்சாரம் வழங்க வேண்டும்” உள்ளிட்ட பல்வேறு கோரிக்கைகள் குறித்து முழக்கங்களை எழுப்பினர்.
இந்த ஆர்ப்பாட்டத்தில் பங்கேற்ற எம்.எல்.ஏ. மெய்யநாதன் பேசியது:
“கீரமங்கலம் பேரூராட்சிக்கு பல ஆண்டுகளாக மாவட்ட நிர்வாகம் நிதி ஒதுக்கவில்லை. ஏன் இந்த பாரபட்சம்? என்பது தெரியவில்லை. இப்பகுதியில் நிலவும் குடிநீர் பிரச்சனையை தீர்க்க உடனடியாக ரூ.50 இலட்சம் நிதி ஒதுக்க வேண்டும்.
மேலும், காலம் கடத்தினால் கீரமங்கலம் பேரூராட்சி மக்களுடன் சென்று மாவட்ட ஆட்சியர் வீட்டை முற்றுகையிடும் போராட்டம் நடத்துவோம்” என்றார்.
இந்த ஆர்ப்பாட்டத்தில் முன்னாள் எம்.எல்.ஏ. ராஜசேகரன், விவசாயிகள் சங்க மாவட்ட செயலாளர் மாதவன், மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்டு கட்சி சலோமி, காங்கிரஸ் சுந்தரம், தி.மு.க. நகர செயலாளர் சிவக்குமார் உள்பட பலர் பங்கேற்றனர்.