
புதுக்கோட்டை
மத்திய, மாநில அரசுகளை கல்லாய் பாவித்து அதனிடம் ஐட்ரோகார்பன் எடுக்கும் திட்டத்தை ரத்துச் செய்ய வேண்டும் என்று மனு கொடுத்து நெடுவாசல் மக்கள் போராட்டம் நடத்தினர்.
புதுக்கோட்டை மாவட்டம், கீரமங்கலம் அருகில் உள்ளது நெடுவாசல் கிராமம். இங்கு ஐட்ரோகார்பன் எடுக்க மத்திய அரசு கடந்த பிப்ரவரி மாதம் ஒப்புதல் வழங்கியது.
இந்தத் திட்டத்தை உடனே ரத்து செய்ய வேண்டும் என்று வலியுறுத்தி, அப்பகுதி விவசாயிகள், பெண்கள், இளைஞர்கள் என அனைவரும் தங்களது இரண்டாவது கட்டப் போராட்டத்தை தொடங்கி 23-வது நாளாக நடத்தி வருகின்றனர்.
ஒவ்வொரு நாளும், ஒவ்வொரு விதமான போராட்டத்தை நடத்தி மத்திய, மாநில அரசுகளின் கவனத்தை ஈர்க்க முயற்சிக்கின்றனர். ஆனால், மத்திய அரசும் இதைப் பற்றி சிந்திக்க மறுக்கிறது. மாநில அரசோ, பிரிந்த சகோதரர்களை இணைக்கும் முயற்சியில் தீவிரமாக இருப்பதால் அதற்கு சிந்திக்க நேரமில்லை.
நேற்று நடந்தப் போராட்டத்தில் பங்கேற்றவர்கள் ஐட்ரோகார்பன் திட்டத்தை ரத்து செய்ய வலியுறுத்தி, மத்திய, மாநில அரசுகளுக்கு எதிராக பல்வேறு முழக்கங்களை எழுப்பினர்.
இதனைத் தொடர்ந்து மூன்று கற்களை போராட்ட களத்தில் ஊன்றி, அதில் மத்திய அரசு, மாநில அரசு, மாவட்ட நிர்வாகம் என்று எழுதப்பட்ட பதாகைகளை தொங்க விட்டனர்.
பின்னர், ஐட்ரோ கார்பனுக்கு எதிராக முழக்கமிட்டவாறே, கலப்பை, மண்வெட்டி உள்ளிட்ட விவசாயக் கருவிகளுடன் வந்த விவசாயிகள் அந்த மூன்று கற்களிடமும் ஐட்ரோகார்பன் திட்டத்தை ரத்து செய்ய வேண்டும் என்று மனு கொடுத்தனர்.